இது வெறும் 25 ஆவது மாநில மாநாடு மட்டுமல்ல - வெறும் சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மட்டுமல்ல - வெறும் மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு மட்டுமல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

இது வெறும் 25 ஆவது மாநில மாநாடு மட்டுமல்ல - வெறும் சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மட்டுமல்ல - வெறும் மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு மட்டுமல்ல!

இதுதான் எதிர்கால இந்தியாவைக்  காப்பாற்றப் போகின்ற மாநாடு!

திருப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை 

திருப்பூர், ஆக.8- இது வெறும் 25 ஆவது மாநில மாநாடு மட்டுமல்லநண்பர்களே, வெறும் சமூக நல்லிணக்க மாநாடு மட்டுமல்ல நண்பர்களே, இது மாநில உரிமை களைக் காக்கின்ற மாநாடு மட்டுமல்ல நண்பர்களே! இதுதான் எதிர்கால இந்தியாவை காப்பாற்றப் போகின்ற மாநாடு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு - 

மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு

கடந்த 6.8.2022 அன்று திருப்பூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு - சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு - மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றி னார்.

அவரது உரை வருமாறு:

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்’’ விருது

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சிறப்பு வாய்ந்த இந்த சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு - மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டின் தலைவராக இருக்கக்கூடிய முதுபெரும் பொதுவுடைமைப்  போராளி, எளிமையின் சின்னம், பொது வாழ்க்கையில் என் றென்றைக்கும் கற்றுக்கொள்ளவேண்டிய நிரந்தரப் பாடப் புத்தகம் என்று நாங்கள் பெருமைப்படக் கூடிய அய்யா தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு ‘‘தகைசால் தமிழர்'' விருதை, சங்கரய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு அரசு இவரைத் தேர்ந்தெடுத் துள்ளதே, அதைப் போல உள்ளம் பூரிக்கக்கூடிய நிகழ்ச்சி வேறு எதுவும் கிடையாது.

‘திராவிட மாடல்’ முதலமைச்சர்

பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடியவர்களுக்கு அடையாளம். இது ஒரு கட்சியினுடைய அடையாளம் அல்ல. ஒரு கொள்கை வெற்றியினுடைய மலர்ச்சியாக, தொண்டு கனியாக, தொண்டுப் பழமாக இருக்கக்கூடிய ஒருவருக்கு, அருமையான ‘திராவிட மாடல்’ முதல மைச்சர் எப்படி அடையாளம் காணுவார் என்பதற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லி, அவரை அனைவர் சார்பாக வாழ்த்துகிறோம். முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள், பெருமைப்படுகின்றோம் - அதைவிட அவர் பாராட்டிய நேரத்தில் ஒன்றைச் சொன்னார்கள். அதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் நண்பர்களே!

அவருக்கு அவ்விருதை அளிப்பதால், அவருக்குப் பெருமை என்று சொல்லவில்லை. இந்த விருதை அவ ருக்கு அளிக்கக் கூடிய வாய்ப்பினால் தமிழ்நாடு அரசு பெருமை பெறுகிறது; நான் பெருமை பெறுகிறேன் என்று சொன்னார்.

 பல நேரங்களில் விருதுகளால் பலர் பெருமை பெறு வார்கள்; ஆனால், இங்கே விருது பெருமை பெறுகிறது.

உலகத்தில் உள்ள அத்துணை கொள்கையாளர்களின் சார்பாக...

இதுதான் இந்த விருதுக்கும், விருதாளருக்கும் சிறப்பு என்று சொல்லி, உலகம் முழுவதும் உள்ளவர்கள் இந் நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; உலகத்தில் உள்ள அத்துணைக் கொள்கையாளர்களின் சார்பாக இந்தப் பயனாடையை அவருக்குப் போர்த்தியிருக் கிறோம்.

ஏனென்றால், பொன்னாடையை இந்த மாநாட்டில் போர்த்தவில்லை. இது பயனாடை - பொன்னாடை பயன்படாது; பயனாடை பயன்படும்.

இந்த மாநாட்டினுடைய முதல் முத்திரை

ஆகவேதான், இதை அனைவர் சார்பாக சொல் கிறேன். அய்யா அவர்கள் இங்கே வந்து அந்த சிறப்பைப் பெறக்கூடிய பெருமை இருக்கிறதே - அது இன்னும் எங்களுக்குப் பெருமை - என்றைக்கும் நினைவில் இருக் கும் - இந்த மாநாட்டினுடைய முதல் முத்திரை இது.

நண்பர்களே, இந்த சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டின் அரும் பெரும் தலைவர், தொண்டின் பழம், எளிமையின் சின்னம் அய்யா தோழர் இரா.நல்லகண்ணு அவர்களே,

வரவேற்புரையாற்றிய இத்தொகுதியினுடைய நாடா ளுமன்ற உறுப்பினர் கொள்கையாளர் அன்புத்தோழர் கே.சுப்பராயன் அவர்களே,

தொடக்கவுரை நிகழ்த்தவிருக்கக் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதைவிட எந்நாளும் கொள்கைப் போராளியாக இருக்கக்கூடிய அருமைத் தோழர் டி.ராஜா அவர்களே,

மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கக் கூடிய முன்னோக்கு - முன்னோட்டம்!

