78 முறை பெட்ரோலும் 76 முறை டீசலும் விலையேற்றம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

78 முறை பெட்ரோலும் 76 முறை டீசலும் விலையேற்றம்?

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர் ராகவ் சாதா. இவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இவரது கேள்விக்கு ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதன்படி, "2021-2022ஆம் ஆண்டில் 20.07.2022ஆம் தேதி வரை பெட்ரோல் விலையானது 78 முறையும், டீசல் விலையானது 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 7 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 280 நாட்களும், டீசல் விலை 279 நாட்களும் மாற்றம் செய்யப்படவில்லை'' என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒன்றிய அரசுக்கு 2016ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்ற கேள்விக்கும் பதிலளிக்கப்பட் டுள்ளது. அதன்படி 2016 முதல் 2022 காலக் கட்டம் வரை கலால்வரி மூலமாக ரூ.16 லட்சம் கோடி வருவாயாக கிடைத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறியுள்ளார்.

இந்தப் பதிலை ஆம்ஆத்மி எம்.பி. ராகவ் சாதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் ஒன்றிய அரசைக் கடுமையாக விமர் சனம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய ராகவ் சாதா  "கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை 78 முறையும், டீசல் விலையை 76 முறையும் உயர்த்தி உள்ளது. இதன்மூலம் பொது மக்களிடம் இருந்து ஒன்றிய அரசு கொள்ளையடிப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இதனை விடுத்து ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

மேலும், அவர் மேனாள் பிரதமர் வாஜ்பாயை நினைவுப்படுத்தி, "அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஆளும் அரசைப் போலவே எதிர்க்கட்சிகளும் மரியாதையுடன் நடத்தப்பட்டன. இன்றைய பாஜக.வும், பிரதமரும் வாஜ்பாயிடம் இருந்து சில விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்'' எனவும் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் உரிமை தனியாரிடம் அளிக்கப்பட்டதால், அவர்கள் "நினைத் ததே காட்சி, கண்டதே கோலம்!" என்ற போக்கில் தாறுமாறான போக்கில் நடந்து கொள்வார்கள்.

தேர்தல் வரும் கால கட்டத்தில் மட்டும், பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம் இருக்காது.

ஒரு மக்கள் ஆட்சி முறையில் மக்களை ஏமாளி களாக நினைப்பதும், ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் எந்த அளவுக்கு முறைகேடானது என்று சொல்லித் தெரிய வேண்டாம்.

'கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக!' என்று வடலூர் அடிகளார் சொன்னார். அதுதான் நினை விற்கு வருகிறது.

உலகில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்த போதும்கூட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போவது கருணையில்லா ஆட்சிதானே!

குடி மக்களை வருத்திக் கொண்டே போனால், அது குமுறும் எரிமலையாக வெடிக்கும் என்பதுதான் உலக வரலாறு! இது புரிய வேண்டிய நேரத்தில் அர சுக்குப் புரியும் என்றாலும், அதுகாலங் கடந்ததாகத் தானே இருக்கும்.

No comments:

Post a Comment