கருநாடகத்தில் திராவிட எழுச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

கருநாடகத்தில் திராவிட எழுச்சி

முதன் முறையாக ஆளும் அரசுக்கு எதிராக பெரியார் பதாகைகளை ஏந்தி போராட்டம்

பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் பெரியார் பதாகைகள் அதிகமாக இடம் பிடித்தன.

மகாராட்டிரா, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் செயல்படும் இடது சாரி, தாழ்த்தப்பட்ட சமூக அமைப்புகள் பெரியாரை மிக முக்கியமான ஆளுமையாக கொண்டாடுவதோடு குழந்தைகள் இளைஞர்கள் பங்கு பெறும் பயிற்சி வகுப்புகளில் கூட மற்ற சமூக நீதி தலைவர்களோடு பெரியார் பெயரையும் உணர்ச்சி பொங்க உச்சரித்து உறுதி மொழி எடுத்துக்கொண்ட காணொலிகள் வைரலானதை சமூக வலைதளங்களில் நாம் பார்த்தோம்.

 இந்த நெருப்பு அணைந்து விடாமால் இந்துத்துவ பாசிச சக்திகளை எதிர்த்து திராவிட கருத்தியலை கொண்டு சேர்க்கும் வேலையை பல மொழிகளில் முன்னெடுத்து வரும் வீ திராவிடியன்ஸ்,வீ ஆர் சவுத் இன்டியன்ஸ்,திராவிட சிட்டி மூவ்மென்ட் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன. 

 திராவிட மாநில மக்களிடையே நட்பு ரீதியான உறவை பேணுவதும் ஒன்றிணைந்து நமக்கு எதிரான இந்துத்துவ பார்ப்பனீய ஆரிய சக்திகளை எதிர்ப்பதையும் மொழித்திணிப்புகளை எதிர்ப்பதோடு மொழிப்போர் தியாகிகளைக் கொண்டாடுவது, இந்தி பிரசார சபாவை இழுத்து மூடுவது உள்ளிட்ட பல களசெயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவ்வமைப்பினர் ஒத்த கருத்துடைய கன்னட அமைப்புகளை ஒன்று திரட்டி அம்மாநிலத்தில் தரமான சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

அதில் முக்கியமானது சமீபத்தில் பள்ளிக் குழந்தைகளின் பாடநூல்களை ஆளும் பாஜக அரசு மாற்றியமைத்ததை எதிர்த்து நடந்த போராட்டமாகும்.

திராவிட கருத்தியல் பரவலாக பல தரப்பட்ட மக்களையும் போய் சேர்ந்திருந்தாலும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக வீரியமாக செயல்படும் மாநிலமாக கருநாடகாவைச் சொல்லலாம்.

தமிழர்கள் தமிழை நேசிப்பது போலவே கன்னட மொழியை உயிராக நேசிப்பவர்கள் கன்னடர்கள்..

தற்காலத்தில் தங்கள் மொழியை திராவிட கன்னடா என்றும்  தங்களை திராவிட கன்னடர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சித்தராமைய்யா, குமாரசாமி ஆகிய பெரும் அரசியல் தலைவர்கள் கூட திராவிட கருத்தியலை பேசி வருவது குறிப்பிடத் தக்கது.

சில மாதங்களுக்குமுன் கருநாடக பள்ளிப் பாட புத்தகங்களில் மாற்றங்கள் கொண்டு வருவதாக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.அதன் படி குவேம்பு, பசவண்ணா ஆகிய கன்னடர்கள் தங்கள் உயிராக மதிக்கும் சமூக நீதி தலைவர்களை நீக்கிவிட்டு திரிக்கப்பட்ட வரலாற்றையும் இந்துத்துவ கருத்தியலையும் திணிக்க வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.

அதில் பெரியார்,நாராயணகுரு பற்றிய பாடங்களும் நீக்கப்பட்டன.

அரசியல் சாசன சட்டம் பற்றிய பாடத்தில் அம்பேத்கரின் பெயர் ஒதுக்கப்பட்டு  மற்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. முக்கியமாக இந்திய அரசியலமைப்பின் தந்தை என்ற முன்னொட்டு நீக்கப்பட்டது அனைவரையும் கொதிப்படைய செய்தது.

ஜோதிராவ்பூலே பெயருக்கு முன்பிருந்த மரியாதை முன்னொட்டு நீக்கப்பட்டது.

ஹிந்து ஹிந்தி ஹிந்துஸ்தான் கருத்தியலை வலியுறுத்தும்  ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவரின் கருத்துகள் சேர்க்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு நியாயமாக பயிற்றுவிக்கப்பட வேண்டிய சமய சார்பற்ற நெறி முறைகளை குப்பையில் எறிந்தனர் பாஜகவால் அமர்த்தப்பட்ட பார்ப்பனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட புதிய பாடநூல் குழுவினர்.

இது கருநாடக பண்பாட்டு அமைப்பினர் மொழியியலாளர்கள் திராவிட கருத்திய லாளர்கள் மட்டுமின்றி கருநாடக மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த தைத் தொடர்ந்து ஒத்த உணர்வுள்ள அனைத்து அமைப்புகளையும்  தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து பெங்களூரு விடுதலை பூங்காவில்  ஒரு மாபெரும் போராட்டம் நிகழ்த்தப்பட்டு பழைய பாடநூல்களையே திரும்பவும் கொண்டு வர அரசுக்கு 10 நாட்கள் கெடுவிதிக்கப்பட்டது.   இந்த போராட்டத்தில் இடது சாரி சமய சார்பற்ற அரசியல் கட்சிகள் பல தரப்பட்ட கன்னட அமைப்பினர், தாழ்த்தப்பட்ட மற்றும் ஓபிசி அமைப்பினரோடு மேனாள் பிரதமர் தேவே கவுடா அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக கருநாடகாவில் ஆளும் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பெரியாரின் படங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. 

இதில் முக்கியமானது சங்கிகள் கொஞ்சமும் எதிர்பாராதது என்ன வென்றால்...போராட்டத்தில் பேசியவர்கள் தங்களை திராவிடர்களாக அறிவித்துக் கொண்டதாகும். “இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலர் பெரியார் படத்துடன் படமெடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

திராவிட மாநில மக்கள் ஒற்றுமையாக செயல் பட வேண்டும். நமக்குள் எந்த சண்டையும் கூடாது போன்ற கருத்துகளோடு தமிழ்நாட்டு மக்களை அவர்கள் அரசியலை முன்மாதிரியாக்க் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்று பல கன்னட அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வலியுறுத்தி பேசினார்கள்” என்று போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய வீ ஆர் சவுத் இன்டியன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபி கவுடா தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன் பாபா ராம் தேவ் பெரியாரைப் பற்றி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிராக வட இந்திய மாணவர்கள் கிளர்ந்தெழுந்து பெரியார் படங்களை ஏந்தி போராடியது நினைவிருக்கலாம். ஜேஎன்யு வில் நடந்த போராட்டங்களிலும் அம்பேத்கர் படங்களுக்கு நிகராக பெரியார் படங்களை இடது சாரி மாணவர் அமைப்பினர் பயன்படுத்தினர்.

இப்படி கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பெரியார் தேசிய அளவில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படுவதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், திராவிடமும் பெரியாரும் எல்லைகள் கடந்து வளர்வதை இனி எந்த கொம்பனாலும் யாரும் தடுக்க முடியாது. நாம் அந்த பணியை தொடர்ந்து செய்வோம்.

கதிர் ஆர் எஸ், வீ திராவிடியன்ஸ் 

No comments:

Post a Comment