இந்த நிகழ்ச்சியில் ஓர் அற்புதமான, ஒரு சிறப்பான, எடுத்துக்காட்டான, நம்முடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, ஒரு பிரகடனம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அருமை யான உரையாற்றி, இந்தக் கூட்டணி தொடரும் - கொள்கைக் கூட்டணி - இலட்சியக் கூட்டணி இது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி, சந்தேகப்படக் கூடிய வர்களுடைய சந்தேகத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, இது இந்தியாவிலேயே மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கக் கூடிய முன்னோக்கு - முன்னோட்டம்; இந்த திராவிட மாடல் இந்தியாவிற்கே தேவையான மாடல் என்பதை சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கக் கூடிய நம்முடைய ஆற்றல்வாய்ந்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர், இங்கே காணொலிமூலமாக தம்முடைய கருத்தொளியை சிறப்பாக வழங்கிய அருமை முதலமைச்சர் அவர்களே,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒப்பற்ற தலைவர் அருமைத் தோழர் கே.எஸ்.அழகிரி அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாகக் கலந்துகொண்டு உரையாற்றி, அருமையான கோரிக்கைகளை வைத்து, பயனுள்ள ஒரு மாநாடு, வரலாற்று சிறப்புமிக்க மாநாடு! ஆற்றல் உள்ள செயல்வீரராக இருக்கக் கூடிய மற்றொரு எளிமையின் சின்னமாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் 

இரா.முத்தரசன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற நம்முடைய அருமைச் சகோதரர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் 

கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் எழுச்சித் தமிழர் என்னருஞ் சகோதரர் அருமைத் தோழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அருமையாக உரை யாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் தேசிய தலைவர் அடக்கத்தின் உருவம் அய்யா பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், வரலாற்றுப் பேராசிரியருமான எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அவர்களே,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., அவர்களே,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் அருமைத் தோழர் ஈ.ஆர்.ஈசுவரன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிய) விடுதலை அமைப்பைச் சேர்ந்த தோழர் என்.கே.நடராஜன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் அ.மு.சலீம் அவர்களே,

அருமைத் தோழர்கள் சி.மகேந்திரன் அவர்களே, மு.வீரபாண்டியன் அவர்களே, எம்.ஆறுமுகம் அவர்களே, அமர்ந்திருக்கக்கூடிய பல பகுதிகளிலிருந்து வந்திருக் கக்கூடிய அருமை கம்யூனிஸ்ட் நண்பர்களே, கூட்டணி கட்சியைச் சார்ந்த அருமைப் பெரியோர்களே,

இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் தோழர் க.செல்வராஜ்  அவர்களே,

வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே,

மற்றும் நண்பர்களே, தோழர்களே, தாய்மார்களே, மாநாட்டில் கலந்துகொண்டு விடைபெற்று சென்றிருக்கக் கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

ஆர்.என்.கே. அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நாம் கொண்டாடுவோம்!

அருமையான உரைகள், சிறப்பான கருத்துகள்; அடுத்து இன்னும் தெளிவாக நம்முடைய தோழர் ராஜா அவர்களும், மாநாட்டுத் தலைமை உரையை ஆற்றக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், இன்னும் சில ஆண்டுகளிலே, இது போன்ற பெரிய மேடைகளில் அவருடைய நூற் றாண்டு விழாவை, அவரை வைத்தே சிறப்பாக நாம் கொண்டாடுவோம் என்ற பெருமைக்குரிய அய்யா ஆர்.என்.கே. அவர்களும், சிறப்பாக பேசவிருக்கின்ற நேரத்தில், நான் நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

நெஞ்சம் நிறைந்த அறிவிப்புகள் இந்த மாநாட் டின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. மிக அருமை யாக ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

எனக்கு முன்பு பேசிய அத்துணைத் தலைவர் பெருமக்களுடைய கருத்துகளையும் நான், அவர் கள் முன்மொழிந்ததாகக் கருதி, வழிமொழிகிறேன்.

எங்களுடைய வண்ணங்கள் மாறுபடலாம்; எண்ணங்கள் எப்பொழுதும் ஒன்றுபட்டே இருக்கிறது!

காரணம் என்னவென்றால், ஒத்தக் கருத்துடைய வர்கள் நாங்கள். எங்களுடைய வண்ணங்கள் மாறு படலாம்; ஆனால், எண்ணங்கள் எப்பொழுதும் ஒன்று பட்டே இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் - இந்த மாபெரும் கூட்டணி மேடை - இந்த நாடு அடைந் திருக்கின்ற வெற்றிகள்!

இங்கே அருமையாகப் பேசினார்கள்; தேவையான கருத்துகளை நன்றாக நினைவூட்டினார்கள். என் னென்ன ஆபத்துகள் சூழ்கின்றன என்று சொல்லுகின்ற நேரத்திலே, மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், அதேபோல, எப்படி வெறுப்பைத் தூவுகிறார்கள்? எப்படித் தீவிரமாக மக்களைப் பிரிக்கிறார்கள்? என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அந்தக் காலத்தில் ஒரு கவிதையை எழுதினார்.

‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம் - ஜாதி

இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!''

என்றார்.

இன்னும் இருக்கின்றார்கள்; இருக்கின்றது மட்டுமல்ல நண்பர்களே, அதை வைத்துப் பிழைக்கின்றார்கள். பிழைக்கின்றதோடு மட்டுமல்ல, அதை வைத்து அரசி யலில் நடமாடலாம் என்று நினைக்கிறார்கள்.

மிக அருமையான கருத்துகள் - ஆய்வரங்கம் போல் எல்லோரும் பேசினார்கள்.

நாம் என்னென்ன ஆபத்துகளை சமாளிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

மீண்டும் மதவெறி இந்த நாட்டில் 

ஆட்சி பீடத்தில் ஏறக்கூடாது

இந்தக் கூட்டணி - இது வெறும் திருப்பூரிலே கூடிய ஒரு மாநாடு அல்ல. இந்தியாவிற்கே வழிநடத்திச் செல்லக் கூடியது.  2024 ஆக இருந்தாலும், 2023 ஆக இருந்தாலும், அடுத்த தேர்தலிலே மீண்டும் மதவெறி இந்த நாட்டில் ஆட்சி பீடத்தில் ஏறக்கூடாது; அதன் தலையில் மகுடம் இருக்கக்கூடாது; அதைக் கழற்றி வைக்க வேண்டும் - அதற்குரிய திட்டத்தை எப்படி உரு வாக்குவது என்பதற்கான ஒரு தொடக்கம் இந்த மாநாடு.

ஓர் அற்புதமான தீயணைப்பு நிலையம்

இன்னும் இந்த அணித் தலைவர்களைப் பார்க்கும் பொழுது நண்பர்களே, நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ, ஆனால், எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்கள் எப்படி பார்க்கிறோம் என்று சொன்னால், இது ஓர் அற்புதமான தீயணைப்பு நிலையம்.

தீயணைப்பு வீரர்கள் எப்போதும் தயாராக இருப் பார்கள்; எப்பொழுதும் தயாராக இருப்பார்கள் என்பது மட்டுமல்ல; எதற்கும் தயாராக இருப்பார்கள்; காப்பாற்று வதற்காக, உயிரை இழப்பதற்குக்கூட தயாராக இருப் பார்கள். அதுபோலத்தான் நண்பர்களே, எல்லாவற்றை யும் விட்டுவிட்டு, இந்த நாட்டைக் காப்பாற்றவேண்டும்; மக்களைக் காப்பாற்றவேண்டும்; மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டணி.

ஜனநாயகம் இன்றைக்கு எப்படி கொச்சைப்படுத்தப் பட்டு இருக்கிறது. உலகத்திலேயே விசித்திரமான ஒன்று இந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நம்முடைய நாட்டு ஜனநாயகம் ஒரு தனி ரகமான ஜனநாயகம். ஜனநாயகம் என்பது பெயரளவில் - ஆனால், உள்ளே என்ன இருக்கிறது?

அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று கேட்பதற்காக இத்தனைக் கட்சித் தலைவர்கள்.

அரசமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறீர்களா?

இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இப்பொழுது, ஒன்றிய ஆட்சியைப் பார்த்து, மோடியைப் பார்த்து, அமித்ஷாவைப் பார்த்து, மற்றவர்களைப் பார்த்துக் கேட்கின்ற கேள்வி என்னவென்றால், வேறொன்று மில்லை - அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிர மாணம் எடுத்துக்கொண்டீர்களே, அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறீர்களா? அதைக் காப்பாற்று கிறீர்களா? அதைப் பின்பற்றுகிறீர்களா? என்று கேட்கவேண்டி இருக்கிறது.

இன்னொன்றையும் அழகாக இங்கே பேசிய தலை வர்கள் சுட்டிக்காட்டினார்கள். இவ்வளவு கருத்துகளை நாம் சொன்னாலும், நம் பக்கம் நியாயம் இருந்தாலும், எப்படி அவர்கள் இரண்டு முறை பதவிக்கு வந்து விடுகிறார்கள்? எப்படி இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சிகளைக் கைப்பற்றி, அடுத்து நாங்கள்தான் என்று ஒரு பொய் நம்பிக்கையை விதைக்கிறார்கள் என்று சொல் லும்பொழுது நண்பர்களே, ஒன்றை நீங்கள் நினைவிலே வைத்துக்கொண்டால், அதற்கு விடை என்பது மிகச் சுலபமானது.

அதில் சிக்கல் ஒன்றும் இல்லை.

‘மாயை’யின் பிம்பம் 

உடைக்கப்படவேண்டும்

நீண்ட நாள்களுக்கு முன்பாக,  தெருக்களில் நடந்த நிகழ்ச்சியை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்; அதற்குப் பெயர் மோடி வித்தை; வித்தைகளால் அவர் கள் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்களே தவிர, அவர்களுடைய அறிவினால், ஆற்றலினால், மக்களு டைய பேராதரவினால் அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை; அப்படி ஒரு மாயையை சிறப்பாக உண்டாக்கிக் கொண் டிருக்கிறார்கள்; அந்த ‘மாயை’யின் பிம்பம் உடைக்கப் படவேண்டும். அதைச் செய்வதற்குத்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

அந்த மதவெறித் தீயை, ஜாதி வெறித் தீயாக அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; நடத்து கிறார்கள். அதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் பல நேரங்களிலே வித்தைகளைக் காட்டுகிறார்கள்.

உதாரணத்திற்குச் சொல்லுங்கள், நாங்கள் நடத்துவது தான் ஜனநாயகம் என்று அவர்கள் நடத்துகிறார்கள்; எட்டாண்டுகாலம் ஜனநாயகத்தை உலகமே திரும்பிப் பார்க்கிறது என்று சொல்கிறார்கள்.

காந்தியாரைக் கொன்றவர் 

எங்கே பயிற்சி எடுத்தார்?

அதேநேரத்தில், இங்கே அழகாக சொன்னதைப் போல, யார் யாரெல்லாம் காங்கிரசில் தியாகம் செய் தார்களோ, அவர்கள் படத்தையெல்லாம் தங்கள் பக்கம் போட்டு, தங்கள் முன்னோடிகள் என்று சொல்லுகிறார்கள்.

இதையெல்லாம் வித்தையாக அவர்கள் காட்டு கிறார்கள்.

காந்தியாரைக் கொன்றவர் எங்கே பயிற்சி எடுத்தார் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், காந்தி உருவத்தை மேலே காட்டுவார்கள்.

அம்பேத்கருடைய கருத்திற்கு நேர் தத்துவத்தைக் கொண்டவர்கள் அவர்கள். ஆனால், அம்பேத்கர் படத்தைக் காட்டுவார்கள்.

பெரியார் பல்கலைக் கழகத்தில் வித்தைகளைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள்

இன்னுங்கேட்டால், பெரியார் படத்தை, பெரியார் இயக்கத்தில் நுழையவிடவில்லை ஆனாலும், பெரியார் பல்கலைக் கழகம் என்று ஒன்று அரசாங்கத்தில் இருந்தால், அதற்குள்ளேகூட நுழைந்து கொஞ்சம் வித்தைகளைக் காட்டலாம் என்று அவர்கள் நினைப்பார்கள்.

எனவே, அந்த வித்தைகள் மூலம்தான் அவர் கள் செய்கிறார்கள்; ஜனநாயகத்தின்மீது அவர் களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது உண்மை யாக?

ஒரே ஒரு கேள்வி - இங்கே நம்மால் தேர்ந் தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

மக்களவையில், 

துணை சபாநாயகர் உண்டா?

இன்னும் ஒன்றரை ஆண்டுகாலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இந்திய மக்கள் சபையில், லோக் சபை என்று அழைக்கப்படக் கூடிய அந்த மக்களவை யில், துணை சபாநாயகர் உண்டா?

இங்கே நம்முடைய எம்.பி.,க்கள் சுப்பராயன், திருமாவளவன்  மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன; நாடாளுமன்றமும் நடக்கிறது; நடக்கிறது என்று சொல்வதைவிட, நாடாளுமன்றத்தில் அமளி துமளிகள். ஏனென்றால், ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பேசி விடக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு சிக்கலை - எதிரிகளை ஆத்திரமூட்டக் கூடிய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

உண்மை ஜனநாயகத்திற்கு, உண்மை அரசமைப்புச் சட்டத்திற்கு அங்கே இடமில்லை

இதற்கு ஜனநாயகம் என்ற போர்வை போர்த்தப்பட்டு இருக்கிறதே தவிர, ஜனநாயகம் என்று காட்சிப்படுத்தப் பட்டு இருக்கிறதே தவிர,  பிம்பப்படுத்தப்பட்டு இருக் கிறதே தவிர, உண்மை ஜனநாயகம் இல்லை.

எப்படி உண்மை காந்தியார் இல்லையோ,

எப்படி உண்மை அம்பேத்கருக்கு அங்கே இடமில் லையோ, அதேபோலத்தான் உண்மை ஜனநாயகத்திற்கு, உண்மை அரசமைப்புச் சட்டத்திற்கு அங்கே இடமில்லை என்று சொல்லக்கூடிய சூழ்நிலை.

எல்லாவற்றிற்குமே அவர்கள் தலைகீழ் பிரச்சாரம் செய்வார்கள்; பிரச்சார இயந்திரம்; 

ஊடகங்கள் எல்லாம் யாரிடத்திலே இருக்கிறது?

பெரும் பெரும் முதலாளிகளிடம் இருக்கிறது.

அம்பானிகளிடமும், அதானிகளிடமும், டாட்டாக் களிடமும், மற்றவர்களிடமும் இருக்கிறது. ஆகவே, அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான் ஊடகங்கள் ஒரு சார்பாக இருக்கின்றன.

எனவே, தினசரி அவர்களுடைய புகழ்மாலைதான். இவ்வளவு பெரிய மாநாடு, இவ்வளவு பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதே, இதுபற்றிய செய்திகள் நாளை நாளேடு களில் எந்த அளவிற்கு வரப் போகிறது? ஒன்றும் வராது.

அதேநேரத்தில், அண்ணாமலையார்கள் எங்கேயா வது அறிவித்தால், ‘அரோகரா' அவ்வளவுதான்; அதற்கு வித்தைகள் காட்டுவார்கள்.

யாரை, எப்படி விலைக்கு வாங்குவது என்ற வித்தை தெரியும் அவர்களுக்கு!

இதற்கு பெயர்தான் சுருக்கமான ஒரே சொல் ‘வித்தை!’

அந்த வித்தை தெரியும் அவர்களுக்கு- யாரை, எப்படி விலைக்கு வாங்குவது என்று.

அவர்கள் ஓட்டு வாங்கி, மக்களின் ஆதரவைப் பெற்று இந்தியாவிலே ஆட்சிக்கு வந்திருக்கிறார்களா? என்பதை தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்.

இன்னொரு மிக முக்கியமான கருத்தை சகோதரர் திருமா அவர்கள் இங்கே அழகாகச் சுட்டிக்காட்டினார்.

எப்படி திரிபுராவில் நடந்ததோ, அதுபோல ஒரு பெரிய ஆபத்து அண்மையில் இருக்கிறது.

நம்முடைய தோழர்கள் இங்கே வந்திருக்கின்றவர்கள் எல்லாம் மிக முக்கியமானவர்கள். நம்முடைய உரை களை மற்றவர்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 

ஆகவே, அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள்.

அப்படி சிந்திக்கின்ற நேரத்தில், என்ன கொடுமைகள் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர்களுடைய பிரச்சாரம், எவ்வளவு தலைகீழாக, அப்பாவி மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார் கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.

2021-2022 ஆம் ஆண்டில் 

78 முறை பெட்ரோல் விலை ஏற்றம்!

நேற்று ‘விடுதலை’யில்கூட தலையங்கமாக அதனைச் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், இப்பொழுது இருக்கும் ஒன்றிய ஆட்சியிலே எத்தனை முறை நடந்திருக்கிறது?

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கக்கூடிய ஆம் ஆத்மி கட்சி  உறுப்பினர் ராகவ் சாதா என்பவர் ஒரு கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பு கிறார்.

அவருடைய கேள்விக்கு ஒன்றிய இணைய மைச்சர் ராமேஸ்வர் டெலி பதில் சொல்கிறார்.

தயவு செய்து கவனியுங்கள்; அவர்கள் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு அடையாளம்-

2021-2022 ஆம் ஆண்டில், 20.7.2022 வரையில், பெட்ரோல் விலையானது 78 முறையும், டீசல் விலையானது 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஏழு நாள்கள் குறைக்கப் பட்டுள்ளது.

டீசல் விலை 10 நாள்கள் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை, 280 நாட்களும், டீசல் விலை 279 நாள்களும் மாற்றம் செய்யப்படவில்லை.

மேலும் ஒன்றிய அரசுக்கு 2016 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த வருவாய்  எவ்வளவு? என்ற கேள்விக்கும் பதிலளிக்கப்பட் டுள்ளது. அதன்படி 2016 முதல் 2022 காலகட்டம் வரை கலால்வரி மூலமாக ரூ.16 லட்சம் கோடி வரு வாயாகக் கிடைத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறியுள்ளார்.

அவர்களுடைய திசை திருப்பல் வேலை!

இப்பொழுது என்ன சொல்கிறது ஒன்றிய அரசு? தமிழ்நாடு அரசு ஏன் வரியைக் குறைக்கவில்லை என்று கேட்கிறது.

இதுதான் அவர்களுடைய திசை திருப்பல் வேலை. ஒவ்வொரு இடத்திலும் பார்த்தீர்களேயானால், இதே மாதிரி திசை திருப்பலும், பொய்யைக் கூறுவதும், உண் மைக்கு மாறாகத் திரித்துச் சொல்லுவதுமாக அவர்கள் இருக்கிறார்கள்.

எனவே, இந்தக் காலகட்டத்திலே நண்பர்களே, மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி இன்னொன்று.

அதைத்தான் நம்முடைய சகோதரர் திருமா அவர்கள் சொன்னார்கள். அது மிக ஆழமான செய்தி.

கோயபல்சின் குருநாதர்கள் இவர்கள்

நாமெல்லாம் நிறைய பேர் என்ன நினைக்கிறோம் - நம்முடைய தோழர்கள், பொறுப்பாளர்கள் எல்லாம் - ஊடகங்களை சரிபடுத்தவேண்டும் - பிரச்சாரம் செய்யவேண்டும் - பொதுக்கூட்டங்களை நடத்தவேண் டும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அதை யெல்லாம் தாண்டி இப்பொழுது வேகமாக நடந்து கொண்டிருப்பது - பொய்யைப் பரப்புவதற்கு ஒரு பேக்ட்டரி வைத்திருக்கிறார்கள். அதை முழுக்க முழுக்க கோயபல்சிடம் கற்றுக்கொண்டவர்கள் இவர்கள்; கோயபல்சின் குருநாதர்கள். 

ஆகவே, ஒரு பெரிய பல்கலைக் கழகம் நடத்துவது போன்று இங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வாட்ஸ் அப், கட்செவி, முகநூல் போன்றவற்றில் எவ்வளவு வேகமாகப் பொய்யைப் பரப்புகிறார்கள் என்று சொன்னால், 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் அடித்தால், எவ்வளவு வேகம் இருக்குமோ, அவ்வளவு வேகமாக அதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்மவர்கள் பல பேர் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஜாதி வெறியை இந்தியா முழுவதும் 

மறு உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!

ஆங்காங்கே உள்ளூர்க்காரர்களின் ஜாதிப் பெருமை; உதாரணத்திற்குக் கள்ளக்குறிச்சி நிகழ்ச் சியை நண்பர் அவர்கள் இங்கே சொன்னார்கள். அதுபோன்று சில ஜாதிகளைத் தூக்குவது; சில ஜாதிகளை இறக்குவது. 

அவர்கள் தாக்குவது போன்று செய்தி போடு வது; இவை அத்தனையும் சேர்ந்து என்னுடைய ஜாதி பெரிது - உன்னுடைய ஜாதி சிறுமை - என்னுடைய ஜாதிக்குப் பெருமை என்று சொல்லி, வெறியைத் தாண்டி ஜாதி வெறியை இந்தியா முழுவதும் மறு உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நண்பர்களே, இளைஞர்கள், படித்தவர்கள், பட்டதாரிகள் எப்பொழுது பார்த்தாலும் இணை யத்தைத் தட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா - அவர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், உடன டியாக இதற்கு மாற்றுப் பணியை, உண்மையை அவ்வப்பொழுது எடுத்துச் சொல்லவேண்டிய பணியை நீங்கள் இடையறாது செய்யவேண்டும்.

இது மிகமிக முக்கியமானதாகும்; மிகவும் அவசரமானதாகும். அதற்காகத்தான் தீயணைப்புத் தத்துவம் என்று சொன்னோம்.

இந்தத் தீ இருக்கிறதே, செய்தீதீதீ..........

நாம் பரப்பினால், செய்தி -

அவர்கள் பரப்புகின்ற புளுகு இருக்கிறதே அது செய்தீ.........

இன்றைக்கு வரக்கூடிய ஆபத்துகளை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக ஒரு கருத்தைச் சொல்லி என் னுரையை நிறைவு செய்கிறேன்.

தமிழ்நாட்டில் நாம் பெற்ற வெற்றிக்குக் காரணம் கொள்கைக் கூட்டணிதான்!

நாம் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக்கின்றோம். அதற்கு என்ன காரணம்?

கொள்கைக் கூட்டணிதான்.

இங்கே எது நமக்குப் பொதுவானதோ அதை சொல்ல வேண்டும். இங்கே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி அவர்கள் அழகாகச் சொன்னார்கள்.

நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள்; கம்யூனிஸ்டுகளும் அதே கொள்கையைக் கொண்டவர்கள்தான், அதில் ஒன்றும் மாற்றமில்லை. கடவுள் மறுப்பாளர்கள், மதத்தை ஏற்காதவர்கள். ஆனால், எல்லோரும் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றோமே, நெருக்கமாக இருக்கின்றோமே!

நம்முடைய பேராசிரியர் காதர் மொகீதன் பாய் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது, மாமா முத்தரசன் அவர்களே என்றுதானே சொன்னார்.

இங்கே மாமன், அண்ணன், தம்பி இதுபோன்ற உறவுகள்தானே! இந்த உறவு எப்படி வருகிறது?

மனிதநேயம் என்ற கொள்கையின் உடன்பாட்டின் அடிப்படையில் இந்த உறவுகள் இங்கே மலர்ந்திருக் கின்றன.

பாபர் மசூதி இடிப்பின்போது அமைதிப் பூங்காவாக இருந்த மாநிலம் தமிழ்நாடுதான்

தமிழ்நாடு, தமிழ் மண், பெரியார் மண், சமூகநீதி மண் அதை எடுத்துச் சொன்னதினால்தான், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடிற்று - மதவெறி அங்கே தலைவிரித்து கோரத்தாண் டவம் ஆடிற்று.

ஒரே ஒரு மாநிலம் அமைதிப் பூங்காவாக இருந்தது என்றால், அது தமிழ்நாடுதான் என்ற பெருமை இருக்கிறதே, அந்தப் பெருமை எப்படி?

திராவிடப் பார்முலா - திரவிடியன் மாடல்

திராவிடம் என்றால் என்ன? என்பதை முதலமைச்சர் விளக்கினார்!

அதைத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திராவிடம் என்றால் என்ன என்பதைப்பற்றி பாடம் எடுப்பதைப் போன்று சொன்னார்.

நமக்கு யார் பொது எதிரி? அதை மட்டும் அடை யாளம் காணவேண்டும்.

எதிரியை நண்பனாக, நண்பனை எதிரியாக நினைக்கக் கூடாது.

