முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு - செஸ் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு - செஸ் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமருக்கு அழைப்பு

சென்னை, ஜூலை 16  கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு முதலமைச்சர்அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டதையடுத்து, கடந்த 12ஆம் தேதி பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில்,  13.7.2022 அன்று மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர்சென்றார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின்படி, அதே மருத்துவமனையில் முதலமைச்சர்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டொரு நாளில் இல்லம் திரும்புவார்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வான பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். அவர் நலமுடன் இருக்கிறார். இன்றோ அல்லது நாளையோ மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துவிடுவார்” என்றார்.

காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று (15.7.2022) வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்று காரணமாக தேவையான சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை அனைத்தும் நடத்தப்பட்டன. கரோனா தொற்றுக்குரிய அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் உரிய முறைப்படி வழங்கப்பட்டன. தற்போது அவர் குணம் அடைந்து வருகிறார். நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மேலும் சில தினங்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நலம் விசாரிப்பு

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், தான் நன்கு குணமடைந்து வருவதாக கூறினார்.

பிரதமருக்கு அழைப்பு

மேலும், சென்னையில் ஜூலை 28ஆம் தேதி தொடங்க உள்ள பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததாகவும், தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44ஆவது பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28இல் தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்க உள்ளன. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடக்க விழா

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இவ்விழாவில், பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்று, பிரதமரை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியானது. ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் முதலமைச்சர் டில்லி செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால், நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்த பிரதமரிடம், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு அவசியம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்சர்தெரிவித்துள்ளபடி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோர் விரைவில் டில்லி சென்று, பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுப்பார்கள் என தெரிகிறது.

ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணம் உறுதியாகியுள்ளது. எனவே, பிரதமர் மோடி ஜூலை 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்று, போட்டிகளை தொடங்கி வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா வாழ்த்து

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததுடன், முதலமைச்சர் விரைந்து நலம்பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.


No comments:

Post a Comment