பேரறிஞர்அண்ணா பெயரில் நடைபெறும் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் வழிபாடுகள் நடைபெறலாமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 28, 2022

பேரறிஞர்அண்ணா பெயரில் நடைபெறும் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் வழிபாடுகள் நடைபெறலாமா?

ஆணையர்

சென்னை மாநகராட்சி

சென்னை

அன்புடையீர்,

வணக்கம். சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா என்பது அண்ணா நகரின் அழகுக்கு மேலும் மெருகூட்டும் ஒரு பூங்கா. அன்றாடம் ஆயிரக்கணக்கில் மக்கள், அனைத்து வயதி னரும் வருகை தருகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். 

குழந்தைகள் விளையாடுகிறார்கள். மூத்த குடிமக்கள் நடைபயிற்சியோடு தன் நண்பர் களுடன் அளவளாவ உரிய இடமாக டவர் பூங்காவை தேர்ந்தெடுக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பூங்காவின் முகப்புப் பகுதியில் நுழைந்து இடது புறம் உள்ள பகுதியில் ’நெருக்கமாக மரம் வளர்க்கும் முறையில் அடர்வனக் காடுகள்’ உருவாக்கப்பட்டு, தற்போது அவை மரங்களாக வளரத் துவங்கியுள்ளன.

அண்மைக் காலமாக ஒரு சில நபர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு மரத்தை தேர்ந் தெடுத்து, அதனைச் சுற்றி வந்து கற்பூரம் ஏற்றவும், பூக்களை வைத்து பூசிக்கவும் துவங்கி யுள்ளனர். தற்போது அந்த மரத்தைச் சுற்றி பள்ளம் பறித்துள்ளனர்.

இவை அனைத்தும் அங்குள்ள பணியாளர் களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நடை பெறுகிறது. விசாரித்ததில் அந்த மரம், சிவனுக்கு சொந்தமானது. ஆகவே பூஜை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அண்ணா நகர் டவர் பூங்கா அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு மதம் சார்ந்த, சாராத மக்களும் வருகைதரும், சென்னை மாநகராட்சி யின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பூங்கா.

இதனை ஒரு மதத்தின் அடிப்படையில் வழிபாட்டு தலமாக ஆக்கும் பணியை ஒரு சிலர் மேற்கொள்கிறார்களோ என்ற அய்யம் ஏற்பட்டுள்ளது.

இதை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தி, அடர்வனக் காடுகள் பகுதியை முற்றிலுமாக தடுப்பு வேலி கொண்டு தடுத்திட வேண்டும்.

இல்லையெனில் அதை வழிபாட்டுத் தலமாக ஆக்கிவிடுவார்கள்.

அண்ணா பெயரில் உள்ள ஒரு பூங்கா, பகுத்தறிவு பூங்காவாக இல்லாவிட்டாலும், மதசார்பற்ற முறையில் இருந்திட சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இது குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

தங்கள்,

கோ.கருணாநிதி 

9381007998

நகல்:

·   வணக்கத்துக்குரிய பெருநகர சென்னை மாநகர மேயர் அவர்கள், சென்னை

·    மதிப்பிற்குரிய திரு.எம்.கே.மோகன் அவர்கள், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர்

·    மேற்பார்வை பொறியாளர், கட்டடம்/பூங்கா, பெருநகர சென்னை மாநகராட்சி


No comments:

Post a Comment