சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் ஆக்கிரமிப்பு என்பதே இருக்காது உயர்நீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் ஆக்கிரமிப்பு என்பதே இருக்காது உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை, ஜூலை 12 சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் ஆக்கிரமிப்புகளே இருக்காது என உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. 

 சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆனந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆரணியாற்றில் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. 

ஆனால், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கரைகளை பலப்படுத்தும் பணிகளை மட்டும் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையான தாக்கீது வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று கூறினார். 

இதற்கு நீதிபதிகள், "ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அதை உடனே அப்புறப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? ஒவ்வொரு ஆக்கிரமிப்புகளையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் தான் அகற்றுவீர்களா? சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் ஆக்கிரமிப்புகள் என்பதே இருக்காது" என்று கருத்து கூறி, ஆரணியாற்றில் ஆக்கிரமிப்பை அகற்ற அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்டு 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


No comments:

Post a Comment