நமக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை - நமக்கு நிரந்த எதிரிகளும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

நமக்குக் கொள்கை ரீதியாக நிரந்தர நண்பர்கள் உண்டு; கொள்கை ரீதியாக நிரந்தர எதிரிகளும் உண்டு.

அதில் தெளிவாக இருக்கவேண்டும். அங்கே குழப் பம் ஏற்பட்டால்தான் நமக்குப் பலகீனம்.

அதுமட்டுமல்ல நண்பர்களே, பெரியார் சொன்னதை இந்த நேரத்தில் இங்கே நினைவூட்டவேண்டும். இந்தக் கூட்டணியினுடைய பலம் அங்கேதான் இருக்கிறது.

எது நம்மைப் பிரிக்கிறதோ, 

அதை அலட்சியப்படுத்துவோம்!

எதை நம்மை இணைக்கிறதோ, அதை உறுதிப் படுத்துவது மட்டுமல்ல; அகலப்படுத்துவோம்.

எது நம்மைப் பிரிக்கிறதோ, அதை அலட்சியப் படுத்துவோம்.

அதுதான் மிக முக்கியமானதாகும்.

எனவே, பிரிப்பது எது?

அவருக்குக் கடவுள் நம்பிக்கை, அவர் தொழுகிறார். அது எங்களைப் பிரிக்கும். அதை நான் பெரிதுபடுத்தமாட்டேன்.

நாங்கள் கைலாகுக் கொடுத்து இருவருமே ஜன நாயகத்தைக் காப்பாற்றவேண்டும்; மனித உரிமை களுக்காகப் போராடவேண்டும் என்று நினைக்கின் றோமே, அதுதான் எங்களுக்குப் பெரிது - அதுதான் சுயமரியாதை - அதுதான் சமூகநீதி என்று சொல்லும் பொழுது, அதை அகலப்படுத்துவோம்.

தமிழ்நாட்டை எந்தக் கொம்பனாலும் 

அசைத்துப் பார்க்க முடியாது

இந்த ரகசியம் - இந்த அணுகுமுறை - தமிழ் நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், தமிழ் நாட்டை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது - இங்கே ஒரு நாளும் காலூன்ற முடியாது.

திராவிட மாடல் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டு மல்ல - இந்தியா முழுவதும் கொண்டு வருவோம் என்ற தன்னம்பிக்கையின் சிகரங்களாக நாங்கள் இருக்கின்றோம்.

இதைச் செய்கின்ற நேரத்தில், அடுத்து வருகின்ற காலகட்டத்தில், நம்முடைய எம்.பி.,க்கள் இருக்கிறார்கள்; இடதுசாரிகளுடைய பங்களிப்பு மிக முக்கியம். அகில இந்திய  அளவில் இருக்கக் கூடிய நிலையில், நீங்கள் இந்தக் கூட்டணியை அகில இந்திய அளவில் கட்டுகிறபொழுது, தன் முனைப்புக்கு இடமில்லாத அளவிற்கு வர வேண்டும்.

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமா? இல்லையா?

என்னுடைய கட்சி - என்னுடைய தலைமை - யார்? என்று இப்போது சொல்லவேண்டிய அவசியமில்லை. 

இந்தக் கொள்கை வெற்றி பெறவேண்டுமா? இல் லையா?

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமா? இல் லையா?

பாசிசம் வீழ்த்தப்படவேண்டுமா? இல்லையா?

நெருப்பு அணைக்கப்பட வேண்டுமா? இல்லையா?

தெருவில் உள்ள ஒரு வீட்டில் நெருப்புப் பிடித்துக் கொண்டால், எல்லோரும் ஓடிவந்து அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்றுதானே தண்ணீர் ஊற்றுகிறோம்.

அந்த நேரத்தில், நான் கருப்புச் சட்டை, நான் வரமாட்டேன்; அவர் சிவப்புச் சட்டை அவர் வர மாட்டார்; இன்னொருவர் நாமம் போட்டவர், அவர் வர மாட்டார்; இன்னொருவர் பக்தர், இவர் வந்தால், அவர் வர மாட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோமா?

ஜாதி வெறி தீயை 

அணைக்கவேண்டும்!

நம்முடைய நோக்கம் என்ன?

அந்தத் தீயை அணைக்கவேண்டும் என்பதுதான்.

நம்முடைய நோக்கம் என்ன?

மதவெறி தீயை அணைக்கவேண்டும்; ஜாதி வெறி தீயை அணைக்கவேண்டும் என்பதுதான்.

தமிழ்நாட்டைப் பார்த்தீர்களேயானால், கூட்டணி ஒருங்கிணைப்பு என்பது மிக முக்கியம்.

இந்த மாநாட்டின் தலைப்பு சமூக நல்லிணக்க மாநாடு என்பதுதான். 

சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு முன்பு, நமக்குள் நல்லிணக்கம் - கட்சிகளுக்குள் நல்லிணக்கம்  - கொள்கைகளுக்குள் நல்லிணக்கம்.

