அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையின்றி மூளைக்கட்டி அகற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையின்றி மூளைக்கட்டி அகற்றம்

சென்னை, ஜூலை 15 ஒமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை இன்றி, அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு மூளைக்கட்டி அகற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியைச் சேர்ந்தவர் பச்சைபாண்டியன். இவரது மனைவி பொன்னுத்தாய்(56). இவருக்கு கடந்த சில நாட்களாக தலைசுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து, இவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகாததால், மேல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது பொன்னுத்தாயின் மூளையில் சிறிய கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர், அறுவைச் சிகிச்சையின்றி ‘எஸ்ஆர்எஸ்’ எனும் உயர் தொழில்நுட்ப கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர்.

இதையடுத்து, புற்றுநோயியல் மருத்துவர்கள், மருத்துவ இயற்பியலாளர்கள், கதிர்வீச்சு தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் அடங்கிய குழு, அதிநவீன மென்பொருள் மூலம் மிகத் துல்லியமாக, மூளைத்திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாத வகையில் கதிர்வீச்சு சிகிச்சை அளித்து மூளையில் இருந்த கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சை அரங்கம், மயக்க மருந்து இன்றி இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.4 லட்சம் வரை செலவாகும். இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment