பிரதமரும் புதிய கல்வியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

பிரதமரும் புதிய கல்வியும்

"ஆங்கிலேயர் கொண்டுவந்த கல்வி நமக்கானது அல்ல, அதனால் இங்கு மக்களிடையே பிரிவினை சிந்தனை வந்தது, புதிய கல்விக்கொள்கை நமக்கானது - சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு இதன் மூலம் ஊக்கம் கிடைக்கும் - தேசிய ஒற்றுமைச்சிந்தனை மக்களிடையே வளரும்" என்று பிரதமர் மோடி கூறினார்

புதிய கல்விக்கொள்கையால் சமஸ்கிருதம் போன்ற பழைமையான மொழிகளுக்கு ஊக்கம் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,

"புதிய கல்விக்கொள்கை மாணவர்களை வெறும் பட்டப்படிப்புக்கு தயார் செய்வதோடு மட்டும் நின்றுவிடாது. மனித வளங்களை வைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் அடிப்படையிலேயே இந்த புதிய கல்விக்கொள்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய தாய் மொழிகளில் கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பை புதிய தேசியக் கல்விக் கொள்கை வழங்குகிறது.

 புதிய கல்விக்கொள்கை குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனைகளில் இருந்து கல்வியை மீட்பதற்கு உதவும். புதிய கல்விக்கொள்கையின் அடிப்படை நோக்கமே இதுதான். 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான புதிய சிந்தனைகளைக் கொண்டதாக புதிய தேசிய கல்விக்கொள்கை இருக்கும். இன்று நாம் படிக்கும் கல்விமுறை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தது, இதனால் நமக்குள் பிரிவினைவாத சிந்தனை உருவாகிறது, நன்மை ஒன்றுமில்லை. ஆனால் புதிய கல்விக்கொள்கை சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மையான மொழிகளுக்கு ஊக்கம் அளிக்கும். நாட்டின் ஒட்டு மொத்த கல்விக் கட்டமைப்பையும் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கை மாற்றி அமைக்கும்." என்றார். 

ஒன்றிய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறது. ஆனால், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, சிறுவயதிலேயே தொழிற்பயிற்சி வழங்குவது, தேசியமயமான கல்விக்கொள்கை போன்றவற்றுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியானவுடன் அதன் மீதான எதிர்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

குறிப்பாகவும், சிறப்பாகவும் திராவிடர் கழகம் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் முன் வரிசையில் நின்றது - நிற்கிறது

எதிர்க்கட்சியாக இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புதிய தேசிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சித்தனர் - எதிர்த்தனர். இது இந்தியை திணிப்பதாகவும், மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிப்பதாகவும் குற்றம்சாட்டின. ஆட்சிக்கு வந்தபிறகும் புதிய கல்விக்கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் திமுக - மாநிலக் கல்விக்கொள்கையை தயாரிக்கக் குழுவையும் அமைத்து இருக்கிறது

மெக்காலே கல்வி முறை குலத்திற்கு ஒரு கல்வி என்பதை ஒழித்து அனைவருக்கும் சமமான கல்வி என்று ஒற்றை வரியில் சொல்லி விடுகிறது. ஆனால், பிரதமரோ இதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். கூறி வருவதை மனப்பாடமாக ஒப்புவிக்கிறார். இந்தக் கல்வி முறையால் தான் மகாத்மா ஜோதிராவ் பூலே முதல் டாக்டர் அம்பேத்கர் வரை கல்விகற்று சமுகநீதிப்புரட்சியாளர்களாக மாறினார்கள்

ஆகையால் தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்புகள் ஆங்கிலேயக்கல்வி முறையை ஒழிக்கத் துடித்துக் கொண்டு இருக்கின்றன, 

தற்போது ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதால் தாய்மொழி என்று போலியாகக் கூறி தேசியத்திற்கான மொழி சமஸ்கிருதம் என்று கூறிக்கொண்டு, ஆங்கிலம் இருந்த இடத்தில் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் கொண்டுவர பெரும் முயற்சி செய்துகொண்டு இருக்கின்றனர். 

புதிய கல்விக் கொள்கை என்பது முழுக்க முழுக்க குலக்கல்வி முறையைக் கொண்டதுதான்,   பகுதி நேரப் படிப்பு, பகுதி நேர குடும்பத் தொழில், 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்களின் குடும்பத் தொழில் தொடர்பான சிறப்பு பயிற்சி கொடுப்பது போன்ற பல ஆபத்தான புள்ளிகளைக் கொண்டு வரையப்பட்ட அலங்கோலக் கோலமே இந்த புதிய கல்விக்கொள்கை.

இதுவரை  தாய்மொழி, தாய்மொழி என்று பேசிக் கொண்டு இருந்தது இந்தக் கூட்டம். தற்போது முதல் முறையாக சமஸ்கிருதம் தான் புதிய கல்விக் கொள்கையில் முதன்மை கற்றல் மொழியாக இருக்கும் என்ற மோடியின் பேச்சு மூலம் இவர்களின் மோசமான மனித குலவிரோத பார்ப்பனீய சிந்தனை வெளி வந்துள்ளது.

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கல்விதான் நம்மிடையே பிரிவினையே ஏற்படுத்தியது என்று மனமறிந்த- உண்மைக்கு மாறான ஒன்றைக் கூறியுள்ளார் பிரதமர்.

இவர்கள் கூறும் ஒரே மதம் என்கிற இந்து மதம்தானே பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கிறது. பிஜேபி ஆளும் மாநிலங்களில் கீதை பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதே - அந்தக் கீதை என்ன சொல்லுகிறது? 'சதுர்வர்ணம் மயாசிருஸ்டம்' என்கிறதே - இதன் பொருள் என்ன? நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன் என்று 'பகவான்கிருஷ்ணன்' கூறியதாகக் கீதை கூறுகிறதே! இவர்கள் தான் - ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான்  நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தினர் என்று கூறுவது வெட்கக் கேடே!

No comments:

Post a Comment