‘விடுதலை’ ஒரு கட்சியின் ஏடல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

‘விடுதலை’ ஒரு கட்சியின் ஏடல்ல!

மனித சுயமரியாதைக்கும் - சமத்துவத்திற்கும் - அனைவருக்கும் 

அனைத்தும் என்பதற்காக யார் யாரெல்லாம் போராடுகிறார்களோ, 

அவர்கள் அனைவருக்கும் உரியதாகும்!

இந்த விழாவின்மூலம் இதனைப் பிரகடனப்படுத்துகிறேன்!

88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரை

சென்னை, ஆக.28  ‘விடுதலை’ ஏடு தனிப்பட்ட முதலாளிக்கோ, ஏன் ஒரு கட்சிக்கோ உரித்தான ஏடல்ல. அனைவருக்கும் அனைத்தும் என்னும் சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம் பேசும், பாடுபடும் அனைவருக்கும் உரிய ஏடு என்று பிரகடனப்படுத்தினார் ‘விடுதலை’ ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா!

நேற்று (27..8.2022) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் பார்வையில் 60 ஆண்டுகால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி; 88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழா’’வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

பல ஆண்டுகளாக என்னோடும் - இயக்கத்தோடும் ஒன்றி இருக்கக்கூடிய‘விடுதலை’

எனது வாழ்நாளில் ஓர் உணர்ச்சிப்பூர்வமான நெகிழ்ச்சி நிறைந்த ஒரு நிகழ்ச்சிக்கு  - பல ஆண்டு களாக என்னோடும், இயக்கத்தோடும், ஒன்றி இருக்கக்கூடிய ‘விடுதலை’க்கு - 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தா சேர்ப்புக்கு - ஊக்கப்படுத்துகின்ற இந்த நிகழ்ச்சிக்கு, பாராட்டு விழா என்று சொல் வதைவிட, இந்நிகழ்ச்சியை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்ச்சி என்றே இதை நான் அழைக்க விரும்பு கின்றேன். எனது பணி தொடரவேண்டும் என்று வற்புறுத்தக் கூடிய நிகழ்ச்சியாக கருதுகிறேன்.

அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய மானமிகு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, 

சந்தா சேர்ப்பு இயக்கத்திற்கு உழைத்த உழைப்புத் தேனீக்கள்!

அவர் ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் மூலமாக தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், இயக்கத் தோழர் கள், செயல்வீரர்கள், ‘விடுதலை’யினுடைய சந்தா சேர்ப்பு இயக்கத்திற்கு உழைப்புத் தேனீக்களாக உழைத் திருக்கின்ற அத்துணை பேரையும் விளித்ததாகக் கொள்ளவேண்டும் என்று அருள்கூர்ந்து நேரத்தின் நெருக்கடியினாலே அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்நிகழ்வில் சிறப்பாக வரவேற்புரையாற்றிய குமரேசன் அவர்கள், சிறப்புரையாற்றிய அருமை மகள் எழுத்தாளர் ஓவியா அவர்களே, 'தீக்கதிர்' ஆசிரியர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களே மற்றும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியரும், அருமை எழுத்தாளரும், சிந்தனை யாளருமான ப.திருமாவேலன் அவர்களே, நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களே,

ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர், இவ்வளவு சிறப்பாக தமிழில் கருத்து வளத்தோடு எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கக்கூடிய முற்போக்குச் சிந்தனை யாளரும், ‘ப்ரண்ட் லைன்’ இதழின் மேனாள் ஆசிரி யருமான விஜயசங்கர் அவர்களே,

எந்நாளும் ‘விடுதலை’யினுடைய வாசகராக இருக்கக்கூடியவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் அமைச்சர் என்பதைவிட, சீரிய பகுத்தறிவுவாதி, சுயமரியாதைக்காரராக இருக்கக்கூடிய அருமைச் சகோ தரர் மானமிகு பொன்.முத்துராமலிங்கம் அவர்களே,

சிறப்பான வகையில் இங்கு ஒரு செய்தியை முன்னி லைப்படுத்தி, எப்படிப்பட்ட நிகழ்காலம், அடுத்து எப்படி அதை சந்திப்பது என்பதை அருமையாக இங்கே எடுத்து வைத்து விடைபெற்று சென்றிருக்கின்ற ‘ஜனசக்தி' ஆசிரியர் தோழர் சுப்பராயன் அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

இறுதியாக நன்றியுரை கூறவிருக்கக்கூடிய சிறீதர் அவர்களே,

எதிரில் அமர்ந்திருக்கக்கூடிய அருமைச் சகோதரர் கள், பெரியோர்கள், சிந்தனையாளர்களாக இருக்கக் கூடிய  அறிஞர் பெருமக்கள் - நீண்ட நேரம் அமர்ந்திருக் கிறார்கள் வயது முதுமையிலும்கூட - 

அதுவே என்னுரையை சுருக்கமாக அமைத்துக் கொள்வதற்கு ஒரு காரணமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்.

அந்த வகையிலே எதிரிலே அமர்ந்திருக்கக்கூடிய அருமைச் சகோதரர் குமரிஅனந்தன் அவர்களே,

இயக்குநர்அய்யா எஸ்.பி.முத்துராமன் அவர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புகழுரையைத் தவிர ஒரு மனிதனுக்கு வேறு அதிகமான தண்டனை என்பது கிடையாது!

அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், மிகக் கடினமானது நம்மைப் பொறுத்தவரையில் எது என்று சொன்னால், 60 ஆண்டுகாலமாக ஆசிரியராக உழைத்திருக்கின்றேன் என்று ஊக்கப்படுத்தினார்கள்; ஓடுகின்ற குதிரையை வேகமாக, நன்றாக ஓட்டவேண்டும் என்பதற்காக முயற்சியை எடுத்ததைவிட, கடந்த 2 மணிநேரமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய புகழுரைகள் இருக்கிறது பாருங்கள் - அதைவிட ஒரு மனிதனுக்கு வேறு அதிகமான தண்டனை கிடையாது என்று சொல்வார்.

குறிப்பாக பெரியார் தொண்டர்களுக்கு  இது பழக்க மான விஷயமே கிடையாது. வசவுகளைக் கேட்டே பழக்கப்பட்டவர்கள்; எதிர்ப்பையே  பார்த்து நிமிர்ந்து நிற்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கொஞ்சம் தலைகுனிய வைக்கக்கூடிய அளவிற்கு நிறைய சொன் னார்கள். உற்சாகமூட்டக்கூடிய அளவிற்கும் நிறைய சொன்னார்கள்.

நான் அவர்களுக்கெல்லாம் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில்,  இந்தப் பத்திரிகையினுடைய அவசியம் என்னவென்பதைப்பற்றி நீங்கள் எல்லாம் விளக்கியிருக்கிறீர்கள்.

நான் ஒரு கருவி, அவ்வளவுதான்!

நான் ஒரு கருவி, அவ்வளவுதான். அய்யா அவர் களாலே கண்டுபிடித்து, இந்தப் பணியை செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டவன்.

கருவியை உருவாக்கிய விஞ்ஞானிக்குத்தான் அந்தப் பெருமை அத்தனையும் போய்ச் சேரவேண்டுமே தவிர, கருவிக்கு அல்ல.

அந்த சமூக விஞ்ஞானிதான் நம்முடைய அறிவாசான் அவர்கள்.

அய்யா நினைப்பதை நாங்கள் நினைத்தோம்; நான் நினைப்பதை நம்முடைய கவிஞர் நினைப்பார்!

அதில் பெரும்பகுதி, அய்யா நினைப்பதை நாங்கள் நினைத்தோம்; நான் நினைப்பதை நம்முடைய கவிஞர் அவர்கள் நினைப்பார்கள்.

அதேபோன்று, எடுத்தவுடன், அவர் உரை யாற்றும்பொழுது, யார் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று - என்னுடைய ஆசிரியர் திராவிடமணியிலிருந்து, என்னுடைய வாழ் விணையர், எனது குடும்பத்தினர்வரை நன்றி யினை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஆகவே, இதில் மிக முக்கியமான செய்தி என்ன வென்று சொன்னால், ‘விடுதலை’ ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியராக பணியாற்றினேன் என்று என்னை பாராட்டினார்கள் எல்லோரும்.

‘விடுதலை’யை நானும் விடப்போவதில்லை; ‘விடுதலை’யும் என்னை விடப் போவதில்லை.

மரணம் ஒன்றுதான் எங்களைப் பிரிக்கும்!

கடைசி விடுதலை இருக்கிறது பாருங்கள், மரணம் ஒன்றுதான் எங்களைப் பிரிக்குமே தவிர, வேறு எவையும் எங்களைப் பிரிக்காது.

அந்த அளவிற்கு இதில் ஊறிப்போனவர்கள்; இணைந்து போனவர்கள்.

மூச்சுக் காற்று போன்று ஆகிவிட்டது இந்தக் கொள்கைகள். எனவே, இந்தக் கொள்கைகளுக்காக நாம் செய்கிற பணி அது.

அதைத் தவிர, இதில் தியாகம் ஒன்றும் கிடையாது.

அய்யா இன்னும் அழகாகச் சொல்லுவார்.

சுயநலம் என்றால் என்ன?

பொதுநலம் என்றால் என்ன? என்று.

எது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ, அந்தப் பணியை நான் உற்சாகத்தோடு செய்கிறேன். அது உங்களுக்குப் பொதுநலமாகத் தோன்றலாம்; அது எனக்கு சுயநலம்தான் என்று சொன்னார்கள்.

அந்த சுயநலத்திற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். அதற்காக தலைதாழ்ந்த நன்றியை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

அய்யா அவர்கள், ‘விடுதலை’ ஏட்டை நடத்த வேண்டும் என்று நினைத்ததற்குக் காரணம் என்ன?

இந்த நாட்டைப் பொறுத்தவரையில், மனிதர்களே பிறக்கவில்லை!

‘விடுதலை’ போன்ற ஒரு நாளேடு உண்மையை அப்படியே அப்பட்டமாக எடுத்துச் சொல்லி, இருக்கின்ற சமூக அநீதிகளையெல்லாம், ஜாதி, தீண்டாமை, பெண் ணடிமை, கொடுமைகள் இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும்; மனிதனுக்கு சுயமரியாதை வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த நாட்டைப் பொறுத்தவரையில், மனிதர்களே பிறக்கவில்லை.

ஜாதியால் பிறக்கிறான்; ஜாதியால் வாழ்கிறான்; ஜாதியால் சாகிறான்; ஜாதி அவனைத் தொடருகிறது என்று சொல்லக்கூடிய நிலையில், ஒரு பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காகத்தான் ‘விடுதலை’ ஏட்டை, சமூக விடுதலைக்காக தொடங்கினார் தந்தை பெரியார்.

‘விடுதலை’ நாளேட்டை தொடங்கிதால் அவர் பட்ட கஷ்டத்தையெல்லாம்பற்றி நினைக்கின்ற நேரத்தில், நான் இந்த 60 ஆண்டுகாலம் மிகப்பெரிய அளவிற்குத் தியாகம் செய்துவிட்டேன் என்று மற்றவர்கள் பாராட்டி னாலும்கூட - அப்படி நினைப்பதற்கு வழியில்லை.

