பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

பிற இதழிலிருந்து...

பழங்குடியினர் நலனில் பாஜகவின் அக்கறையும், குடியரசுத் தலைவர் தேர்வும் 

நீலாம்பரன்

பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பிற சங்பரிவார் அமைப்புகளும் பரப்புவது போல,  ‘ஒரே நாடு, ஒரே திட்டம்’ போன்ற முழக்கங்கள் இருக்கும் நிலையை மேலும் வலுவிழக்க மட்டுமே செய்யும். எப்போதும் போல பா.ஜ.கவின் அரசியல் நாடகமே பழங்குடியின குடியரசுத் தலைவர் தேர்வு.

திரவுபதி முர்மு இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர், இளம் வயது குடியரசுத் தலைவர் ஆகிய பெருமை களை தனதாக்கிக் கொண்டார்.  வழக்கம்போல் இந்தக் காரியம் பா.ஜ.கவினால் வந்தது என ஊட கங்கள் உள்ளிட்ட பலரும் கொண்டாடுகின்றனர். பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.கவினர் இது ஏழைகள், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கான வெற்றி என ஆர்ப்பரித்து வருவதையும் காண முடிகிறது.  இந்த மூன்று சமூகங்களில் ஏழைகளும், பெண்களும் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம். அதீத வரிகள், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை ஆகியவை அனைவரையும் பாதிக்கும் என்றாலும் ஏழைகளும் பெண்களும் அதிகத் துயரங்களை சந்திக்கின்றனர். 

மூன்றாவதாக திரவுபதி முர்முவின் வெற்றி பழங்குடியினரின் வெற்றி என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் பிற சங் பரிவார் அமைப்புகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்வு பா.ஜ.க வின் மேலும் ஒரு ராஜதந்திரம் என்றும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்குகளை பெற உதவும் எனவும் ஊடகங்கள் உள்ளிட்டு பலரும் தங்கள் பிரச்சாரங்களை முடுக்கிவிட்ட நிகழ்வும் நடந்தேறியுள்ளது.  அதேநேரம் பழங்குடியினர் கடந்த பல ஆண்டுகளாக, குறிப்பாக நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு முதல் சந்தித்து வருகின்ற துயரங்களை ஆராய வேண்டிய அவசியமாகிறது.  இவை குறித்து முன்னணி காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தாதது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. அதன் பின்னணியில் இருக்கும் அரசியலும் நாம் அறிந்த ஒன்றே. ஆனால்  பழங்குடியினரின் துயரை, அவர்கள் சந்திக்கும் சவால்களை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். 

பழங்குடியின மக்கள் சார்ந்த மூன்று முக்கியப் பிரச்சினைகள்/திட்டங்களில் பா.ஜ.க அரசுகள் (ஒன்றிய/மாநில) மேற்கொண்டு வரும் நிலைப்பாடுகள் என்ன என்பதை சற்று பார்ப்போம்: வன உரிமைகள் சட்டம், பழங்குடியினர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள் ஆகியவற்றை விரிவாக விவாதித்தால் பழங்குடியின மக்கள் மீதான பா.ஜ.கவின் வாஞ்சை என்ன என்பது புலப்பட்டுவிடும்.

நில உரிமைகளின் நிலை என்ன?

2006ஆம் ஆண்டு இடதுசாரிகளின் நிர்ப்பந்தத் தால் வன உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பழங்குடியினர் மற்றும் வனத்தில் குடியிருக்கும் மக்களுக்கு அவர்களது கைவச நிலங்களுக்கு உரிமை வழங்கி பொருளாதார நிலையை உயர்த்துவதை முக்கியக் குறிக்கோளாக கொண்ட இச்சட்டம் அதன் நோக்கத்தை ஓரளவு மட்டுமே பூர்த்தி செய்துள்ளது.  குஜராத், மத்தியப்பிரதேசம், வடமேற்கு மகாராட்டிரா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதிகளில் பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.  ஆனால் சட்டம் நிறைவேறி 16 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவில் மார்ச் 2022 வரை 50.4 விழுக்காடு விண்ணப்பதாரர் களுக்கு மட்டுமே நில பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன.  பா.ஜ.க ஆளும் பல மாநிலங்கள் தேசிய சராசரியை விட குறைந்த அளவிலேயே பழங்குடியின மக்களுக்கு பட்டாக்களை வழங்கியிருப்பது இதில் கவனிக்கத்தக்கது. பா.ஜ.க 30 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் குஜராத் தில் 51 விழுக்காடு  விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நில உரிமை வழங்கப்பட்டுள்ளது. திரிபுராவில் 64 விழுக்காடு வழங்கப்பட்டுள்ள நிலையில் பா.ஜ.க ஆளும் பிற மாநிலங்களில் மிகக்குறைந்த அளவே பட்டா வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பழங்குடியினர் நலனில் அக்கட்சியின் ஆர்வம் என்ன என்பது புலப்பட்டு விடும். ஆந்திரா 77 விழுக்காடு, ஒடிசா 71 விழுக்காடு பட்டாக்கள் வழங்கி யுள்ளன. தமிழ்நாடு 25 விழுக்காடு மட்டுமே வழங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.  பல தலைமுறைகளாக வனத்தில் வசிக்கும் மக்கள் இத்தனை ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாததால் எந்நேரமும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் அச்சத்திலேயே வாழும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. 

பழங்குடியினர் நலனுக்கு நிதி ஒதுக்கீடு

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட சமூக, பழங்குடியின நலனுக்கு ஒரு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். இந்த ஒதுக்கீடு ஒன்றிய அரசு திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசு நிதி உதவி திட்டங்களை அமல்படுத்த பயன்படுத்தப்படும். தாழ்த்தப்பட்ட சமூக பழங்குடியின மக்களின் தொகைக்கேற்ப இந்த நிதி ஒதுக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டின் ‘நிதி அயோக்’ பரிந்துரைப்படி தாழ்த்தப் பட்ட சமூகத்தவருக்கு 15.49 விழுக்காடு, பழங்குடியினருக்கு 8.2 விழுக்காடு வழங்கப்பட வேண்டும்.  ஆனால் பழங்குடியினருக்கு 2018-19 நிதியாண்டில்  4.9 விழுக்காடு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-2023இல் இது 7.3 விழுக்காடு என உயர்ந்த போதும், பரிந்துரைக்கப்பட்ட 8.2 விழுக்காடு என்பதை விடக் குறைவே. இந்த தகவல்கள் தாழ்த்தப் பட்ட சமூக பழங்குடியின மக்கள் நலன் சார்ந்து தில்லியை மய்யப்படுத்தி செயல்படும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், பழங்குடியின மக்களுக்கான பிரத்தி யேகத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு இதைவிட மிகவும் குறைவு என அவ்வமைப்பு கண்டறிந்துள்ளது. பல திட்டங்களும் அனைத்து சமூகத்திற்கான பொதுத் திட்டங்களுக்கான ஒதுக்கீடாகவே உள்ளது. சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட சமூக, பழங்குடியின மக்களுக்கான பிரத்யேக ஒதுக் கீடு அல்ல.  உதாரணமாக கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி அனைத்து மாணவர்களுக்கானதே அன்றி பழங்குடியின மாணவர்களுக்கு மட்டுமானதல்ல. இவ்வாறான பொது ஒதுக்கீடுகள் இவ்வின மக்களின் முன்னேற்றத்திற்கு பெருமளவில் உதவவில்லை. பரிந்துரைக்கப்பட்ட 8.2 விழுக்காடு அளவில் 3.6 விழுக்காடு நிதி மட்டுமே பழங்குடியின மக்களுக்கான பிரத்யேகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.  2018-2019 மற்றும் 2022-2023இல் ஒன்றிய அரசு திட்டங்கள், ஒன்றிய அரசு நிதி உதவித் திட்டங்களுக்கு ரூ.49.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 8.2 விழுக்காடு என்பது ரூ.4 லட்சம் கோடி, ஆனால் ரூ. 3.2 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் ரூ.1.3 லட்சம் கோடி மட்டுமே பிரத்யேகத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத அவல நிலை தொடர்கிறது.  

அதிகரிக்கும் தாக்குதல்கள்

தேசிய குற்ற ஆவண காப்பக தகவலின்படி 2020ஆம் ஆண்டில் 8,272 வழக்குகள் பழங்குடியினர்மீதான தாக்குதல்களை தொடர்ந்து பதிவாகி யுள்ளன. (2020க்கு பிந்தைய தகவல்கள் இல்லை.) இதன்படி ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு பழங்குடியினத்தவர் தாக்கப்படுவது தெரிய வருகிறது. கொலை, வன்கொடுமை, தாக்கி காயப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் உள்ளடக் கியதே இக்குற்றங்கள்.  தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவல்களின்படி கடந்த 5 ஆண்டுகளில் பழங்குடியின மக்கள்மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதை தெரிந்து  கொள்ள முடியும். பா.ஜ.க அரசுகள் பழங்குடியின மக்கள் மீதான தாக் குதல்களை குறித்து அதிக கவலைப்படுவதுமில்லை.

பழங்குடியின குடியரசுத் தலைவர் உதவுவாரா?

பா.ஜ.க தனது வாக்கு வங்கியை பெருக்கவும், அரசியல் லாபத்திற்காகவும் அடையாள அரசியலை மேற்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. அப்துல் கலாமும், ராம்நாத் கோவிந்தும் இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட சமூக மக்களை கவர குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் பதவிக்காலத்தில் இஸ்லாமியர்களோ, பிற சிறுபான்மையினரோ, தாழ்த்தப்பட்ட சமூக மக்களோ தங்கள் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் உணர வில்லை, மாறாக அதிகப்படியான தாக்குதல்களையும், இன்னல்களையுமே சந்தித்தனர். இவ்விருவர்களின் வரிசையில் இப்போது திரவுபதி முர்முவும் இணைந் துள்ளார். சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள பிரிவினரின் முன்னேற்றத்திற்கு பிரத்தியேகத் திட்டங்களும், பரவலாக்கப்பட்ட நடைமுறைப்படுத் துதலும் மட்டுமே பலன் தரும். பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பிற சங் பரிவார் அமைப்புகளும் பரப்புவது போல,  ‘ஒரே நாடு, ஒரே திட்டம்’ போன்ற முழக்கங்கள் இருக்கும் நிலையை மேலும் வலுவிழக்க மட்டுமே செய்யும். எப்போதும் போல பா.ஜ.கவின் அரசியல் நாடகமே பழங்குடியின குடியரசுத் தலைவர் தேர்வு. 

Ôநியூஸ்கிளிக். இன்Õ இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் தழுவல்

நன்றி: 'தீக்கதிர்', 28.7.2022

No comments:

Post a Comment