இலங்கையிலிருந்து இந்தியா பாடம் கற்குமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

இலங்கையிலிருந்து இந்தியா பாடம் கற்குமா?

இலங்கைத் தீவில் இப்பொழுது என்ன நடந்து கொண்டு இருக்கிறது - மக்கள் கொந்தளித்துக் கிளம்பியது ஏன்? தப்பி ஓடினார் அதிபர் ராஜபக்சே என்ற செய்திகள் வருவது ஏன்?

யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லர் கடைசியில் தற்கொலை செய்து கொண்டது ஏன்? உலகத்தையே ஆரிய புரியாக்குவேன் என்று அலறிய இன வெறியன் அடால்ப் ஹிட்லரின் முடிவு அருவருக்கத்தக்க நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ராஜபக்சே இலங்கையில் இன வெறி ஆட்டம் போடவில்லையா? அமைதி மார்க்கமான பவுத்தத்தை மதமாக்கி, அதற்கு வெறியைத் தீனி போட்டு வளர்த்து, அந்நாட்டுப் பூர்வீகக் குடிகளான தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேக்களின் இன்றைய நிலையை எண்ணிப் பரிதாபப்படக் கூட முடியாத அவல நிலை.

வெகு ஜனமக்கள் மத்தியில் எத்தகைய சிந்தனை உலவுகிறது. "நல்லாவேணும் எப்படியெல்லாம் ஆட்டம் போட்ட ஆசாமி - இப்பொழுது துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று ஓட்டம் பிடிப்பதைப் பார்த்தீர்களா?" என்ற எண்ண வோட்டம் ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.

அகிம்சையை, அறவுரையை அறிவுரையாக வழங்கிய கவுதமப் புத்தரின் சிலையை தமிழர்களின் இரத்தத்தால் அபிஷேகம் செய்து ஆடிக் குதிக்கவில்லையா?

நாட்டின் பொருளாதார நிலை அங்கு சீர்குலைந்தது ஏன்? அந்நாட்டுக்குரிய மண்ணின் மைந்தர்களான தமிழர்களைப் பூண்டோடு ஒழிப்பதற்காக இராணுவத்தைக் கொழுக்கக் கொட்டிய பணம் கொஞ்சமா நஞ்சமா?

அதன் கோர விளைவுதான் பொருளாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் பஞ்சம், பட்டினி என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதே வெஞ்சினமாக வெடித்துக் கிளம்பி, எந்த மக்கள் சிங்கள இனவெறி, மதவெறியால், தமிழினத்தைப் படுகொலை செய்வதில் மூர்க்கமாகக் கிளர்ந்து எழுந்தார்களோ, அதே சிங்கள மக்கள்தான், அந்த இனவெறி, மதவெறியை ஊட்டிய ஆட்சியாளர்களை அடித்து விரட்டும் நிலைக்குக் கிளர்ந்து எழுந்து விட்டனரே!

இதுதான் வரலாறு கற்பிக்கும் பாடம். மதம் என்பது தனி மனிதனின் உணர்வு - அது அவனின் பூஜை அறையிலோ, தனிப்பட்ட வாழ்க்கை விடயத்திலோ இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்!

அதனைப் பொது வெளிக்குக் கொண்டு வந்து, அரசியலுக்குப் பகடைக் காயாக்கி, அந்த குறிப்பிட்ட மதம், குறிப்பிட்ட இனம் இவற்றிற்கு வெளியில் இருக்கக் கூடிய மக்களை அழிப்பது என்ற அடாத செயலால் - அந்த வன்முறை என்ற இருமுனையிலும் கூர்மை கொண்ட கத்தியைக் கைப்பிடித்தவனையும் பதம் பார்க்கும் என்ற நிலைதானே இலங்கையின் இன்றைய நிலை கற்றுத் தரும்பாடம்.

இதிலிருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம் என்ன என்பது மிகவும் நன்றாகவே பட்டப் பகல் வெளிச்சமாகவே தெரிகிறது.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற குரலை ஆளும் தரப்பில் இருப்பவர்கள், அதிகபட்ச அதிகாரம் கொண்டவர்கள்  கனத்த குரலில் கர்ச்சிக்கவில்லையா?

அதனுடைய விளைவுகளை இந்தியாவின் பல பகுதி களிலும் நாம் பார்க்கவில்லையா? உண்ணும் உணவிலிருந்து மதவாதத்தைத் திணிப்பதை நாடு கண்டு கொண்டுதானே இருக்கிறது.

செத்த பசு மாட்டுத் தோலை உரித்த ஒடுக்கப்பட்ட தோழர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டதுண்டே!

சந்தைக்கு மாடுகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அந்த லாரிகளை மடக்கி சந்தைக்குச் சென்றவர்களை அடித்து நொறுக்கவில்லையா? காரின் சக்கரத்தில் கட்டி இழுத்துச் செல்லவில்லையா?

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசு தன் கடமையிலிருந்து விலகி, கோயில் கட்டும் வேலையில் இறங்கவில்லையா?

இதனால் இந்தியாவின் பொருளாதாரமும் சீர்கெட்ட நிலைக்கு நாளும் ஆளாகவில்லையா? வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடவில்லையா? 

ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று சொன்ன பிரதமர் அதைப்பற்றி 'மன்கிபாத்தில்' தப்பித் தவறிக்கூடப் பேசுவதில்லையே!

உண்மை நிலை என்ன? புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவது ஒருபுறம் இருக்கட்டும்; கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒன்று புள்ளி 4 கோடி பேரின் வேலை பறிக்கப்பட்டது என்று சிபிஎம் தேசிய செயலாளர் சீத்தாராம் கேசரி குற்றம் சுமத்தி இருக்கிறாரே!

மதம் வயிற்றுக்குச் சோறு போடாது - குடியிருக்க வீட்டைக் கொடுக்காது - பொருளாதாரத்தை வளர்க்காது  - மாறாக அதற்கு நேர் எதிரான விளைவைத் தான் ஏற்படுத்தும்  - இலங்கையைப் பார்த்தாவது இந்தியா பாடம் கற்றுக் கொள்ளட்டும்!

No comments:

Post a Comment