பிற இதழிலிருந்து... விசனப்பட வேண்டிய விசித்திர தீர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

பிற இதழிலிருந்து... விசனப்பட வேண்டிய விசித்திர தீர்ப்பு!

கே.சந்துரு
மேனாள் நீதிபதி, 
சென்னை உயர்நீதிமன்றம் 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சுவாமிநாதன்பற்றி திராவிடர் கழகத்தின் சார்பில் கட்டுரை வெளி வந்தது (3.7.2022).  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத சங்கராச்சாரியாருக்கு வக்காலத்து வாங்கி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பகுத்தறிவுபற்றி கேலி செய்தார். இப்படிப் பச்சையாக ஆர்.எஸ்.எஸ். பாணியில் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார். இப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே. சந்துரு அவர்களும் 'ஜூனியர் விகடன்' இதழில் நீதிபதி சுவாமிநாதன் எல்லை தாண்டிப் போனதைச் சுட்டிக் காட்டியுள்ளார். வாசகர்கள் புரிந்துகொள்ளட்டும்.

ஆளுங்கட்சியின் தலைவருக்குப் புகழாரம். அவர் குற்றம் சுமத்திய காவல் அதிகாரிக்கு நற்சான்றிதழ்? - இப்படி ஒரு நீதிபதியால் தீர்ப்பு எழுத முடியுமா என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்படுகிறது. தீர்ப்பை எழுதியவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அவர் தன்னை விமர்சித்த சவுக்கு சங்கர் மீது சமீபத்தில் சுயமாகவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்திருக்கிறார். அவர் செய்த பதிவில் (உத்தரவில்), “தீர்ப்பை விமர்சிக்கலாம், ஆனால் அது லட்சுமணக் கோட்டைத் தாண்டக் கூடாது” என்று கூறியிருக்கிறார். “லட்சுமணக் கோடுகள் நீதிபதிகளுக்குப் பொருந்தாதா?” என்ற கேள்வி இயற்கையாகவே எழலாம்.

ஜி.ஆர்.சுவாமிநாதனை அவர் மாணவராகப் பயிலும்போதே எனக்குத் தெரியும். அவர் உக்கிரமாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை உள்வாங்கியவர். ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பில் தீவிரமாகச் செயலாற்றியவர். அதை என்றும் அவர் மறைத்துக் கொண்டதில்லை. வழக்குரைஞராக பணியாற்றிய போதும் சங்கப் பரிவாரங்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். அதில் பற்று கொண்டவர்களுடைய வழக்குகளையெல்லாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர்.

சிறீரங்க ராஜகோபுரம் அருகில் அமைத்த பெரியார் சிலையை அகற்ற வேண்டுமென்று மதுரையிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்தவர். இப்படி அவரைப் பற்றி பல தகவல்கள் உண்டு. அவருடைய தொடர்புகளை அவர் என்றும் அறுத்துக் கொண்டதில்லை. அதனாலேயே பா.ஜ.க அரசு, மதுரையில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் பதவி அளித்து அவரை கவுரவித்தது. கொலிஜிய முறைத் தேர்வில், அவர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை எட்டி விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தச் சமயத்தில் கூட அவர் எழுத்தாளர் பெருமாள்முருகனின் வக்கீ லாக, திருச்செங்கோடு கோட்டாட்சியர் முன்னால் ஆஜராகி சமாதானப் பத்திரத்தில் கையெழுத்திட ஆலோசனை கூறியவர்.

உயர் நீதிமன்ற நீதிபதியானபோது, அரசமைப்பு சட்டப்படிச் செயல்படுவோம் என்று கூறித்தான் அவர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அவர் அளித்த சில தீர்ப்புகளை நான் பொதுவெளியில் விமர்சிக்க நேர்ந்தது. வழக்கின் பொருண்மைகளுக்கு உட்பட்டுத் தீர்ப்பளிப்பதற்கு மாறாக தனக்குப் பிடித்த பல விஷயங்களை, அது வழக்குக்குத் தேவைப் படாமல் இருப்பினும், அதை வலியப் புகுத்தும் போக்கு அவரிடம் இருந்தது. அவர், தான் படித்த, தெரிந்துகொண்ட பல விஷயங்களை அநாயாசமாகத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுவார். கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவருக்குக் கணிசமான பங்கு உண்டு என்று இன்றும் பலர் நம்புவார்கள்.

அவர் அளித்த பல சச்சரவுகளுக்கு உட்பட்ட தீர்ப்புகள் பற்றி இங்கு நான் எழுதப்போவதில்லை. அதை ஒரு தனிப் புத்தகமாகவே வெளியிடலாம். ஆனால் சமீபத்தில் அவர், சுரேஷ்குமார் என்பவர் தொடுத்த வழக்கில் அளித்த தீர்ப்புதான் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த வழக்கு பற்றிப் பார்க்கலாம்.

சுரேஷ்குமார் தனக்கு பாஸ்போர்ட் அளிக்க மறுப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அச்சமயத்தில் மதுரையில் பாஸ்போர்ட்டுகள் சட்டத்துக்கு விரோதமாக வழங்கப்பட்டதைக் குறித்து பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்தது. காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச்சிடம் அந்த மோசடி வழக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. சுரேஷ் குமாருக்கு பாஸ்போர்ட் வாங்கித் தர விழைந்த ஏஜென்ட்டும் அம்மோசடி வழக்கில் சம்பந்தப் பட்டிருந்ததால் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்க தாமதமானது. அவர் தொடுத்த வழக்கில் சுரேஷ்குமார் விண்ணப்பம் மோசடி வழக்குக்கு உட்பட்டு வரவில்லை என்றும், அவருக்கு பாஸ்போர்ட் அளிப் பதில் ‘க்யூ’ பிராஞ்ச் காவல்பிரிவுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, சுரேஷ்குமாருக்கு பாஸ்போர்ட் வழங்கிட மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டு வழக்கை பைசல் செய்திருந்தால் பிரச் சினை எதுவும் எழுந்திருக்காது.

