அரசு இதழிலே சாவர்க்கர்பற்றிப் புகழாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

அரசு இதழிலே சாவர்க்கர்பற்றிப் புகழாரம்!

சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின்  மாத இதழ் சாவர்க்கருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இனி வரவிருக்கும் இதழ்களை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தொடர்ந்து சமர்ப் பணம் செய்யும் என்றும் ஜி.எஸ்.டி.எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் ஸ்மிருதி (ஜி.எஸ்.டி.எஸ்) வெளியிடும் மாத இதழான ‘அந்திம் ஜன்’ (Antim Jan) இதழ், கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது பிரதமரை அதன் தலைவராகக் கொண்டுள்ளது. இந்த இதழில் சாவர்க்கர் குறித்து எழுதியதாவது: “வரலாற்றில் சாவர்கருக்கான  தகுதியான இடம் காந்தியைவிட குறைவானது இல்லை” என்ற முன்னுரையுடன் இது விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு சமர்ப்பணம் என்று எழுதப் பட்டுள்ளது.

சாவர்க்கர் பற்றி ஜி.எஸ்.டி.எஸ். துணைத் தலைவரும் பா.ஜ.க. தலைவருமான விஜய் கோயல் எழுதிய முன்னுரையில், ‘சுதந்திரப் போராட்டத்தின் போது, ஒரு நாள் கூட சிறையில் கழிக்காதவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்களிக்காதவர்கள் என்று சாவர்க்கரைப் போன்ற தேசபக்தரை விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. சாவர்க்கரின் பங்களிப்பு வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தில் மரியாதையில் காந்திக்குக் குறைவானது இல்லை” என்று உண்மைக்கு மாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோயல் எழுதுகையில், இது கெட்ட வாய்ப்பானது  - காந்தியாரின் பங்களிப்பு இருந்தபோதிலும், சாவர்க்கருக்கு பல ஆண்டுகளாக சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

'மே 28 ஆம் தேதி சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், கலாச்சார அமைச்சகத்தின் ஜூன் மாத இதழ் சாவர்க் கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வரவிருக்கும் இதழ்களை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தொடர்ந்து சமர்ப்பணம் செய்யும்' என்றும் ஜி.எஸ்.டி.எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1984 இல் நிறுவப்பட்ட ஜி.எஸ்.டி.எஸ்-இன் அடிப்படை நோக்கம், பல்வேறு சமூக-கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் காந்தியாரின் வாழ்க்கை, பணி மற்றும் எண்ணங்களைப் பிரச்சாரம் செய்வதாகும். காந்தியவாதிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு பரிந்துரைக்கப்பட்ட அமைப்பு அதன் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுகிறது.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த இதழ் காந்தியை மறந்துவிட்டது, காந்தியின் கொள்கைகளையும் அவரது மக்கள் பணிகளையும் மட்டுமே மக்களிடம் கொண்டுசெல்ல ஒன்றிய அரசால் துவங்கப்பட்ட இதழ் காந்தியாரை மறந்து ஜனசங்கத் தலைவர்களின் புகழ்பாடத் துவங்கியுள்ளது. 

இம்மாத இதழின் முகப்பு அட்டையில் சீதாராம் வரைந்த சாவர்க்கர் ஓவியம் உள்ளது. மேலும், 68 பக்க இதழில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி, மேனாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மராத்தி நாடக மற்றும் திரைப்பட எழுத்தாளர் சிறீரங், காட்போல், அரசியல் விமர்சகர் உமேஷ் சதுர்வேதி மற்றும் எழுத்தாளர் கன்ஹையா திரிபாதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் இந்துத்துவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளுக்கே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல, சாவர்க்கர் அவருடைய புத்தகத்தில் இந்துத்துவம் பற்றி எழுதிய ஒரு கட்டுரை எடுக்கப்பட்டு, இந்த இதழில் அவருடைய பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

கோயலின் முன்னுரையைத் தொடர்ந்து, இந்தியாவில் மத சகிப்புத்தன்மை பற்றிய மகாத்மா காந்தியின் கட்டுரை உள்ளது. வாஜ்பாயின் கட்டுரை சாவர்க்கரை ‘ஒரு ஆளுமை அல்ல, அவர் ஒரு சிந்தனைவாதி என்றும், காந்திக்கு முன் ஹரிஜன் சமூகத்தைச் சேர்ந்த மக்களை உயர்த்துவது பற்றி சாவர்க்கர் பேசியதாகவும் குறிப்பிடுகையில், காட்போல் சாவர்க்கர் மற்றும் காந்தியின் படுகொலை வழக்கு பற்றி எழுதினார். காந்திக்கும் சாவர்க்கருக்கும் இடையிலான உறவைப் பற்றி நூலாசிரியர் மதுசூதன் செரேக்கர் எழுதியுள்ளார். அதே நேரத்தில், இந்த இதழில் சாவர்க்கர் எழுதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பக்கமும் உள்ளது.

சாவர்க்கார் என்பதற்குப் பதில் ஆங்கிலேயே சர்க்காருக்கு இவரைவிட மன்னிப்புக் கடிதம் எழுதியவர் யாருமில்லை என்ற 'சாதனையாளர்' என்று வேண்டுமானால் பட்டம் சூட்டலாம்.

'To The home member of the government of India' என்று ஆங்கில அரசுக்கு சாவர்க்கர் எழுதிய கடிதத்தில் (1913).

"ஆங்கிலேயே அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால் நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாள னாகச் செயல்படுவேன்" என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் (ஆங்கிலேய) அரசுக்குச் சேவகம் செய்ய தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லை என்றால், இந்த மகன் வேறு எங்கே சென்றிடுவேன்?" என்று வெள்ளைக்கார அரசிடம் சரணடைந்த சாவர்க்கார்தான் தியாகியா? (ஆதாரம்; 'ஆனந்தவிகடன்' - இணைய இதழ் 18.10.2021)

இவர்தான் காந்தியாருக்குச் சமமானவராம்! பாசிசம் என்றால் பொய்யிலே பிறந்து வெறியிலே வளர்ந்த பயங்கரவாதத்தின் மறுபெயர்தானே!

இந்த 2022லும் ஒரு பாசிசவாதி பற்றி பொய்யும் புரட்டுமாக அரசு நடத்தும் இதழிலே அச்சிடுவதை என்ன சொல்ல! வெட்கக்கேடு!


No comments:

Post a Comment