ராமராஜ்ஜியம் பேசுவோர் வெகு மக்களல்லர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

ராமராஜ்ஜியம் பேசுவோர் வெகு மக்களல்லர்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இளம் பெண் ஒருவர் உணவு வழங்கும் நிறுவனத்தில் சமீபத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இவர், உணவு கேட்டு இணையத்தில் பதிவு செய்த வர்களுக்கு உணவு கொண்டு சென்று வருகிறார்.

அப்போது சாலையில் இருந்த சில பெண்கள் 

"நீ பெண்ணாக இருந்துகொண்டு இந்த வேலைக்கு எப்படி செல்லலாம்? வீட்டிற்கு அடங்கி இருக்க மாட்டாயா? உன்னைப் பார்த்து பிற பெண்களும் கெட்டுப் போய் தங்களது வீட்டார் பேச்சைக் கேட் காமல் விருப்பம் போல் வாழ்வார்கள்." 

"இதனால் நமது ஹிந்துக் கலாச்சாரம் சீரழிந்து போகும்" என்று கூறி அவரை சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.  இவர்களின் அடியைத் தாங்க முடியாமல் உணவு வழங்கும் பணியில் இருந்த பெண் ஊழியர் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றார். ஆனால் அந்த வீட்டினர் அவரை வெளியே தள்ளி கதவை மூடிவிட்டனர்.  பிறகு அவரது வாகனத்தை அடித்து நொறுக்கி அவரையும் அடித்தனர். 

இந்தத் தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தாக்குதலுக்கு ஆளான பெண்ணிடம் அவரை அடித்த பெண்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

வட இந்திய மாநிலங்களில் சிறிய நகரங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதும், நாகரிக ஆடைகள் அணிவதும், கைப்பேசி வைத்திருப்பதும்  அதிகார பூர்வமற்ற முறையில் தடை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் அப்பெண் தாக்கப்பட்டுள்ளார். ஹிந்து கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் ஹிந்துத்துவ அமைப்புகள் தொடர்ச் சியாக பெண்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் இருக்க, வேதம் மற்றும் புராணங்களின் பெயரைச் சொல்லி அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களின் தொடர் பரப்புரை காரணமாக வேலைக்குச் செல்லும் பெண்கள்மீது தாக்குதல்கள் நடந்துவருவது குறிப் பிடத்தக்கது.

'இந்து ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் - அமைக்கப் போகிறோம்' என்று கூப்பாடு போட்டு வருகிறார்கள். அப்படிக் கூறும் இந்து ராஜ்ஜியம் வருவதாக வாதத்திற்காக ஒப்புக் கொண்டால் அதன் நிலை என்னவாக இருக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள கொடூரம்!

ஒரு பக்கத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்கள் தாக்கப் படுகிறார்கள். இன்னொரு பக்கத்தில் சிறுபான்மை மக்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; இன்னொரு பக்கத்தில் மனுதர்ம சிந்தனையோடு பெண்கள் வதைக்கப்படுகிறார்கள். சமூகநீதி என்று வரும்போது பிற்படுத்தப்பட்ட மக்களும் அநீதிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

எஸ்.சி, எஸ்.டி. மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் இவர்கள்தானே நாட்டின் பெரும்பான்மை மக்கள்.

இவர்கள் ஓரணியில் ஒன்றிணைந்தால்  இந்த ராமராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியம் பேசும் ஆதிக்கக் கூட்டம் கூண்டோடு, வெகு மக்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட மாட்டார்களா?

வெகு மக்கள் சிந்திக்கட்டும்!

No comments:

Post a Comment