பேச்சுரிமை - எழுத்துரிமை இல்லாத நாடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

பேச்சுரிமை - எழுத்துரிமை இல்லாத நாடா?

குஜராத் மாநிலத்தின் இனப் படுகொலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சமூக ஆர்வலர்கள் டீஸ்டா செதல்வாட், சிறீகுமார், முகமது சுபேர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், மேனாள் காவல்துறை அதிகாரி சிறீகுமார் மற்றும் ஆல்ட் நியூஸ் ஊடகத்தின் இணை நிறுவனர் முகமது சுபேரையும் குஜராத் மாநில பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்தனர். இதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), அறப்போர் இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற குடிமைச் சமூக அமைப்புகள் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிற்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஃப்ரீடீஸ்டா , ஃப்ரீசுபேர், ஃப்ரீசிறீகுமார் போன்ற ஹேஷ்டேக்குகளையும், "மவுனம் கலைவோம் குரல் கொடுப்போம்" என்ற வாசகங்களையும் பயன்படுத்தினர். சென்னை, காஞ்சிபுரம், கோவையிலும் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது என்றும், மேலும் இந்தியா முழுவதும் 30 முக்கிய நகரங்களில் நடைபெறும் எனவும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது. இவ்வார்ப் பாட்டத்தின் போது பொதுநலன் கருதி எவ்விதப் பிரச்சினையும் நேரிடக்கூடாது என்று காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

எழுத்துரிமை, பேச்சுரிமைக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது. குஜராத் கலவரம் என்பது வரலாற்றில் மிகப் பெரிய கறுப்பு அத்தி யாயம். விறகுக் கட்டைகளைக் கட்டி அடுப்பில் எரிப்பது போல ஒரு குடும்பத்தினரே எரிக்கப்பட்டுள்ளனர் - அதுதான் பெஸ்ட் பேக்கரிப் படுகொலை!

நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் குடலைக் கிழித்து, அந்தச் சிசுவினை நெருப்பில் எரியூட்டிக் குதித்தாடிய கொடூரத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.

குஜராத் மோடி அமைச்சரவையில் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த மாயா கோட்டானி என்பவர் முன்னின்று நடத்திய படுகொலை காரணமாக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப் பட்டது. அவர் பிறகு விடுதலையானதுதான் ஆச்சரியம்!

இந்தப் படுகொலையை முதல் அமைச்சரே நேரில் சென்று செய்தார் என்று கூறவில்லை. அவர் ஆட்சியில் இது நடந்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை!

அரியலூரில் இரயில் கவிழ்ந்தது என்பதற்காக ஒன்றிய  இரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியும், இணை அமைச்சர் ஓ.விஅளகேசனும் ஏன் பதவி விலகினார்கள்?

அதன் பொருள் என்ன? அதற்கான பொறுப்பை ஏற்கும் பண்பாடும், கடப்பாடும்தானே! இதனைச் சொன்னால், எழுதினால் அவர்கள் எல்லாம் குற்றவாளிகளா?

சிறையில் தள்ளப்பட வேண்டியவர்களா? அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டியது அவசியமும், கட்டாயமும் ஆகும்.

பேச்சுரிமை, எழுத்துரிமை இல்லாத நாடு பாசிசம் ஆட்சி செய்யும் நாடே!

No comments:

Post a Comment