மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும் மனமுடைந்து போகாதீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

மறைந்தார் நமதருமைத் தலைவர்! எனினும் மனமுடைந்து போகாதீர்!


தேடற்கரிய ஒப்பு உயர்வு அற்ற நமதருமைத் தலைவர் கனம் பனகால் ராஜா சர் ராமராய் நிங்கவாரு திடீரென்று நம்மை விட்டு சனிக்கிழமை இரவு 1 மணிக்கு பிரிந்து விட்டார் என்கின்ற சங்கதியைக் கேட்டவுடன் பொது வாக இந்திய மக்களுக்கும் சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் அளவே இருக்காது. ஒரு நல்ல நெருக்கடி யான சந்தர்ப்பத்தில் தலைவரின் காலம் முடிவு பெற்ற தால், பெரியதும் திறமையானதுமான ஒரு யுத்தம் முளைத்து வெற்றி குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், போர் வீரர்கள்  சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்து திரும்பியபோது சேனாதிபதி இறந்து போய்விட்டார் என்ற சேதி கிடைக்குமானால் அந்தச் சமயத்தில் அப்போர் வீரர்களின் மனம் எப்படி துடிக் குமோ அதுபோல் நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார் கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

- - - - -

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவாய்க் கருதப் பட்ட மக்கள் அதாவது தீண்டாதார், கீழ்ஜாதியார், ஈன ஜாதியார், சூத்திரர் என்பனவாகிய ‘பிறவி இழிவும்‘ ‘பிறவி அடிமைத்தனமும்‘ சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர். அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற அரசி யல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற சமுகத்திற்கு விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரசார கூலிகளுக்கு விரோதி. இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும் படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும் படியான நிலையில் நெருப்பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகுகஷ்ட மான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். நமது தலைவர் பனகால் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்.

- - - - -

அவர் சென்னை அரசாங்கத்தை மாத்திரமல்லாமல் அவசியமானபோது இந்திய அரசாங்கத்தையும் பார்லிமெண்ட்டையும்கூட மிரட்டி நடுங்க வைத்து வந்திருக்கிறார். மற்றும் அவர் அதிகார ஆட்சியான ஆறு வருஷ மந்திரி காலத்தில் தனது மந்திரி வேலையை ராஜினாமா கொடுத்தது குறைந்தது மூன்று நான்கு தரம் இருக்கும் என்றே சொல்லலாம். 1921இல் தொழிலாளருக் காக ஒரு தடவையும், 1924இல், 1926இல் வெளியில் சொல்லக்கூடாத விஷயத்திற்காக ஒரு தடவையும், தேவஸ்தான ஆக்ட்டுக்காகவும் சர். சி.பி. அய்யர் அக்கிரமத்திற்காகவும் ஒரு தடவையும் மற்றும் சில சமயத்திலும் அவர் இராஜினாமா கொடுக்கத் துணிந்ததும் இராஜினாமா கடிதம் எழுதி கவர்னர் பிரபுவுக்கு அனுப்பி விட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டதும், கவர்மெண்ட் மெம்பர்கள் ஜாமீனாக இருந்து ராஜினாமாவை வாபசு பெற்றுக் கொள்ளச் செய்ததும் அவரது உத்தியோக அலட்சியத்தை காட்டப் போதுமானது. 

- - - - -

மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் தடைசெய்ய முடியாத தத்துவம் தலைவர்கள் போவதும் வருவதும் முரண்பாடில்லாத வழக்கம். இதற்குமுன். எத்தனையோ தலைவர்கள் மறைந்து போனார்கள். எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். நமது தலைவரும் மாட்சிமை தங்கிய ஜார்ஜ் மன்னர் பிறந்த அன்றே , அதே நேரத்தில் பிறந்து சாகும் வரை நமக்காகவே பனகால் அரசர் உழைத்து 62 வயதான பிறகே உயிர்நீத்தார். இந்திய மக்களின் சராசரி வயது 24 என்றால் சராசரிக்கு மேல் 39வருஷம் வாழ்ந்திருந்து நமக்கு செய்திருக்கும் நன்மைகளை உணர்ந்து திருப்தி அடையாமல் இன்னும் கவலைப்பட்டுக் கொண்டு மனமுடைந்து போவதானது நமது மயக்கத்தையும் பேராசையையும் காட்டும். எந்தத் தலைவர் அல்லது எந்தப் பெரியார் சாகாமல் “சிரஞ்சீவியாய் வாழ்வதை நாம் பார்க்கிறோம்? இப்படி இருக்க, உலகில் மக்களில் ஒருவர் இறந்ததற்காக ஒருவர் ஏன் துக்கப்படுகின்றார்கள் என்று கேட்போமானால், அது இறந்தவரின் அருமை பெருமையைப்பற்றி பேசவும் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை உணர்ந்து அதன்படி நடக்கவும் அவர்களது உயர்ந்த குணத்தைப் பின்பற்றவும் சித்தரப்படுத்திக் கொள்ள இந்த சமயத்தை உபயோகித்துக் கொள்வதற்காகத்தான் என்பதே எமது அபிப்பிராயம். அன்றியும் நாயர் பெருமான் அவர்களும் இதேமாதிரி நெருக்கடியான சமயத்தில் தேசம் விட்டுத் தேசம் போய் உயிர் துறந்தார். தியாகராய வள்ளலும் இதேபோல் இறந்தார். பனகால் வீரரும் அவர்களைப் பின்பற்றி நடந்தார். ஆனால் நாயர் பெருமான் காலமானவுடன் மக்கள் கண்ணிலும் மனதிலும் தியாகராய வள்ளல் தோன்றினார். அது போலவே தியாகராய வள்ளல் மறைந்தவுடன் நமது பனகால் வீரர் தோன்றினார். பனகால் வீரர் மறைந்த பிறகு யாரும் தோன்றக்காணோம். அவர் மறைந்த பிறகு சற்றேறக்குறைய இரவும் பகலுமாக 192 மணி நேரம் லட்சக் கணக்கானவர்கள் காலம் சென்ற தலைவரைப் போல் ஒரு தலைவரைத் தேடித்தேடி களைத்தாய் விட்டது. இன்னமும் ஒருவரும் புலப்படவில்லை. இது ஒன்றே நமது பனகால் வீரர். ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர் என்பதைக் காட்டுகின்றது. 

- ‘குடிஅரசு’ தலையங்கம், 23.12.1928

'ரிவோல்ட்', 19.12.1928 பக்கம் 1


No comments:

Post a Comment