மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியை எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்று போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியை எப்படியாவது ஒழிக்கவேண்டும் என்று போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்கிறார்கள்!

இதனைக் கடுமையாக - வெளிப்படையாக மக்களுக்கு விளங்கும்படியாக எழுதக்கூடிய ஒரே ஏடு ‘விடுதலை’

நாடெங்கும் ‘விடுதலை’ ஏடு பரவினால்தான் உண்மைகள் நாட்டு மக்களிடம் போய்ச் சேரும்!

ஆத்தூர்  கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

ஆத்தூர், ஆக.29  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியை, எப்படியாவது குறுக்கு வழியில் செயல்பட்டு ஒழிக்கவேண்டும் என்றும், ஒரு போட்டி அரசாங்கம் நடத்தவேண்டும் என்றும் முயற்சி செய்கிறார்கள். இதனை கடுமையாக, வெளிப்படையாக, மக்களுக்கு விளங்கும்படியாக எதிர்த்து எழுதக்கூடிய ஒரே ஏடு ‘விடுதலை’ தான் என்ற நிலையில், இந்த ஏடு பரவினால்தான் உண்மைகள் நாட்டு மக்களிடம் போய்ச் சேரும்என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஆத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடல்

கடந்த 14.8.2022 அன்று காலை 10 மணியளவில் 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தா திரட்டுவது குறித்து சேலம் ஆத்தூரில் நடைபெற்ற ஆத்தூர், சேலம், மேட்டூர், கல்லக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அருமைத் தோழர்கள் சேலம், மேட்டூர், ஆத்தூர், கல்லக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்த கழகப் பொதுச்செயலாளர் மானமிகு இரா.ஜெயக்குமார் அவர்களே,

மாநில அமைப்பாளர் மானமிகு இரா.குணசேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் தோழர் ஊமை.ஜெயராமன் அவர்களே, மண்டல தலைவர் சிந்தா மணியூர் கவிஞர் சுப்பிரமணியன் அவர்களே, பொதுக் குழு உறுப்பினர் தோழர் பழனி.புள்ளையண்ணன் அவர்களே, மண்டல செயலாளர் தோழர் விடுதலை சந்திரன் அவர்களே, சேலம் மாவட்ட கழகக் காப்பாளர் அய்யா ஜவகர் அவர்களே, மேட்டூர் மாவட்டத் தலைவர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே, விழுப்புரம் மண்டல தலைவர் கோ.சா.பாஸ்கர் அவர்களே,

சேலம் மாவட்டத் தலைவர் தோழர் இளவழகன் அவர்களே, சேலம் மாவட்ட செயலாளர் தோழர் வைரம் அவர்களே, மேட்டூர் மாவட்டச் செயலாளர் தோழர் பாலு அவர்களே, ஆத்தூர் மாவட்டச் செயலாளர் தோழர்  சேகர் அவர்களே, கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் தோழர் சுப்பராயன் அவர்களே, மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர்ராஜன் அவர்களே, மாநில மருத்துவரணி செயலாளர் தோழர் கோ.சா.குமார் அவர்களே, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேசு அவர்களே, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன் அவர்களே, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மானமிகு தமிழ்ச்செல்வன் அவர்களே, மண்டல இளைஞரணி செயலாளர் தோழர் வேல்முருகன் அவர்களே, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவுத் தலை வர் தோழர் அழகிரிசாமி அவர்களே, கல்வி தாளாளர் அய்யா சுந்தரம் அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்ற அருமைத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் வெங்கேடசன் அவர்களே,  பகுத்தறிவாளர் கழக கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி அவர்களே, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொறுப்பாளர் அருமைத் தலைவர் தோழர் நேரு அவர்களே, துணைத் தலைவர் தோழர் கவிதா அவர்களே, மற்றும் இங்கே வருகை புரிந்துள்ள அனைத்து நண்பர்களே, இயக்க உறவுகளே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் 10 நாள்கள்தான் நாம் நிர்ணயித்த இலக்கை நோக்கி, அதனை முடித்து நிகழ்ச்சியை நடத்தவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

நன்றி -  பாராட்டு - மகிழ்ச்சி!

இதுவரையில் கடுமையாக உழைத்திருக்கின்றீர்கள். அதற்காக என்னுடைய தலைதாழ்ந்த நன்றியையும், பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள் கின்றேன்.

ஆனால், வெண்ணெய் திரண்டு வருகிற நேரம் என்று சொல்லக்கூடிய அந்த நேரத்தில், மிகத் தெளிவாக நாம் வருகின்ற 10 நாள்களை எப்படி பயன்படுத்தப் போகிறோம்? என்பதுதான் மிகமிக முக்கியமானதாகும்.

நண்பர்கள் எல்லாம், ‘‘நாங்கள் முடித்துவிடுவோம், முடித்துவிடுவோம்’’ என்று சொல்கிறார்கள். முடித்துக் கொடுப்பதற்காகத்தான் இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவமே!

25 ஆம் தேதிக்குள் முடித்தால்தான், சந்தா வழங்கும் நிகழ்ச்சியை நடத்த முடியும். நம்முடைய இலக்கு என்பது பெரிய இலக்காக இருந்தாலும், கடுமையான உழைப்பை முன்னிறுத்தி நாம் செய்தால், நம்முடைய இலக்கை எளிதாக எட்டிவிடலாம் என்று இங்கே தோழர்கள் சொன்னார்கள்.

நாம் உணர்ந்தால் மட்டும் போதாது; மற்றவர்களுக்கும் உணர்த்தியாகவேண்டும்!

அதை நான் மீண்டும் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால், ‘விடுதலை’ சந்தா வினுடைய முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக் கின்றோம். ஆனால், மற்றவர்களுக்கு அதை உணர்த்தவேண்டும். உணர்ந்தது மட்டுமே பயன் படாது - உணர்த்தியாகவேண்டும் பொது மக்களுக்கு, நமக்கு அப்பாற்பட்டவர்களுக்கு, நம் முடைய ஆதரவாளர்களுக்கும் சரி, அனுதாபி களுக்கும் சரி இதனை உணர்த்தவேண்டும்.

ஏன்? என்ன காரணம்?

இங்கே நண்பர்கள் சொன்னதுபோல, ‘விடுதலை’ ஆசிரியராக நான் பொறுப்பேற்று ஒரு 60 ஆண்டுகாலம் ஆகிவிட்டது - அதற்குப் பாராட்டோ, அல்லது நன்றி செலுத்துவதோ என்று அவர்கள் அறிவித்தாலும்கூட, அது ஒரு சாக்கு, அது ஒரு வாய்ப்பு அவ்வளவுதான். அதற்குமேல் அதற்கு முக்கியத்துவம் இல்லை.

நான், மற்ற கலந்துரையாடலில்கூட அதைத்தான் சொன்னேன்.

என் வாழ்வோடு இணைந்துவிட்ட ஒன்று ‘விடுதலை’

‘விடுதலை’ என்னோடு, என் வாழ்வோடு இணைந்துவிட்ட ஒன்று. தந்தை பெரியார் எப்படி வாழ்வோடு இணைந்துவிட்ட ஒரு தலைவரோ - இந்தக் கொள்கை எப்படி சுயமரியாதைக் கொள்கை, தன்மானம், இனமானம் என்பதும் நம்முடைய கொள்கை என்ற அந்த உணர்வோடு இணைந்துவிட்டதோ, அதுபோன்று, நம்முடைய இலட்சியங்களை அடைவதற்கு, இலட்சியங்களை வெல்லுவதற்கு ஒரு போராயுதமாகத்தான், நமக்கு பேராயுதமாகஅறிவாசான் தந்தை பெரியார் அவர் கள், நமக்கு ‘விடுதலை’யைத் தந்திருக்கிறார்கள்.