நீதிக்கட்சி சார்பில் ‘விடுதலை’ வார ஏட்டை சென்னையில் தொடங்கி, இரண்டாண்டுகளுக்குமேல் நடத்த முடியவில்லை; பிறகு பெரியார் அய்யா 1937 இல் ஈரோட்டில் தொடங்கிய பிறகு, அண்ணா அவர்கள் அதற்கு ஆசிரியராக  இருந்தார்.

துணிந்து தொடங்குங்கள் ‘விடுதலை’யை என்றனர் நீதிக்கட்சித் தலைவர்களும் மற்றவர்களும்!

நீதிக்கட்சித் தலைவர்கள், வசதி படைத்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து, நாங்கள் எல்லாம் உதவி செய்கிறோம், நீங்கள் துணிந்து தொடங்குங்கள் ‘விடுதலை’யை என்று சொன்னார்கள்.

அய்யாவும் துணிந்து இறங்கினார். அதற்குப் பிறகு அய்யா அவர்கள் ஒரு கடிதத்தை எழுதுகிறார்.

யாருக்கு?

சர் ஆர்.கே.சண்முகம்

சுதந்திர இந்தியாவினுடைய முதல் நிதியமைச்சர் என்று பெருமைப்படைத்த - அட்டவோ மாநாட்டில் இவரைப் போல் பேசக்கூடியவர்கள் யாருமில்லை என்று பாராட்டப்பட்ட சர் ஆர்.கே.சண்முகம் அவர் களுக்கு.

அவர் சுயமரியாதை இயக்கத்திலிருந்து உருவாக்கப் பட்டவர்; அவர் சாதாரணமானவர் அல்ல.

கோவையில் இருந்த ஆர்.கே.சண்முகம் அவர் களுக்கு, ஈரோட்டிலிருந்து அய்யா கடிதம் எழுதுகிறார்.

என்றைக்கு எழுதுகிறார்?

ஏன் இப்படி பாடுபடவேண்டிய அவசியம் என்ன? என்பதற்கு இது ஒரு சிறிய முன்னுரை.

2.9.1937 இல்!

இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தால், என்னுடைய பணி ஒரு பெரிய சாதனை என்று எனக்குத் தோன்ற வில்லை. ஆனால், உங்களுடைய உற்சாகத்தை நான் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் எழுதிய கடிதம்!

ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு அய்யா எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி:

‘‘விடுதலை - தினசரிப் பத்திரிகை தினம் 3000 பிரதிகள் வெளியாகின்றது. பத்திரிகை நடத்துவதில் எவ்வளவு சிக்கனமாக நடத்தியும், மாதம் ரூ.500 வீதம் நஷ்டமாகிறது. இனி நஷ்டம் அதிகமாகுமே தவிர, குறையாது. காலை ஏழரை மணிக்கு ஆபீசுக்கு வந்தால், இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். 

(1933 இல் அன்னை நாகம்மையார் அவர்கள், அய்யா அவர்களுக்கு ‘சவரட்சணை’ செய்து குடும்பத்தைப் பார்த்தவர்கள் மறைந்துவிடுகிறார்கள். 1933 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அய்யா அவர்களுக்கு வீட்டில் உபசரிப்பு என்கிற வாய்ப்பே கிடையாது.)

அய்யா மேலும் எழுதுகிறார், கேளுங்கள்:

இதன் மத்தியில் சுற்றுப் பிரயாணம், இந்த நிலைமை யில் ரோஷம் என்னை அடிமையாக்கிக் கொண்டு, இந்த மாதிரித் தொல்லையில் இறக்கிவிட்டது. காசு பணம் எதிர்பார்த்து இவற்றை நான் எழுதவில்லை.’’

ஆகவே இந்த உணர்வை தயவு செய்து எண்ணிப் பாருங்கள். அப்படிப்பட்ட ‘விடுதலை' தொடர்ந்து பல எதிர்ப்புகளுக்கிடையில் நடந்து வந்திருக்கின்றது. அது நெருப்பாற்றில் நீந்தி வந்தது என்று சொன்னார்கள்.

‘விடுதலை’யினுடைய தனி முத்திரை என்ன?

அதுமட்டுமல்ல, ‘விடுதலை’ ஏடு எப்படிப்பட்டது என்று, அப்படிப்பட்ட பத்திரிகைகள் ஏன் தேவை என்று சொல்லும்பொழுது,

வர்த்தமான பத்திரிகையல்ல - வியாபாரத்திற்காக அல்ல - பணம் சம்பாதிப்பதற்காக அல்ல - பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால், அவருக்கு எத்தனையோ வழிகள் தெரியும். அவரைவிட கெட்டிக்காரத்தனமான வியாபாரிகள் யாரும் அந்தக் காலத்தில் கிடையாது.

ஆனால், அதை நினைத்துக்கொண்டு சொல்லும் பொழுது,  ‘விடுதலை’யினுடைய தனி முத்திரை என்ன?

ஏன் ‘விடுதலை’ தேவைப்படுகிறது?

இது எல்லா இடத்திலும் ஆய்ந்து வருகின்ற நேரத்தில், அவர் சொல்லுகின்ற முதல் கருத்து என்னவென்றால்,

‘விடுதலை’யை ஏன் தொடர்ந்து நடத்தவேண்டும் - அதனுடைய தனித்தன்மை என்ன என்பதை சொல்கிறார்.

‘‘வேறு பத்திரிகைகள் நம்முடைய இயக்கத்திற்கு இருக்கின்றன; என்றாலும், புதிய கருத்துகளையும், அரிய கருத்துகளையும் கொள்ளத் தயங்குவதில்லை என் றாலும், பாமர மக்களை மனதிற்கொள்ளாமல், மிகப் பெரிய அளவிற்கு அறிஞர்களை கவர்ச்சி செய்யும் தன்மையில் அந்தப் பத்திரிகைகள் விளங்குகின்றன.''

நம்முடைய நாட்டில் பெரிய அறிவாளிகள் எல்லாம் பத்திரிகைகளை நடத்துகிறார்கள்; ஆனால், அதில் யாரை மய்யப்படுத்துகிறார்கள்? தங்களுடைய அறிவை மற்றவர்கள் பாராட்டவேண்டும்; தங்களுடைய திறமையை மற்றவர்கள் பெரிய அளவிற்குப் புகழவேண்டும். அவர்களுடைய அறிவைக் காட்டிக் கொள்வதற்காகத்தான்  பத்திரிகைகளை நடத்துகிறார்கள்.

ஆனால், ‘விடுதலை’யை ஏன் தொடங்குகின்றேன்?

என்னுடைய ஏடுகள் எப்படிப்பட்டது?’’ என்று சொல்லுகிறார்.

பாமர மக்களிடம்தான் நம்முடைய இயக்கத்திற்கு வேலை!

மேலும் பெரியார் சொல்கிறார்:

‘‘அது வேண்டியது என்றாலும், பாமர மக்களி டம்தான் நம்முடைய இயக்கத்திற்கு வேலை இருப்பதால், அதை முக்கியமாகவும், அறிஞர்களை அடுத்தபடியாகவும் கவனிக்கவேண்டி இருக்கிறது.''

இதுதான் கைடுலைன் - இதுதான் ‘விடுதலை’க்கு வழிகாட்டி நெறி.

எப்படி அரசமைப்புச் சட்டத்தை வகுத்து, அந்த அரசமைப்புச் சட்டத்தின்படிதான் அரசாங்கத்தை நடத்தவேண்டும்; ஆனால், இப்பொழுதிருக்கின்ற ஒன்றிய அரசு அப்படி இல்லை. அதற்காகத்தான் இன்றைக்குப் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறுகின்றன.

‘விடுதலை’ நாளேடு சாதாரண மக்களிடத்தில் போய்ச் சேரவேண்டும்!

ஆகவே, இந்தப் பத்திரிகையினுடைய தனித்தன்மை என்ன? என்று சொல்லுகிற நேரத்தில், இந்த இடத்தில்தான் ஏன் 60 ஆயிரம் சந்தாக்கள் என்று இலக்கு வைத்தார்கள்? அது ஒரு குறியீடு அவ்வளவுதான். ‘விடுதலை’ நாளேடு சாதாரண மக்களிடத்தில் போய்ச் சேரவேண்டும்.

இங்கே தோழர் விஜய்சங்கர் அவர்கள் உரையாற்றும் பொழுது, ஓர் அருமையான சொற்றொடரைச் சொன் னார். மிகவும் பிடித்திருந்தது அது. அதேபோன்று நம் முடைய அய்யா பொன்.முத்துராமலிங்கம் அவர்களும் சொன்னார்கள்.

இன்றைக்கு ‘விடுதலை’யினுடைய தேவை அதிகம்!

அதாவது, முன்பு இருந்த எதிரிகள், எப்படியெல்லாம் பல ரூபத்தில் வந்தார்கள்;  ஆபத்துகள் எப்படிப்பட்டது? என்பதைச் சொன்னார். ‘விடுதலை’யினுடைய தேவை அதிகமாக இன்றைக்கு எப்படி வந்தது? அது எவ்வளவு பாது காப்பாகத் தொடரவேண்டும் என்று சொன்னார்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், பழைய எதிரிகள் நாணயமான எதிரிகள். ‘விடுதலை’க்கு ஏதாவது ஒரு சிறப்பை நான் வந்த பிறகு பெற்றோம்; ஒரு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம் என்று நினைத்தால், இவ்வளவு பேர் பாராட்டியதோ, மற்றவையோ அல்ல.

தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் போடுவதைப்பற்றி சொன்னார் அல்லவா திருமாவேலன் அவர்கள்.

60 ஆண்டு விழா என்பது, மலருக்கு மணிவிழா - 

‘‘பெரியாரும் - விடுதலையும் என் அன்பார்ந்த எதிரிகள்!’’ 

அப்படி வந்த நேரத்தில், நான் ஆசிரியராகப் பொறுப் பேற்றவுடன், இராஜாஜி அவர்கள் கீழ்ப்பாக்கம் தோட்டத்தில், கல்கி தோட்டத்தில்.

நேரடியாக அவரைச் சந்தித்து, பெரியார் பிறந்த நாள் மலர் போடுகிறோம்; அதற்கு நீங்கள் செய்தி தரவேண்டும் என்று சொன்னேன்.

சரி, செய்தி அனுப்புகிறேன் என்று சொன்னார்.

ஒரு போஸ்ட் கார்டில்தான் எழுதியிருந்தார். அய்யா போன்று அவரும் சிக்கனம்.

அந்த போஸ்ட் கார்டில், 

‘‘பெரியாரும் - விடுதலையும் என் அன்பார்ந்த எதிரிகள்!'' வாழ்க என்று எழுதியிருந்தார்.

அன்பார்ந்த எதிரிகள் என்று அவர் சொன்னார் பாருங்கள், இதுதான் சமரசமற்ற ஓர் ஏடு என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

இந்தக் கொள்கைக்கு இரண்டு சித்தாந்தம்.

1925 இல் பிறந்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.

அன்றைக்குப் பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம்.

அதனுடைய முன்னோட்டம்தான் நீதிக்கட்சி.