ஆனால் அவருக்கே உரித் தான பாணியில், அவர் மேலும் சில கருத்துகளை உதிர்த்தது தான் சச்சரவைக் கிளப்பி யுள்ளது. மதுரை பாஸ்போர்ட் மோசடி வழக்கு குறித்து நேர டியாக இரு நீதிபதிகள் அமர் வில் பொதுநல வழக்கொன்று விசாரணையில் இருந்து வருவது நீதிபதிக்கு நன்றாகவே தெரியும். அவ்வழக்கு விசார ணையின்போதுதான் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, திடீரென்று சென்னையில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில், “மதுரை பாஸ்போர்ட் மோசடி வழக்கு மிகப்பெரிய சதிகள் அடங்கியது. அதில் சம்பந்தப்பட்ட உயர் காவல் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் மீது ஏன் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வில்லை?” என்று குற்றம் சாட்டினார். இவையெல்லாம் ஊடகங்களில் மிகைப் படுத்தப்பட்டு செய்திகளாக வெளியிடப்பட்டன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தனி நீதிபதி சுவாமிநாதன், அண்ணா மலையாரின் பத்திரிகைப் பேட்டிக்கு தனது தீர்ப்பின் மூலம் சில கருத்துகளைக் கூற விழைந்தார்.

“அண்ணாமலை யாரின் முயற்சியால்தான் பாஸ் போர்ட் மோசடி வழக்கு முக்கியத்துவம் பெற்றது” என்று பாராட் டியதுடன், அவர் ஜன நாயகத்தின் காவலராகச் செயல்படுவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அதே மூச்சில் அவர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு ஆதார மில்லை என்று கூறிய துடன், அதில் கீழ்நிலையிலுள்ள காவல் அதி காரிகள் வேண்டுமா னால் சம்பந்தப்பட்டி ருக்க லாம் என்றும் ஒரு புதிய சான்றிதழை வழங் கினார்.

பாஸ்போர்ட் மோசடி வழக்கை முன்னிலைப் படுத்திய அண்ணாமலைக்குப் பாராட்டும், அவர் குற்றம்சாட்டிய டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்குக் குற்றச்சாட்டிலிருந்து விலக்கும் அளிக்கும் இரண்டு நேர் விரோத நிலையை நீதிபதி சுவாமிநாதனால் மட்டுமே எடுக்க முடியும். முதலில் அவர் முன்னால் இருந்த வழக்கில் இத்தகைய கருத்துகளைக் கூறுவ தற்கு இடம் ஏதும் இல்லை. சுரேஷ்குமாரின் வழக்கை, காவல்துறையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கருத்து ஏதும் கூறாமல் முடித்து வைத்திருக்க முடியும்.

இரண்டாவது பாஸ்போர்ட் மோசடி வழக்கை நேரடிப் பார்வையில் வைத்திருக்கும் இரு நீதிபதிகள் அமர்வுதான் அது குறித்து கருத்துகளைத் தெரிவித்திருக்க முடியும். இருப்பினும், இப்படிப்பட்ட சச்சரவுக்கு உட்பட்ட நேரடியான எதிர்மறைக் கருத்துகளை நீதிபதி கூறியிருப்பது நியாயம்தானா... பாஸ்போர்ட் மோசடி வழக்கு தன்னிடம் விசார ணையில் இல்லாதபோதும் அது குறித்து ஒரு காவல் அதிகாரிக்கு நற்சான்றிதழும், ஒரு அரசியல் தலை வருக்குப் பாராட்டிதழும் ஒருசேர எப்படி அளிக்க முடியும் என்பது அவர் நம்பும் தெய்வத்துக்குத்தான் வெளிச்சம்!

“நீதிபதிகள் தங்கள் முன்னாலுள்ள பிரச்சி னைகளின் பொருண்மைகளை ஆராய்ந்து அதன் சட்டப் பின்புலத்துடன் மட்டுமே தீர்ப்பளிக்க வேண் டும். தங்களது சொந்தக் கருத்துகளையெல்லாம் பதிவு செய்யக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்திருப்பது நீதிபதி சுவாமிநாதன் அறியாததல்ல.

* 1980-களில் நீதிபதி பி.என்.பகவதி அன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிரதமர் இந்திரா காந்திக்கு பாராட்டுக் கடிதம் எழுதியது பல சர்ச்சைகளுக்கு உள்ளானதும் நீதிபதி சுவாமிநாதன் அறிந்ததே. பின்னர் நீதிபதி பகவதி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

* 2020-இல் ஓய்வு பெறப்போகும் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பிரதமர் மோடியை, ‘உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசி’ என்று கூறியதும், அதன் பின்னர் அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமனம் பெற்றதும்கூட நீதிபதி சுவாமி நாதன் அறிந்ததே. 

இந்த இரண்டு நிகழ்வுகளில் அவருக்குப் பிடித்த முன்னுதாரணம் எதுவாக இருக்கும் என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்!

நன்றி: 'ஜூனியர் விகடன்', 7.8.2022


No comments:

Post a Comment