‘விடுதலை’  மட்டும் இல்லையென்றால், இன்றைக்கு என்ன ஆகியிருக்கும்?

எவ்வளவு இடங்களில் நாம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு வருகின்றோம்; எவ்வளவோ செய்திகளை சொல்கின்றோம். ஊடகங்கள் இதற்கு உரிய முக்கியத் துவம் கொடுக்கிறார்களா? என்றால், இல்லை. பத்திரிகை களில் செய்திகள் வெளிவருகிறதா? என்றால், இல்லை. ஆனால், அக்கப்போர் செய்திகள் நிறைய வரும்.

தொலைக்காட்சி- பத்திரிகை நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் பெரும்பாலும் கார்ப்பரேட்டுகள்!

ஏன் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

பத்திரிகையாளர்கள் பேட்டி எடுப்பார்கள்; ஆனால், அது ஒளிபரப்பாகாது, செய்திகள் பத்திரிகைகளில் வராது. அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் நண்பர்களே, ஒன்றை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அடிப்படையில் ஊடகங்கள், குறிப்பாக தொலைக் காட்சிகளானாலும், நாளேடுகளானாலும், அந்த நிறு வனத்தை நடத்துகின்ற முதலாளிகள் யார் என்றால், அவ்வளவும் கார்ப்பரேட் முதலாளிகள் - அவ்வளவும் மோடிக்கு - காவிக்குத் துணை போகிறவர்கள். இவை எல்லாவற்றையும்விட, எந்தத் தொலைக்காட்சி நிறு வனத்தில், யார் செய்தி ஆசிரியராக இருக்கவேண்டும் என்பதை, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான் தீர்மானிக்கின்றன.

பிறகு எப்படி நம்முடைய செய்திகளை அந்த செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்புவார்கள்? 

அதை நாம் எதிர்ப்பார்ப்பது நியாயமும் அல்ல - தேவையும் அல்ல.

ஆனால், ஒன்றே ஒன்று, அய்யா காலத்திலிருந்து நமக்கு என்ன பெருமை என்றால், இவர்களை நம்பி நாம் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இயக்கம், நம்முடைய இயக்கம்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக ஓர் ஏடு நமக்கு இருக்கவேண்டும் அல்லவா!

நம்முடைய அறிக்கையில் வருகின்ற செய்திகளைப் பற்றி கேட்கும்பொழுதுகூட, எங்களைப்பற்றி இது போன்ற செய்திகளைச் சொல்கிறீர்களே, அதிகாரப்பூர்வ மாக எங்களுடைய ‘விடுதலை’யில் செய்தி வந்திருக் கிறதே, அதையல்லவா நீங்கள் பார்க்கவேண்டும் என்று கூறுவதுண்டு.

இன்றைக்கு இருக்கின்ற எதிரிகள், நாணயமற்ற எதிரிகள்; எதற்கும் துணிந்த பாதகக்காரர்கள்!

‘விடுதலை’  என்கிற ஓர் ஆயுதத்தை அய்யா நமக்குக் கொடுத்திருக்காமல் போயிருந்தால், இந்த இயக்கம் இருந்திருக்காது. ஏனென்றால், நம்முடைய எதிரிகள் அவ்வளவு மோசமான எதிரிகள். அதிலும் இன்றைக்கு இருக்கின்ற எதிரிகள், நாணயமற்ற எதிரிகள்; எதற்கும் துணிந்த பாதகக்காரர்கள்.

பொய்யை உற்பத்தி செய்வதற்கென்றே, ஆட்களை சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். பொய் உற்பத்தித் தொழிற்சாலை.

தொலைக்காட்சிகள் எல்லாம் அதில் சாதாரண பங்குதான். சமூக வலைதளங்களில், நம்முடைய தோழர் கள் பதில் சொல்கிறார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக மக்களை சென்றடையக் கூடிய ஓர் ஏடு - நாளேடு இருக்கவேண்டும். அது ‘விடுதலை.’ 

அதற்கு அய்யா பட்ட பாடுபற்றி நான் பேசியது உங் களுக்கெல்லாம் தெரிந்திருக்கும், அதை பார்த்திருப் பீர்கள்.

கருவில் உருவாகும்பொழுதே எதிர்ப்பில் பிறந்தது நம்முடைய ஏடு!

கருவில் உருவாகும்பொழுதே எதிர்ப்பில் பிறந்தது நம்முடைய ஏடு மட்டும்தான்.

மிகப்பெரிய வசதி வாய்ப்புகளோடு கார்ப்பரேட்டுகள் நடத்துகின்ற, ஜம்பம் அடித்துக் கொள்ளக்கூடிய பத்திரி கைகளாக இருந்தாலும் நின்று போகும், நிறுத்தப்பட்டு இருக்கும். இரண்டாம் முறை அய்யா அவர்கள் மீண்டும் தொடங்கிய காலத்திலிருந்து, இன்றுவரையில், இன்று 60 ஆண்டு காலமும் சரி, அதற்கு முந்தைய காலமும் சரி - எடுத்துப் பார்த்தால், எவ்வளவு இழப்பு நடந்தாலும், எவ்வளவு அடக்குமுறைகள் நம்மீது பாய்ந்திருந்தாலும், எவ்வளவு சங்கடமான சூழ்நிலையை, நெருக்கடி காலத்தில் நமக்கு உருவாக்கியிருந்தாலும், ‘விடுதலை’  ஒரு நாள்கூட நின்றுவிடவில்லை - நிறுத்தப்படவில்லை.

நம்முடைய இலக்கு - நம்முடைய பயணம் தடைபட்டதே கிடையாது!

நம்முடைய இலக்கு - நம்முடைய பயணம் தடை பட்டதே கிடையாது. எதிரிகள், நம் பாதையில் கண்ணிவெடி வைத்தார்கள். அதையெல்லாம் அகற்றிவிட்டுத்தான் நம் பயணம் தொடர்கிறது.

ஆகவே, ‘விடுதலை’ யினுடைய முக்கியத்துவம், கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையாகும்.

எனக்கு இப்பொழுது என்ன கவலையென்றால், 60 ஆயிரம் ‘விடுதலை’  மக்களிடையே பரவவேண்டும் என்பது இருக்கிறதே அது மிகவும் முக்கியம்.

வித்தைகள்மூலம் தேர்தல்களில் வெற்றி பெறு கிறார்கள். அடுத்த முறையும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டினுடைய  கதி என்னாகும்?

ஆளுநர்கள் மூலமாக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்கள்!

இப்பொழுதே ஜனநாயகம்  இல்லை - மாநில உரிமை கள் பறிக்கப்படுகின்றன - நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது; எதிர்க்கட்சி அரசுகள் சில மாநிலங்களில் இருக்கின்றன. ஆளுநர்கள் மூலமாக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் என்ன செய்கிறார்கள் என்றால், குதிரை பேரம் பேசி சட்டப்பேரவை உறுப் பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள். அதாவது, மக்கள் அவர்களுக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், ஓட்டு வாங்கியவனை விலைக்கு வாங்குகின்றனர். இது போன்று ஜனநாயகம் கொச்சைப்படுத்தக் கூடிய அளவிற்கு இருக்கிறது. அதேநேரத்தில், ஊழலோ மிக நாசூக்காக செய்யப்படுகிறது.

2ஜி ஊழல் என்று ஆ.இராசாமீதும், கனிமொழிமீதும், தி.மு.க.மீதும் பழி சுமத்தினார்கள். மிகப்பெரிய அளவில் 1,76,0000000000 என்று போட்டு நட்டம் என்று சொன் னார்கள். ஆனால், பிறகு  அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று சொல்லி ராசாவும், கனிமொழியும் விடுதலை செய்யப்பட்டனர்.

2ஜி என்பது சாதாரண வேகம்தான். வெறும் 30 சதவிகிதம்தான்.

இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. 5ஜி அதிவேக அலைக்கற்றை.

அன்றைக்கு ஒன்றியத்தில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும், மாநிலத்தில் இருந்த தி.மு.க. அரசுக்கும்  அவதூறையும், அபவாதத்தையும் பரப்பினார்கள்.

இன்றைக்கு 5ஜி அலைக்கற்றையை அம்பானிக்கு ஏலம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் 5 லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்ற அளவிற்கு வந்திருக்கிறது. 

2ஜி என்பதே பெரிய வேகம் என்ற அளவில் இருந் தது. ஒலி அலைதான். அதற்குப் பிறகு 3ஜி, 4ஜி என்ற அளவில் வீடியோ (ஒளி) வந்தது. 4ஜி என்பதே இன்னும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கே கிடைக்கவில்லை. அதைத் தாண்டியது 5ஜி, அது உடனே அம்பானிக்குக் கிடைக்கிறது.

5ஜி என்பது கண்முடி கண் திறப்பதற்குள் தகவல்கள் நம் கைக்கு வந்து சேரும். அதற்கு எவ்வளவு கிராக்கி இருக்கவேண்டும்? ஆனால், 2ஜியைவிட குறைத்து வாங்கியிருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம் என்பது வெளிப்படை.

தி.மு.க. எந்த ஊழலும் செய்யவில்லை என்று சொன்ன ஒரே ஏடு ‘விடுதலை’

இதையெல்லாம் சுட்டிக்காட்டுவதற்கு ஓர் ஏடுகூட கிடையாது. அன்றைக்கே ராசா குற்றவாளி அல்ல; கனிமொழி குற்றவாளி அல்ல. தி.மு.க. எந்த ஊழலும் செய்யவில்லை என்று சொன்ன ஒரே ஏடு ‘விடுதலை’  ஏடுதான். ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்.

தி.மு.க. தோழர்களே குழப்பமடையக்கூடிய அள விற்கு ஆக்கிவிட்டார்கள். அவர்களே நம்புகின்ற அள விற்கு, இன எதிரிகள் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட் டார்கள். ஆனால், உறுதியாக இருந்தது நாம் மட்டும்தான்.

ஆகவே, நமக்கு இப்பொழுது பெரிய ஆபத்து என்ன வென்றால், அதைப்பற்றி ஏற்கெனவே சொன்னேன்.

இதே ஆத்தூரில்தான் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து அய்யா தீர்மானம் போட்டார்; அதை எதிர்த்துப் போராடினோம்.

அன்றைக்கு இராஜகோபாலாச்சாரியார், காமராஜர் போன்றவர்கள் இருந்தார்கள். இவர்களைவிட பல மடங்கு அவர்கள் நாணயமான எதிரிகள்.

‘விடுதலை’யினுடைய பங்களிப்புதான், குலக்கல்வித் திட்டம் ஒழிப்பில், கல்வி பரப்புவதில் மிகவும் முக்கிய மானதாகும்.

அதனால்தான் இன்றைக்கு இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள். ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

‘விடுதலை’ ஏடு பரவினால்தான் உண்மைகள் நாட்டு மக்களிடம் போய்ச் சேரும்!

இந்த ஆட்சியை ஒழிக்கவேண்டும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியை, எப்படியாவது குறுக்கு வழியில் செயல்பட்டு ஒழிக்கவேண்டும் என்றும், ஒரு போட்டி அரசாங்கம் நடத்தவேண்டும் என்றும் முயற்சி செய்கிறார்கள்.

இதனை கடுமையாக, வெளிப்படையாக, மக்களுக்கு விளங்கும்படியாக எதிர்த்து எழுதக்கூடிய ஒரே ஏடு ‘விடுதலை’ தான் என்ற நிலையில், இந்த ஏடு பரவினால்தான் உண்மைகள் நாட்டு மக்களிடம் போய்ச் சேரும்.                                                    (தொடரும்)

No comments:

Post a Comment