இப்படி வருகின்றபொழுது, இரண்டு தத்துவங்களுக்கு இடையில் நடக்கின்ற பத்திரிகை. இப்பொழுது அந்தத் தத்துவங்களை வேறு விதமாகக் கொண்டுவருவதற்குத் தான், நரிமேலழகர் வந்திருக்கிறார்.

அழகாகச் சொன்னார்.

‘விடுதலை’ ஏன் எல்லா வீட்டிற்கும் செல்லவேண்டும்? எல்லா இடங்களிலும் ‘விடுதலை’ ஏன் நுழையவேண்டும்? தமிழன் வீடு என்பதற்கு அடையாளமே ‘விடுதலை’தான் என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இதே மேடையில்.

இப்பொழுது ‘விடுதலை’யினுடைய வேலை என்ன வென்றால், அதற்கு முன்பு இருந்த எதிரிகளுடைய ஆயுதம் என்னவென்று தெளிவாகத் தெரிந்தது.

எதிரிகளின் ஆயுதங்களைக் கண்டுபிடித்து சொல்வதுதான் ‘விடுதலை’யினுடைய பணி!

இப்பொழுதுள்ள எதிரிகளின் ஆயுதம் என்னவென் பதைக் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும். அந்தப் பணி தான் ‘விடுதலை’க்கு.

‘விடுதலை’யினுடைய பணி என்பது ஏன் தேவை என்றால், இன்றைய சமுதாயத்தினுடைய வளர்ச்சி - ‘திராவிட மாடல்' ஆட்சி என்ற அளவிற்கு வளர்ந் திருக்கின்ற நேரத்தில், நம்முடைய தத்துவங்களை அழிக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்.

முன்பு கைத்துப்பாக்கியை, ரிவால்வரை எடுத்துக் காட்டினான். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஓடி னார்கள்.

ஆனால், படைகள் போகிறது பாருங்கள் - அந்தப் படைகள் போகும் வழியில், கண்ணிவெடிகளை வைக் கிறார்கள்.

எனவே, அந்தக் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்துச் சொல்வதுதான் ‘விடுதலை’யினுடயை வேலை. அதற் காகத்தான் ‘விடுதலை’ தேவை இப்பொழுது.

இனிமையான விஷயங்களைச் சொல்வதற்காக அல்ல - கேளிக்கைகளைப்பற்றி சொல்லும் ஏடு அல்ல. அதற்கு எத்தனையோ ஏடுகள் இருக்கின்றன. அதற்கு எத்தனையோ காட்சிகள் இருக்கின்றன.

ஆனால், இன்றைக்கு நம்முடைய இனத்தை, நம் மக்களை எவ்வளவோ ஆபத்துகள் சூழ்ந்திருக்கின்றன.

அரசமைப்புச் சட்டம் இருக்கும்; அரசமைப்புச் சட் டத்தின் பெயராலேயே பதவிப் பிராமணம் எடுப்பார்கள். 

இப்பொழுது எப்படி என்றால், பிரதமராக இருக்கக் கூடிய மோடி அவர்கள், மேடையிலிருந்து கீழே இறங்கி, கல்வெட்டு போன்ற ஒன்றின் கீழே குனிந்து, கும்பிடுகிறார். அந்தக் கல்வெட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு அது.

‘‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும்‘‘ என்பது தான் மிக முக்கியம்.

விஷத்தில் இரண்டு வகை உண்டு. முன்பெல்லாம் விஷத்தைக் கொடுத்தவுடன் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், இப்பொழுது மெல்லக் கொல்லும் விஷம் - ஸ்லோபாய்சினிங் - அது உடல் உறுப்புகளை ஒவ் வொன்றாக செயலிழக்கச் செய்யும்.

மனித உரிமைகள் எல்லாமே செயலிழந்து போய்க்கொண்டிருக்கின்றன இன்றைக்கு!

ஜனநாயக உறுப்புகள், இப்பொழுது இந்த நாட் டில், அரசமைப்புச் சட்டத்தின்படி இருக்கவேண்டிய நெறிகள் - சமுதாய வாழ்வுகள், சமூகநீதி, மதச்சார் பின்மை, ஜனநாயகம், சுயமரியாதை, மனித உரி மைகள் எல்லாமே செயலிழந்து போய்க்கொண் டிருக்கின்றன.

அதேநேரத்தில், யார் யாரெல்லாம் முன்பு எதிரி களாக நாணயமான எதிரிகளாகக் காட்டினார்களோ, அவர் களையெல்லாம் இவர்கள், போற்றக்கூடிய தலைவர்களைப் போல, ஒரு போர்வையைப் போர்த்தி, ஒரு முகமூடியைப் போட்டுச் சொல்லு கின்றனர்.

‘விடுதலை’ ஏன் ஒவ்வொரு இல்லத்திற்கும் போகவேண்டும்!

அந்த முகமூடியை அப்புறப்படுத்திக் காட்டக்கூடிய அரிய கருவிதான் ‘விடுதலை’ போன்ற நாளேடுகள்.

எனவே, ‘விடுதலை’ ஏன் ஒவ்வொரு இல்லத்திற்கும் போகவேண்டும்?

இல்லந்தோறும் ‘விடுதலை’ என்பது லாபத்திற்கா? பெருமைக்காக?

இந்தக் கருத்துகளைச் சொல்வதற்கு, ஆயிரம் பேர் அறிவாளிகளாக இருந்தாலும், துணிவில்லை.

விலை கொடுக்கவேண்டும்.

சாதாரண ஜட்கா குதிரை இது. சாதாரண ஜட்கா குதிரையை, ரேஸ் குதிரையாக்கவேண்டும் என்று அய்யா அவர்கள் அடையாளம் கண்டு, ஏனென்றால், இருக்கின்றவர்களில் பார்த்து அவர் ஓர் ஏற்பாட்டைச் செய்தார்.

எல்லா இடங்களுக்கும் போய்ச் சேர்ந்தால்தான், வருகின்ற ஆபத்தைத் தடுக்க முடியும்!

நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்கள். ஓட முடியுமா? ஓடியிருக்கிறோமோ? உங்கள் உற்சாகத்தினால் அவை எல்லாம் எனக்கு வந்தாலும், தோழர்களே, நண்பர்களே, இந்த இயக்கக் கொள்கை என்பது இருக்கிறதே, அது எல்லா இடங்களுக்கும் போய்ச் சேர்ந்தால்தான், வருகின்ற ஆபத்தைத் தடுக்க முடியும்.

இல்லையானால், புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே,  குலதர்மம்; அதேபோன்று சமூக நீதிக்கு ஆபத்து. இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை கொண்டு வருகிறார்கள்.

எளிதில் விலை போகக்கூடிய கூலிப் பட்டாளங்கள்

நம் மக்களுக்கே எதுவும் விளங்காத அளவிற்குச் செய்கிறார்கள். எளிதில் விலை போகக்கூடிய கூலிப் பட்டாளங்கள், துரோகங்கள் மலிந்துவிட்டன. சுப்பராயன் அவர்கள் சொன்னாரே, தமிழனா? திராவிடனா? 

இது என்ன பெரிய விஷயம்? இதே மேடையில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உரையாற்றும் பொழுது சொன்னாரே - ‘‘நான் தமிழன் என்று சொல்லும் பொழுது பெருமையடைகிறேன். திராவிடன் என்று சொல்லும்பொழுது, நான் உரிமை பெறுகிறேன்; கூடுதலாக ரோஷம் பெறுகிறேன்’’ என்றார்.

‘விடுதலை’ ஏட்டின் பெருமை அதுதான்.

இன்னும் நான் உழைக்கவேண்டும் என்ற உணர்ச்சியை இந்த விழாவின்மூலம் எனக்கு அளித்திருக்கிறீர்கள்!

நீங்கள் என்னைப் பாராட்டியிருப்பது என்பது இன் னும் நான் உழைக்கவேண்டும் என்ற உணர்ச்சியை இந்த விழாவின்மூலம் எனக்கு அளித்திருக்கிறீர்கள். அதை நாங்கள் ஒரு கூட்டு முயற்சியாக எடுத்துச் செய்வோம்.

இங்கே ஒரு பிரகடனம் போன்று சொல்லவேண்டிய விஷயம் இருக்கிறது.

‘விடுதலை’ ஒரு தனிப்பட்ட முதலாளியினுடைய பத்திரிகை அல்ல. 

‘விடுதலை’ ஒரு தனிப்பட்ட கட்சியினுடைய பத்திரிகையும் அல்ல.

தயவுசெய்து நான் சொல்வதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதைத்தான் நான் செய்தியாக, முக்கியமான கருத்தாக இன்றைக்கு வைக்க விரும்புகிறேன்.

‘விடுதலை’ ஒருபோதும் கட்சி ஏடாக இருக்காது; கொள்கை ஏடுதான்!

தந்தை பெரியார் அவர்கள் அருமையாக சொன்னார்,

‘‘நான் ஒருபோதும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; மாறாக, கொள்கைக்காரனாகவே வாழ்ந்திருக்கிறேன்.’’

அதுதான் ‘விடுதலை’யினுடைய முத்திரையும்கூட! ‘விடுதலை’ ஒருபோதும் கட்சி ஏடாக இருக்காது; கொள்கை ஏடாக இருக்கும்.

இந்தக் கொள்கையை யார், யார் சொல்கிறார்களோ, அவர்கள் எந்த அரசியல் கட்சி என்று பார்க்கமாட்டோம்;  எந்த இயக்கம் என்று பார்க்கமாட்டோம்; அவர்கள் எந்த பிரிவு என்று பார்க்கமாட்டோம்; அவர்கள் என்ன ஜாதி என்று பார்க்கமாட்டோம்; அவர்கள் எந்த மதம் என்று பார்க்கமாட்டோம்.

இந்த சமுதாயத்திற்கிடையே சுயமரியாதையையும், ஜாதி ஒழிப்பையும், பெண்ணடிமை ஒழிப்பையும், மூடநம் பிக்கை ஒழிப்பையும், யார் யாரெல்லாம் கூட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்குரிய பத்திரிகைதான் ‘விடுதலை’ என்பதை இந்த விழாவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விடுதலை’ என்பது ஒரு கட்சியினுடைய பத்திரிகை கிடையாது. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் யார் மீதும் வெறுப்பு கிடையாது.

மனித குலத்தை அணைத்துச் செல்லுவதுதான்; மனித குலத்திற்குக் கைகொடுப்பதுதான். மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்னார் தந்தை பெரியார்.

ஒரு மனிதன் அழகாக இருக்கிறான் என்பதற்கு பெரியாருடைய அளவுகோலை வேறு யாராவது பயன்படுத்தி இருக்கிறார்களா?

சமூகநீதியினுடைய தத்துவத்திற்காகப் பிறந்த ஏடு ‘விடுதலை’

ஆகவே நண்பர்களே, ‘விடுதலை’ நாளேடு என்பது அனைவருக்கும் அனைத்தும் தரக்கூடிய சமூகநீதி யினுடைய தத்துவத்திற்காகப் பிறந்ததாகும்.

அனைவருக்கும் அனைத்தும், அனைவருக்கும் உரிய ஏடு ‘விடுதலை’.

அனைவரும் என்று சொல்லும்பொழுது, அந்த அனைவர் யார்? யாரெல்லாம் சமூகநீதிக்குப் போராடு கிறார்களோ, யாரெல்லாம் மனிதநேயத்திற்காக வாதாடு கிறார்களோ, யாரெல்லாம் சுயமரியாதைக்காக போர் வீரர்களாக நிற்கிறார்களோ, யார் யாரெல்லாம் மக்கள் உரிமைக்காகப் போராடுகிறார்களோ, யார் யாரெல்லாம் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்று சொல்கிறார் களோ, அவர்கள் அத்துணை பேருக்கும் சொந்தமான ஏடு  ‘விடுதலை’தான் - இது இந்த 60 ஆண்டுகாலத்தில் சொல்லவேண்டிய மிக முக்கியமான ஒரு செய்தியாகும்.

இவ்வளவு பெரிய முயற்சிக்கு - சந்தா சேர்ப்பதற்கு நம்முடைய தோழர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார் கள்; உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாடெங்கும் நம் தோழர்கள் சந்தா திரட்டுகிறார்களே, அது வெறும் சந்தாக்களுக்காக அல்ல. இந்தக் கருத்துகள் சென்று ஒவ்வொரு வீட்டுக் கதவைத் தட்டவேண்டும்; ஒவ்வொருவருடைய மூளையைத் தீட்டவேண்டும் என்பதுதான் முக்கியம்.

என்னுடைய தலைதாழ்ந்த நன்றி, மகிழ்ச்சி!

என்னை நீங்கள் உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள் - அந்த உற்சாகம் எனக்கானதல்ல; பாராட்டு எனக்கு அல்ல. எனது அங்கங்களாக இருக்கக்கூடிய, கொள்கைத் தங்கங்களாக இருக்கக்கூடிய என்னுடைய சக தோழர்கள் - அவர்கள் இயக்கப் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய கவிஞரிலிருந்து தொடங்கி, எனக்குக் கார் ஓட்டுநர் இருக்கிறார் அல்லவா - எனக்கு உதவி செய்யக்கூடியவர் இருக்கிறார் அல்லவா இரவு - பகல் பாராமல் - அப்படி உழைக்கின்றவர்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியை, மகிழ்ச்சியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களுடைய உழைப்பு சாதாரணமானதல்ல. நான் இந்த வயதில் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்று சொல்கிறார்களே,அது ஒன்றும் பெரிதல்ல - எல்லாவற் றிலும் என்னை அழைத்து வரக்கூடியவர்கள் இந்த அளவிற்கு வேகமாக அழைத்து வருகிறார்களே, அதுதான் மிகவும் முக்கியம்.

‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம்’’ என்ற குறள்தான் தந்தை பெரியாருக்குப் பிடித்த குறள். நேரம், காலம் பார்க்கக்கூடாது பொதுவாழ்க்கையில் என்று சொல்வார்.

எங்களுடைய பணி O.T.  அல்ல - A.T. . 

ஆகவே, எல்லோரும் ‘விடுதலை’ சந்தா திரட்டுவதற் காக உழைத்தது - சில நேரங்களில் ஓவர் டைம் என்று நினைக்கலாம்; தொழில்முறையில் சொல்லவேண்டும் என்றால் ஓ.டி. ஆனால், எங்களுடைய பணி ஓ.டி. அல்ல - ஏ.டி.

ஏ.டி. என்றால், ஓ.டிக்குப் பதில் ஏ.டி என்று தவறாகச் சொல்கிறாரோ - வயதாகிவிட்டதால் தடுமாறுகிறாரோ? என்று நீங்கள் நினைக்கவேண்டாம். ஏ.டி. என்றால், ஆல் டைம் என்று அர்த்தம்.

என்னுடன் பணி செய்கின்ற தோழர்கள் எல்லாம் ஆல் டைம். என்னுடைய வாழ்விணையர் உள்பட.

அய்யாவின் ஏற்பாடும் - எனது தயக்கமும்!

அய்யா அவர்கள், என்னுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்று சொன்னபொழுது, நான் கொஞ்சம் அச்சப்பட்டேன்; தயங்கினேன்.

ஆனால், அய்யா சொல்லிய பிறகு, என்னால் மறுக்க முடியவில்லை. ஏனென்றால், அய்யாவின் தொண்ட னுக்குத் தொண்டன் நான்.

என்னுடைய வசதி வாய்ப்பைப் பார்க்கும்பொழுது, என்னுடைய துணைவியாரின் வசதி வாய்ப்பு அதிகம். இரண்டிற்கும் ஏற்றத் தாழ்வு. நாம் பொதுவாழ்க்கையில் இருக்கிறோமே, மணவாழ்க்கை எப்படி அமையும் என்று அந்த இளவயதில் கொஞ்சம் யோசனை.

அய்யா அதைப் புரிந்துகொண்டு, இயக்கத்திற்காக கருதித்தான் அந்த ஏற்பாட்டை செய்கிறேன் என்று சொன்னார்.

நீங்கள் என்ன செய்யவேண்டும் என நினைக்கின்றீர் களோ, அதற்குச் சரி, சம்மதம் என்று சொல்லிவிட்டேன்.

உங்களிடம் இப்போது நான் பகிர்ந்துகொள்கிறேன்; இதுவரை யாரிடமும் சொன்னதில்லை.

எனது வாழ்விணையர் சுமைதாங்கியாக - சுகமாக எனக்கு இருக்கிறார்!

அது என்னவென்றால், திருமணம் நடந்துவிட்டால், வாழ்விணையர் நமக்கு  சுமையாக இருப்பார்களோ, இயக்கப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுமோ? ஏனென் றால், வசதி, வாய்ப்புகளில் பழகிவிட்டவராயிற்றே என்று நினைத்தேன்.