இது முதற்கட்டம் -

இந்த இணக்கம் ஏற்பட்டால், சமூக நல்லிணக்கத்தை எதிரிகளால் அசைத்துவிட முடியாது என்கிற எண்ணத்தோடு, மாநில உரிமைகளையும் பாதுகாக்கக் கூடிய எண்ணம் வரும். அதைப்பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

தமிழ்நாட்டினுடைய மக்கள் சக்தி - 

நிச்சயமாக வெற்றி பெறும்!

அதைவிட முக்கியம் தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசாங்கம். வெறும் தபால்காரராக இருக்கவேண்டிய ஓர் ஆளுநர், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதலமைச்சரைவிட, சூப்பர் சீப் மினிஸ்டர் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு, இங்கே ஆட்சி நடத்துகிறார் என்று சொன்னால், அதை எதிர்த்து வெல்லக்கூடிய மக்கள் சக்தி இருக்கிறது - அதுதான் தமிழ்நாட்டினுடைய மக்கள் சக்தி - நிச்சயமாக வெற்றி பெறும்.

சில அடிமைகள் கூலிக்குத் தங்கள் கட்சியை அடமானம் வைப்பார்கள்!

எதிர்க்கட்சிகளை வெற்றி பெற விடமாட்டார்கள்; அப்படியும் மீறி வெற்றி பெற்றுவிட்டால், ஆளுநர்கள் மூலம் வித்தைகள் செய்து கவிழ்க்கவேண்டும்; கட்சியை விலைக்கு வாங்கவேண்டும்; கட்சியைப் பிளவுபடுத்த வேண்டும்; சில அடிமைகள் கூலிக்குத் தங்கள் கட்சியை அடமானம் வைப்பார்கள்.

இப்படித்தான் இந்தியா முழுவதும் அரசியலை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தோழர் பாலகிருஷ்ணனின் வருத்தம்!

எனவேதான், இந்த வித்தைகளை மக்களிடம் விளக்கவேண்டும். அப்படி விளக்குவது மட்டுமல்ல, நாமே உணர்ந்துகொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும், அருமை நாடாளுமன்ற உறுப்பினர்களே, அருமை அகில இந்திய கட்சியை நடத்தக்கூடிய இடதுசாரி தோழர்களே, எப்படி இந்த மேடை எல்லோரையும் ஒன்று சேர்த்திருக்கிறதோ - இங்கே பாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்கள், கேரளாவில், நமக்கும் - காங்கிரசுக்கும் நல்லிணக்கம் இல்லையே என்று வருத்தப்பட்டார்கள்.

கண்டிப்பாக நல்லிணக்கத்தை உண்டாக்கலாம்; கொஞ்சம் மனசு வேண்டும்; பொது எதிரி யார் என்று நினைத்துப் பாருங்கள்; அவன் வரக்கூடாது; முதலில் பொது எதிரியை வீழ்த்துவோம்; பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம்.

வீட்டில் பிடித்த தீயை அணைத்துவிட்டால், வீட்டின் எந்தப் பாகத்தில், யார் அமர்வது என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

வீடு முழுவதும் தீப்பற்றி, வீடு தீக்கிரையானால் என்ன செய்ய முடியும் என்கின்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும். அது உங்களால் முடியும்.

நாங்கள் சாதாரண தொண்டர்கள்; அதற்காக நாங்கள் என்னென்ன பணிகள் செய்யவேண்டுமோ அதை செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

பதவி நாற்காலியில் யார் உட்கார வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!

காரணம் என்னவென்றால், நாங்கள் எந்த நாற் காலிக்கும் போனதே கிடையாது; எந்த நாற்காலியில், யார் உட்காருவது என்று நாங்கள் பார்ப்பது கிடையாது.

ஆனாலும், அந்த நாற்காலியில் யார் உட்கார வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்; யார் உட்காரக் கூடாது என்பதில் அதைவிடத் தெளிவாக இருக்கிறோம்.

அந்த முறையிலேதான், உங்களுடைய முயற்சி எல்லாவற்றிலும் வெற்றி பெறவேண்டும்; அதற்கு அடித்தளம் இந்தத் திருப்பூரில் இன்றைக்குத் தொடங் கப்பட்டு இருக்கிறது. 

எதிர்கால இந்தியாவை 

காப்பாற்றப் போகின்ற மாநாடு!

எனவே, இது வெறும் 25 ஆவது மாநில மாநாடு மட்டுமல்ல நண்பர்களே, வெறும் சமூக நல்லிணக்க மாநாடு மட்டுமல்ல நண்பர்களே, இது மாநில உரிமை களைக் காக்கின்ற மாநாடு மட்டுமல்ல நண்பர்களே! இதுதான் எதிர்கால இந்தியாவை காப்பாற்றப் போகின்ற மாநாடு!

என்பதை எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, 

இது முடிவல்ல,  இது தொடக்கம்! 

இதுதான் தொடக்கம்!!  நல்ல தொடக்கம்!!! 

புரட்சிகரத் தொடக்கம்! 

வெற்றியை அழைத்து வரக்கூடிய அச்சாரத் தொடக்கம் என்று கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றி னார்.

No comments:

Post a Comment