பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா?

 பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா?

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும்; பொருள் உள்ள வாழ்க்கையாக நாம் அதனை அமைத்துக் கொள்ளவும் வேண்டும். சிலர் வாழ்க்கைக்கே பொருள் தெரியாமல் வாழுகின்றனர் - வாழ்ந்து மடிகின்றனர்.

“பொருள்" என்ற சொல்லை பல பொருளிலும் வாழ்க்கையோடு பொருத்திப் பாருங்கள். பொரு ளில்லா வாழ்க்கை, பயனற்ற வாழ்க்கை.

தக்க பொருளிலிருந்தும் பயனில்லா வாழ்வு வாழும் மனிதர்கள் மாந்த குலத்தில் ஏராளம்!

வாழ்க்கைக்குப் பொருள் தேவைதான். ஆனால் அதனைச் சேர்க்கும் வழி தக்க வழியாக இருக்க வேண்டாமா? பலரும் சிந்திப்பதே இல்லை.

"எவ்வளவு முறைகேடு செய்தும், நேர்மையற்ற வழியானாலும் பரவாயில்லை - நாம் ‘கோடி ஈஸ்வரர்களாக' (!) ஆகி விட வேண்டும். அதன் மூலம் நம்மைப் பாராட்டி சதா புகழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு ‘ஜால்ராக் கூட்டத்தின்' பஜனை - பல்லிளித்த நாமாவளிகள் எப்போதும் நம் காது களை அடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்" - என்றிருக்கலாமா? மாறுபட்ட பயனுறு கருத்துகள் கூட காட்டில் காய்ந்த நிலவாகி, கூட்டில் வாழாது பறந்து அலையும் பறவைபோல சம்பந்தப்பட்ட நபர்களுக்குப் பயன் ஏதும் தரும் நிலையில் இருக்காது!

சிலருக்குப் பொருளைச் சேர்க்க மட்டுமே தெரியும்; அதைப் பயனுறு விதத்தில் செலவழிக் கவோ, பயன்படுத்தவோ தெரியாது! தெரியவே தெரியாது!

‘வைத்திழக்கும் வன்கணவர்கள்' அவர்கள்! வாழும் வாழ்க்கைக்குப் பொருள் தேவை - எப்படி? ஏன்? என்று யோசியுங்கள். பொருள் ஒரு கருவி - எழுதுகோல் போல, தேவைப்படும் போது அதை எடுத்து எழுதலாம்.

எழுதப்படிக்கவே தெரியாத ஒருவரது பையில் விலை உயர்ந்த தங்கப் பேனா - பார்க்கர், ஹீபர்ஸ் என்பதோ - இத்தியாதி வகையோ இருந்தால் என்ன பயன்?

படம் எடுக்கக்கூட நம்முடன் உள்ளவர்களுக்குக் கூட சற்று கூச்சமாக இருக்கும் - உண்மை தெரிந் தவர்கள் ஆனதால். என்றாலும் போலிகளுக்கு வெளிச்சம் ஏராளம் கிடைக்கிறது அல்லவா?

தக்க வகையில் பொருள் சேர்ப்பது - ஈட்டுவது தான் சரியான வாழ்க்கை முறை - தவறான வழி கன்னக்கோல் கனவான்கள் கருவூலச் சேர்ப்பு கைங்கர்யமானால் இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளைய மறு நாள் அச்செல்வம், ‘நீரெழுத்தாகி' நிலைத்திருக்காது!

வெறியோடு பணம் சேர்க்கும் பித்தர்களுக்கும், எத்தர்களுக்கும் இதெல்லாம் புரியாது; புரிதலுக்கு என்று பாடம் எடுத்தாலும் அது முற்றிலும் வீண் தான்.

கெட்டபின்பு சிலருக்கு ஞானம்!

பட்டபின் பலருக்கு அழிவு

பணத்தைக் குறுக்கு வழியில் சேர்த்து உயர் பவர்கள். சராசரி மனிதனின் மன நிம்மதியைப் பெற்றவனாகவோ, அறவழியைக் கற்றவனாகவோ, சரியான அனுபவத்தைப் பெற்றவனாகவோ ஆக முடியுமா?

காரணம் நிதானமின்மை, பணவெறி, பதவி வெறி, புகழ் வெறி - பலரை நிலையில் நிற்கவே செய்யாது.

வீழ்ந்தபிறகு, தண்டனை தக்க முறையில் அனு பவித்து மீண்ட பிறகே, நல்வாழ்வு, அடக்கமான வாழ்வு, ஒழுங்கீனக் கேட்டிலிருந்து வெளியேறியல் லவோ நேர்மை வாழ்வை எளிய வாழ்வாக அமைத்துக் கொள்ளலாம் என்ற புது முடிவினைக் கூட எடுத்துக் கொள்ளத் தெரியாமல்,

சூதாட்டத்தில் எப்படிப் பொருளை இழக்க இழக்க மேலும் மேலும் பந்தயம் கட்டி, ‘இழத்தெறூ உம் காதலிக்கும் சூதேபோல்' என்ற வள்ளுவனின் உவமைக்கேற்ப வாழ்ந்து - இல்லை வெந்து, நொந்து வாழ்க்கையை பொருளற்ற வாழ்க்கையாக்கி - வாழ்நாளை கானல் நீராக்கிப் பயன் ஏதும் காணாத பரிதாபத்திற்குரியவர்களாகி நிற்கிறார்கள் என்பதை உணர்ந்தால் - பொருளைப் பொருளுடன் கூடிய வாழ்க்கைக்காக மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உண்மை புத்தாக்கமாகாவது பளிச்சிடக்கூடும்.

(மேலும் சிந்திப்போம்)


No comments:

Post a Comment