ஆனால் நண்பர்களே, நான் வார்த்தைகளால் சொல்ல முடியாது - அவர்கள் சுமையாக இன்றுவரை இல்லை - அவர்கள் சுமைதாங்கியாக, சுகமாக எனக்கு இருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் உணர்ச்சிப்பூர்வமாகத் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாருடைய முன்னோக்கு அதிலும் சிறப்பானது.

சுதந்திர நாளை - துக்கநாள் என்று சொன்னது மட்டு மல்ல; சொந்த வாழ்க்கையில், திருமணம் என்று சொல் லும்பொழுது, அது அந்தத் திருமணமாக இருந்தாலும், எந்தத் திருமணமாக இருந்தாலும் அது அத்தனையும் சமுதாயத்திற்காக - வாழ்க்கைக்காக என்று சொல்லக் கூடிய அளவிலே அவர்கள் நிகழ்த்தி வந்திருக்கிற பொழுது, நான் வீட்டைப்பற்றி கவலைப்படவில்லை; சமுதாயத்தைப்பற்றியும், நாட்டைப்பற்றியும் கவலைப் பட்டு பணியாற்றுவதற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்தது.

அய்யாவினுடைய முன்னோக்கு!

நான் முழுக்க முழுக்க ஒரு சுதந்திர மனிதனாக இருந்து இயக்கத்திற்கு எப்படி பணியாற்றுவேனோ, அந்தப் பொறுப்பை அவர்கள் எடுத்துக்கொண்டதினாலே, ஒரு இல்லறத்தின் தொண்டறத்திற்குப் பயன்பட்டார்கள்.

அய்யாவினுடைய முன்னோக்கு, ‘விடுதலை’க்கு என்னை அனுப்புவதற்கு வசதியாக இருந்தது.

அவர் கற்று கொடுத்த சுயமரியாதைதான் - அதனால்தான் கொஞ்சம் யோசனை செய்தோம் நாங்கள் இரண்டு பேரும்.

என்னவென்றால், நான் இயக்கத்திலிருந்து சம்பளம் வாங்கக்கூடாது என்று மிகத் தெளிவாக இருந்தோம் நாங்கள் இருவரும்.

அப்படியென்றால், நாம் எப்படி வாழ்க்கையை நடத்துவது?

அப்பொழுதுதான் என்னுடைய துணைவியாருடைய பங்கு அதில் இருந்தது. மிகத் தெளிவாக சொன்னார்கள், நீங்கள் யோசிக்கவே யோசிக்காதீர்கள் என்றார்.

பிறகு கலந்து ஆலோசித்து ஒரு முடிவிற்கு வந்தோம். பெரியாரிடம் சம்பளம் வாங்கினாலும், நாம் வகுத்துக் கொண்டிருக்கின்ற நெறிக்கு அது குறைவு.

எது குறைந்த சுயமரியாதை இழப்பு?

மாமனார், மாமியார் வீட்டிலிருந்து வாங்கி னாலும் அதுவும் சுயமரியாதைக்குக் குறைவுதான்.

ஆனால், இந்த சுயமரியாதைக் குறைவு என்பது நம்மை மட்டும்தான் பாதிக்கும். ஆனால், அந்த சுயமரியாதை இயக்கத்திற்கு நட்டத்தை உண் டாக்கும். எது குறைந்த சுயமரியாதை இழப்போ, அதை முடிவு செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கலாம் என்றபோது - 

‘‘உங்களுக்கு என்று அவர்கள் செய்யவில்லை; எனக்குத்தான் அவர்கள் செய்கிறார்கள். அய்யா விடம் பணியாற்றுங்கள், அதுதான் மகிழ்ச்சி’’ என்று என்னுடைய வாழ்விணையர் சொன்னார்.

இன்றுவரையில் இந்தப் பணிகளை செய்வதற்கு மிகப்பெரிய ஆதாரமாக இருக்கக்கூடியவர் என்னுடைய வாழ்விணையர்தான்.

எனவேதான், அன்றும் - இன்றும் - என்றும் இந்தப் பணியை செய்வேன்.

‘விடுதலை’யும் என்னை விடாது; நானும் ‘விடு தலை’யை விடமாட்டேன்.

மனித வாழ்க்கையினுடைய விடுதலை எப் பொழுதோ அப்பொழுதுதான் எனக்கும், ‘விடுதலை’க் கும்  பிரிவு ஏற்படும்.

‘விடுதலை’  என்பது வெறுப்பு அரசியலுக்கு அல்ல! 

எனவே, ‘விடுதலை’  என்பது வெறுப்பு அரசியலுக்கு அல்ல; எந்தத் தனி மனிதரையும் எதிர்ப்பதற்கல்ல. எங்களுக்கு எதிரிகள் தத்துவங்களே தவிர, கொள் கைகளே தவிர வேறில்லை என்று கூறி,

இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த உங்களுக் கெல்லாம் நன்றி தெரிவித்து, நீண்ட நேரம் அமர வைத்ததற்காக மன்னிக்கவேண்டும்.

இந்தக் குதிரை தடுக்கி விழாது - தடம் புரளாது!

உங்கள் நம்பிக்கைக்கு என்றைக்கும் உண்மையாக, இது ஜட்கா குதிரையாக இருந்தாலும், ரேஸ் குதிரையாக கடைசி வரையில் ஓட்டுவதற்கு, சவுக்கு உங்கள் கைகளில் இருக்கிறது; உற்சாகம் உங்கள் கைகளில் இருக்கிறது. எனவே, ஓட முடிந்தவரையில் மற்ற குதிரைகளைத் தாண்டித் தாண்டிதான் ஓடுமே தவிர, தடுக்கி விழாது; தடம் புரளாது என்று கூறி, முடிக்கிறேன்.

வாழ்க பெரியார்! 

வளர்க விடுதலை!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment