பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம்: கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம்: கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஜூலை 10  பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை உடனடியாக கலைக்க மருத்துவக் குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, வார இறுதி நாட்களில் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிந்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், அந்தச் சிறுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவினை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் காணொலி மூலமாக நீதிபதி பேசினார். அதில், சிறுமியின் வயது, கருவின் காலம் அடிப்படையில் கருவை கலைக்கலாம் என மருத்துவ அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து சிறுமியிடமும் நீதிபதி பேசினார். அப்போது அந்தச் சிறுமி கருவை கலைக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் 24 வாரம் வரையிலான கருவை கலைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை உடனடியாக கலைக்க வேண்டும். சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பொது இடங்களில் குப்பை கொட்டியோர், சுவரொட்டி ஒட்டியோரிடம் 15 நாட்களில் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, ஜூலை 10 சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-இன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட் டியவர்களுக்கு ரூ.6.47 லட்சம், கட்டுமானக் கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.7.71 லட்சம், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய நபர்களுக்கு ரூ.99 ஆயிரம் அபராதம் என்று மொத்தம் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக 184 புகார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்  

ரூ.11 கோடி அபராதம் வசூல்

சென்னை, ஜூலை 10   சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையில் 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டது. தொடக்க காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்தபோதிலும், காலப்போக்கில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தவில்லை. இதை சரி செய்ய கடந்த ஏப்ரல் மாதம் அழைப்பு மய்யங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்படி 12 காவல் அழைப்பு மய்யங்களின் மூலம் தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக 11.04.2022 முதல் 03.07.2022 வரையிலான 84 நாட்களில் 2,19,742 பழைய வழக்குகளுக்கான அபராதத் தொகை ரூபாய் ரூ.3,31,49,275 விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அழைப்புச் செய்து 1,674 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1,68,60,000/- அபராதமாக வசூலிக்கப்பட்டது. பெரும்பாலனோர் சராசரியாக ரூபாய் 10,000/- அபராதம் செலுத்தியுள்ளனர். இதன்படி மொத்தம் 2,21,416 பழைய வழக்குகளில் ரூ. 5,00,09,275/- அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், 2,58,835 புதிய வழக்குகளுக்காக ரூ.6,31,58,750 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதன்படி 84 நாட்களில் 4,80,251 வழக்குகளில் மொத்தம் ரூ.11,31,68,025/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை இணையத்தில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு காவல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment