சபாஷ் தருமபுரி எம்.பி., அரசு விழாவில் பூமிப் பூஜை ஏன்? நேரடியாக எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

சபாஷ் தருமபுரி எம்.பி., அரசு விழாவில் பூமிப் பூஜை ஏன்? நேரடியாக எதிர்ப்பு

சென்னை, ஜூலை 17  அரசு விழாவில் இந்துமத முறைப்படி பூஜை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரின் செயலுக்கு பெரும் வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளன.

அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் எந்தவிதமான கடவுளர் படங்கள் வைத்து, எந்த மத சம்பந்தப்பட்ட பூஜை புனஸ்காரங்களையும் நடத்தக் கூடாது என அரசு ஆணை, உயர் நீதிமன்றத் தடையாணை இருந்தும் அரசு அலுவலகங்களில் துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் அரசு விழாவை ஒரு மத சம்பந்தப்பட்ட விழா போல பார்ப்பனரை வைத்து வேத மந்திரம் ஓதி பூஜை புனஸ்காரங்கள் செய்து அரசு நிகழ்ச்சியை நடத்தி வருவதும், அதை அரசு செய்திக் குறிப்பில்கூட பூமிப் பூஜை என்று குறிப்பிடுவது மாக இருந்து வருகிறது. 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி தி.மு.க. மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் நேற்று (16.7.2022) தொடங்கி வைக்க வந்திருந்தார். பொதுப் பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பூமிப் பூஜையில் அர்ச்சகரை வைத்து இந்து மத முறைப்படி பூஜை செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது. இதைக் கண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பான காட்சிப் பதிவை தனது ட்விட்டரில் பகிர்ந்த அவர், "ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்" என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த காட்சிப் பதிவில் "அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகளை நடத்தக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன்" என அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, "இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது 'திராவிட மாடல்' ஆட்சி. இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தினரை மட்டும் வைத்து நடத்தக்கூடாது" என்று கூறி அதிகாரிகளிடம் கடுமை காட்டிய மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், அங்கிருந்த பூஜை பொருட்களை உடனடியாக அகற்றிய பின்னரே விழாவை தொடங்கி வைத்தார்.

இந்தக் காணொலி வைரலாக, மக்களவை உறுப்பினர் செந்தில் குமாருக்குப் பாராட்டுத் தெரிவித்து பல தரப்பினரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.   ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, "அரசு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற மக்களவை உறுப்பினர்  செந்தில்குமாரின் துணிச்சல்மிகு செயல்பாடு பாராட்டத்தக்கது" என்று பாராட்டியுள்ளார்.  


No comments:

Post a Comment