அரசுப் பள்ளியில் கொடியேற்றிய தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

அரசுப் பள்ளியில் கொடியேற்றிய தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்

கள்ளக்குறிச்சி,ஆக.16- காவல்துறையினர் முன்னி லையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் படி, சின்னசேலத்தை அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் சுதா நேற்று (15.8.2022) தேசியக் கொடியேற்றினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத் துக்குட்பட்ட எடுத்தவாய்நத்தம் பகுதியில் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. “இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதந்திர தின நாள்களில் தேசியக் கொடி ஏற்றியதைப் போன்று, இந்த ஆண்டு தானும் தேசிய கொடியேற்ற அனுமதிக்க வேண்டும்” என்று அக்கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா பள்ளித் தலைமையாசிரியர் மணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சில நபர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பள்ளியில் தலைமை ஆசிரியரே கொடியேற்றலாம் என்று கூறினர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்  சேர்ந்தவர் என்பதால் தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் சுதா அளித்த புகாரைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் ஊர் முக்கிய பிரமுகர்கள், மற்றும் சுதா தரப்பினர், காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘இந்த ஆண்டும் ஊராட்சி மன்றத் தலைவரே இப்பள்ளியில் தேசியக் கொடியேற்றுவார்’ என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் இதை ஏற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நேற்று (15.8.2022) பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுதா, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலையில், தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் மணி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment