'பொட்ட புள்ளயா?' என்று முகத்தை சுருக்கிக் கேட்பார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

'பொட்ட புள்ளயா?' என்று முகத்தை சுருக்கிக் கேட்பார்கள்!

பசு மாடு பெண் கன்று ஈன்றால் மகிழ்பவர்கள் - ஆறறிவுள்ள 
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுக்கிறார்கள்!
ஜெ.ஆனந்த் - பா.யுவேதா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

உசிலம்பட்டி, ஜூலை 16 பொட்ட புள்ளயா? என்று முகத்தை சுருக்கிக் கேட்பார்கள்! பசு மாடு பெண் கன்று ஈன்றால் மகிழ்பவர்கள் - ஆறறிவுள்ள  பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுக்கிறார்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஜெ.ஆனந்த் - பா.யுவேதா மணவிழா

கடந்த 9.6.2022 அன்று  உசிலம்பட்டியில் அ.ஜெயக் கொடி - பாண்டியம்மாள் ஆகியோரின் மகன் ஜெ.ஆனந்த் அவர்களுக்கும்,  எம்.சி.பாண்டி - பத்மா ஆகியோரின் மகள் டாக்டர் பா.யுவேதாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றனர் முன்பு!

ஒரு காலத்தில், ஆண்கள்தான் படிக்கவேண்டும்; பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள். இங்கே இருக்கக்கூடிய பாட்டிமார்கள் எல்லாம், படிக்க வில்லை. அவர்களின்மேல் குறை இல்லை - பொம்பளை படிப்பதா? என்று சொன்னார்கள்; அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று சொன்னார்கள்.

கலைஞர் ஆட்சி வந்தது, ஊதுகின்ற அடுப்பை மாற்றிவிட்டார்; திருகினால் எரியக்கூடிய அடுப்பைக் கொடுத்தார்.

இன்றைக்கு நம்முடைய பெண்கள் மருத்துவக் கல்லூரியில்  நிறைய பேர் படிக்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறேன், அதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

25 ஆண்டுகளுக்கு முன், நான் அமெரிக்கா சென்று திரும்பி வரும் வழியில், லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன்.

பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு அளித்த பேட்டி

பி.பி.சி. தமிழோசை வானொலியை எல்லோரும் கேட்பார்கள். அந்த வானொலிக்காக என்னை பேட்டி காணவேண்டும் என்று வந்தார் ஓர் அம்மையார். மிகவும் கெட்டிக்காரர், ஈழத் தமிழ்ப் பெண் அவர். அவருடைய பெயர் ஆனந்தி.

பெண் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்காமல், கள்ளிப்பால் கொடுக்கிறார்களாமே?

வானொலி நிலையத்தில் பேட்டி - 

அந்த அம்மையார் சொல்கிறார், ‘‘உங்களை நான் மிக முக்கியமாக பேட்டி காணவேண்டும் என்று நினைத்தது எதற்காக என்றால், பெரியார் இயக்கம் இந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாக இருக்கிறது; நீங்கள் எல்லாம் பிரச்சாரம், போராட்டம் எல்லாம் நடத்து கின்றீர்கள். ஆனால், உசிலம்பட்டியில், பிறக்கும் பெண் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்காமல், கள் ளிப்பால் கொடுக்கிறார்களாமே? இதைத் தடுக்கவேண் டாமா, நீங்கள் - பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கிறார்களாமே - அதைத் தடுக்கும் பணியை உங்களுடைய இயக்கம்தானே செய்யவேண்டும். அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதை சொல்லுங்கள், உலகம் முழுவதும் உள்ளவர்கள் கேட்கிறார்கள்; உங்களுடைய பதிலை நான் எல்லோருக்கும் பரப்பவேண்டும்‘‘ என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள்.

நான் சொன்னேன், ‘‘உசிலம்பட்டியில் மட்டுமல்ல, தருமபுரி மாவட்டம், சேலத்திற்குப் பக்கத்தில்கூட அது போன்று நடைபெறுகிறது. அதைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்‘‘  என்றேன்.

அந்த வகையிலே இங்கே அமர்ந்திருக்கின்ற நம் முடைய மணமகள் யுவேதாவிற்கு, தாய்ப்பால் கொடுத்த தோடு, பெரியாருடைய பகுத்தறிவுப் பால், கல்விப் பால் கொடுத்து, அவரை டாக்டராக்கி இருக்கிறீர்கள். அதற் காக அவருடைய பெற்றோரைப் பாராட்டுகின்றோம்.

பெண் குழந்தை பிறந்தால் என்ன சங்கடம் - தாய்மார்களுக்குச் சொல்கிறேன்.

என்ன குழந்தை? என்ன குழந்தை? 

குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவமனைக்குப் தாய்மார்கள் போகிறார்கள்;  குழந்தை பிறந்தவுடன் அங்கே இருக்கும் மருத்துவமனைப் பணியாளர்களிடம், என்ன குழந்தை? என்ன குழந்தை? என்று ஆர்வமுடன் கேட்பார்கள்.

என்ன குழந்தை என்று சொல்வதற்கு அவருக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும்.

எப்படியும் கொஞ்ச நேரத்தில் என்ன குழந்தை என்று தெரிந்துவிடும்; இருந்தாலும் அவ்வளவு அவசரம் தெரிந்துகொள்வதற்கு.

அங்கே பாட்டி, மாமியார், அம்மா எல்லோரும் இருப்பார்கள். சுகப்பிரசவம் ஆகி, நல்ல முறையில் குழந்தை பிறந்திருக்கும். குழந்தை நன்றாக இருக்கிறதா என்பதைப்பற்றி கவலைப்படாமல்,

என்ன குழந்தை?

பொட்ட புள்ள - இதுதான் பதில்.

பொட்ட புள்ளயா? என்று  முகத்தை சுருக்கிக் கேட்பார்கள்!

பொட்ட புள்ளயா? உடனே முகத்தை சுருக்கிக் கொண்டு, ம்ஹூம், பொட்ட புள்ள.

இதை யார் சொல்வது என்றால், அங்கே இருக்கும் பாட்டி, அம்மா, மாமியார் போன்றவர்கள்.

எவ்வளவு பெரிய கொடுமையை நம்முடைய நாட்டில் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஒரு உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன்,

அதே அம்மையார், அவருடைய வீட்டில் 10 கோழி முட்டையை குஞ்சு பொரிப்பதற்காக அடை காக்க வைக் கிறார்கள். குஞ்சு பொரித்தவுடன், ‘‘அம்மா, எல்லாம் பொட்டக் குஞ்சு’’ என்று முக மலர்ச்சியுடன் சொல்கிறார்.

பசு மாடு பெண் கன்று ஈன்றால் மகிழ்பவர்கள் - ஆறறிவுள்ள பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுக்கிறார்கள்!

கோழிக் குஞ்சு பொட்டக் குஞ்சு என்றால், சந்தோஷம்.

வீட்டில் பசு மாடு வைத்திருக்கிறார்கள்; அது கன்று போடும் போதும், பசுங்கன்று போட்டிருக் கிறது என்றால், அது பெண் பசுவாக இருந்தால், மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால், ஆறறிவு இருக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தப் பெண் குழந்தைக்குக் கள்ளிப் பால் கொடுக்கிறார்கள் என்றால், இதைவிட மோசமான ஒரு தன்மை இருக்குமா? இதை மாற்றிக் காட்டுகின்ற இயக்கம்தான் பகுத்தறிவு இயக்கம்; அதுதான் திராவிடர் இயக்கம்.

மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய வர்கள் பெண்கள். மூடநம்பிக்கைகள் ஒழியவேண்டும் என்பதுதான் பெரியாருடைய கொள்கை. 

நீங்கள் எல்லாம் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்; சிந்தித்துப் பார்த்தால்தான், நம்முடைய பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும்; வாழ்வில் முன்னேற முடியும். ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் எழவேண்டும்.

முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சி நீதிமன்றத்தில் எடுபடுமா? என்றால், எடுபடாது!

இதோ இங்கே ஒலிபெருக்கி இருக்கிறதே, இது எப்பொழுது வந்தது? வீடியோ எடுக்கிறார்களே - முன் பெல்லாம் என்ன சொன்னார்கள் - முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கின்னரர்கள் சாட்சியாக என்று சொல்வார்களே, அந்த சாட்சியெல்லாம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா? நிச்சயமாக செல்லுபடியாகாது. ஆனால், வீடியோ சாட்சி எடுபடும்.

இக்கருவிகளை யார் கண்டுபிடித்தது?

முப்பத்து முக்கோடி தேவர்களில், ஒரு பயலுக்காவது இந்தக் கருவிகளைப்பற்றி தெரியுமா?

இப்பொழுது செல்போனிலேயே ஒளிப்படம், ரெக்கார்ட் போன்றவற்றை செய்கிறார்கள்.

மனிதனுடைய அறிவு வளர்ந்துகொண்டே போகிறது; அந்த அறிவு வளர, வளர, வளர மனிதன் வளர்ந்து கொண்டே போகிறான்.

நெருப்பை வளர்த்து, அதில் கொண்டு போய் நெய்யை ஊற்றுகிறார்கள், யாகம் என்கிற பெயரில்.

சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வார்கள்; ஆனால், யாகத்தில் ஊற்றுவதற்காக பசுந்நெய்யை ஊற்றுவார்கள்.

தந்தை பெரியாரின் அறிவார்ந்த கேள்வி பெரியார்தான் கேட்டார்,

அட, பருப்பில் ஊற்றி சாப்பிடவேண்டிய நெய்யை, நெருப்பில் ஊற்றுகிறாயே? என்று.

பருப்பில் ஊற்றினால், ஆள் ஊட்டச் சத்தோடு இருப்பான். எனவே, பருப்பில் ஊற்று நெய்யை, நெருப்பில் ஊற்றாதே என்றார்.

அரிசியில் மஞ்சளைக் கலந்து அர்ச்சனை என்ற பெயரில்  தூக்கி எறிகிறார்கள்.

நாட்டில் பல பேர் பட்டினியாக இருக்கிறார்கள்; இரண்டு கிலோ அரிசியை உலையில் போட்டு, அதை சோறாக்கி,  பசி என்று வருகின்றவர்களுக்குக் கொடுத் தால், அவர் பசி தீர்ந்து, மணமக்களைப் பாராட்டிச் செல்வார்.

அதைவிட்டுவிட்டு, கடைசியில் அமர்ந்திருப்பவர், மஞ்சள் கலந்த அரிசியை அங்கே இருந்து வாழ்த்து கிறேன் என்ற பெயரில் தூக்கிப் போடுகிறார். அது என்ன ஏவுகணையா - சட்டென்று இலக்கு நோக்கி வருவதற்கு? அந்த அரிசி மண்டபம் முழுவதும் கீழே சிதறிக் கிடக்கிறது.

ஒரு சோற்று பருக்கை கீழே சிந்திவிட்டால், நம்மு டைய தாய் என்ன சொல்வார், சாப்பாட்டை  வீணாக்காதே என்று சொல்வார்.

ஆனால், இங்கே இவ்வளவு அரிசியை வீணாக்கு கிறோமே, எல்லோருடைய தலையையும் கைகளை வைத்துத் தட்டி விட்டுத்தான் போகவேண்டும்.

உலையில் போடவேண்டிய அரிசியை, ஏன் தலையில் போடவேண்டும்?

பெரியார்தான் கேட்டார்,

உலையில் போடவேண்டிய அரிசியை, ஏன் தலையில் போடவேண்டும்? என்று.

எனவே, நீங்கள் அத்தனை பேரும், பெண்கள், ஆண்களைப் போன்று படிக்கவேண்டும்; ஆண்களுக்கு என்னென்ன அறிவு இருக்கிறதோ, அத்தனையும் பெண்களுக்கும் இருக்கிறது. அதுதான் இங்கே இருக்கிற மணமகள்.

எனவே, இந்த மணமக்கள் இருவரும் சிறப்பான வகையில் இன்றைக்கு வாழ்க்கை இணையேற்பை ஏற்றுக்கொண்டவர்கள் - நன்றாக வாழ்வார்கள்.

இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை

மணமக்களுக்கு நான் அறிவுரையை சொல்வதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை தேவையும் இல்லை; நம்மைவிட அதிக விஷயங்கள் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்; மேலும் அவர்கள் அறிவுரையை விரும்புவதும் இல்லை. அதனால், மண மக்களுக்கு வேண்டுகோள்களாக வைக்கிறேன்.

அன்பார்ந்த மணமக்களே, எங்கள் அருமைச் செல்வங்களே, நீங்கள் உங்கள் உழைப்பினால் வாழ்வில் உயர்வீர்கள்; முன்னேறுவீர்கள்; வளர்ச்சியடைவீர்கள். 

பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள்; மரியாதை காட்டுங்கள், பாசத்தைக் காட்டுங்கள்!

ஆனால், எவ்வளவுதான் வாழ்வில் உயர்வடைந் தாலும், வளர்ச்சியடைந்தாலும், உங்கள் பெற்றோரை நீங்கள் மறக்காதீர்கள்; உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள்; மரியாதை காட்டுங்கள், பாசத்தைக் காட்டுங்கள்.

உங்கள் பெற்றோர், உங்களிடமிருந்து பணத்தை எதிர்பார்க்கவில்லை; பாசத்தைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

ஒரு உதாரணம் உங்களிடம் சொல்கிறேன், 

‘‘வங்கியில் பணி புரிகிறேன்; கை நிறைய சம்பாதிக் கிறேன், புதிய வீடு கட்டியிருக்கிறேன்; கண்டிப்பாக நீங்கள் வீடு திறப்பு விழாவிற்கு வரவேண்டும்‘‘ என்று அழைத்தார். 

வீட்டின் பெயர் அன்னை இல்லம் - அன்னையோ முதியோர் இல்லத்தில்!

அந்த அழைப்பிதழில், அன்னை இல்லத் திறப்பு விழா என்று அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.

அடடா, அவருடைய அம்மாவின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று நாம் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொண்டு, அவருடைய வீட்டிற்குச் செல்வோம். வீட்டை சுற்றிக் காட்டு கிறார், இதுதான் மாஸ்டர் பெட் ரூம், இதுதான் ஹால், இதுதான் கிச்சன் என்று சொல்லிக் கொண்டே வருகிறார்.

எல்லாம் சரிங்க, உங்களுடைய அம்மா எங்கே இருக்கிறார்? என்று கேட்டால்,

அவங்க, முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

இது என்ன நியாயம்? இதுதான் பல இடங்களில் உள்ள நிலைமை.

நம்ம வீட்டுப் பிள்ளைகள் அதுபோன்று இல்லை; இருக்கவும் மாட்டார்கள்.

ஆகவே, மணமக்களே மிகச் சிறப்பாக வாழுங்கள், எளிமையாக வாழுங்கள். வரவுக்கு உட்பட்டு செலவழியுங்கள்.

இதுதான் பெரியாருடைய தத்துவம்.

வரவு எவ்வளவோ, அதைவிட குறைவாக செலவு செய்யவேண்டும். இந்த முறையைக் கடைப்பிடித்தாலே, வாழ்வில் நீங்கள் உயருவீர்கள்.

விட்டுக் கொடுக்கத் தவறக்கூடாது!

மணமக்கள் இரண்டு பேரும் உறுதிமொழியை சொன்னார்கள்; மணமகன், மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டினார். அதேபோன்று, நம்முடைய மணமகள், மணமகனுக்கு மாலை போட்டார். அதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள், மணமகன் ஆனந்த் கொஞ்சம் குனிந்து மாலையை வாங்கிக் கொண்டார். 

எப்பொழுதெல்லாம் உங்களிடையே பிரச்சினை வருகிறதோ, அப்பொழுதெல்லாம் கொஞ்சம் குனிந்தால் போதும். விட்டுக் கொடுக்கத் தவறக்கூடாது.

வந்திருக்கும் தாய்மார்களை நான் கேட்டுக்கொள் கிறேன், உங்களுடைய பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வையுங்கள்; பெண் குழந்தைகளை டாக்டராக் குங்கள்; நல்ல ஆட்சி நடைபெறுகிறது. கல்லூரியில் படிக்கின்ற பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்ற ஆட்சி - இன்றைக்கு நடைபெறுகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி. அப்படிப்பட்ட அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மூடநம்பிக்கை இருந்தால், தன்னம்பிக்கை விடைபெற்று விடும்

மூடநம்பிக்கை இருந்தால், தன்னம்பிக்கை விடை பெற்று விடும். தன்னம்பிக்கை இருந்தால், மூடநம்பிக்கை இருக்காது. துணிச்சலாக இருக்கவேண்டும்.

ஆகவே, மணமக்கள் எல்லா வகையான சிறப்பைப் பெற்று வாழ்வதைப் போல, நீங்களும் பகுத்தறிவு வாதிகளாக மாறுங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

மணமக்களுக்கும், மணமக்களின் பெற்றோருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மணமகனுடைய - ஆனந்த் அவர்களுடைய தாயார் இங்கே அமர்ந்திருக்கிறார்.

ஒரு கொடுமையான சூழல் என்னவென்றால், இது போன்ற மணவிழாக்களில் பழைய காலத்தில், கணவனை இழந்த, தாய் முன்னே வரக்கூடாது என்பார்கள். நான்தான் அவரை அழைத்து, அருகில் அமருங்கள் என்றேன்.

தாயில்லாமல், மணமகன் வளர்ந்திருக்க முடியுமா?

தாயில்லாமல், மணமகன் வளர்ந்திருக்க முடியுமா? அந்தத் தாய்க்கு அவருடைய வாழ்நாளில் எது மகிழ்ச்சி?

தன்னுடைய மகனின் மணவிழாவை நேரில் அமர்ந்து பார்க்கவேண்டும் என்பதுதான்.

தயவு செய்து, தாய்மையை மதிக்கும்பொழுது, தாயையும் மதிக்கவேண்டும். அந்தத் தாய்க்குரிய இடத்தை என்றைக்கும் கொடுக்கவேண்டும்.

ஆனந்த் அவர்களுடைய அப்பா இருந்தால், என்ன செய்திருப்பாரோ, அந்த இடத்தில் அனைவரும் இருக்கிறார்கள்; எந்தக் குறையும் இல்லாமல் செய்வதற்கு அவருடைய மாமா அவர்கள் செய்திருக்கிறார்.

இது நம்ம குடும்பம்.

மணமக்கள் வாழ்க! பெரியார் வாழ்க!!

பகுத்தறிவு வளர்க!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார். 

No comments:

Post a Comment