அ.தி.மு.க. என்றால் 'அடமான தி.மு.க.' என்று அர்த்தம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

அ.தி.மு.க. என்றால் 'அடமான தி.மு.க.' என்று அர்த்தம்!

துணைவேந்தர்களை நியமிக்கும் மாநில அரசின் உரிமையை 'தாரை' வார்த்தது கடந்த கால பழனிசாமி ஆட்சிதான்!

துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை  
மாநில அரசுக்கு என்ற பழைய நிலை திரும்பவேண்டும்!

அரியலூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

அரியலூர், ஜூலை 16  அ.தி.மு.க. என்றால் அடமான தி.மு.க. என்று அர்த்தம்! துணைவேந்தர்களை நியமிக் கும் மாநில அரசின் உரிமையை 'தாரை' வார்த்தது கடந்த கால பழனிசாமி ஆட்சிதான்! துணைவேந்தர்களை நிய மிக்கும் உரிமை - மாநில அரசுக்கு என்ற பழைய நிலை திரும்பவேண்டும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வருகிற ஜூலை 30 ஆம் தேதி அரியலூரில் நடை பெறவுள்ள திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்கான அலுவலகத்தைத் திறந்து வைக்க நேற்று (15.7.2022)  அரியலூர் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

காந்தியார் சிலை திறப்பு விழா

வருகிற ஜூலை 30 ஆம் தேதி இதே அரியலூரில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று மாலையில்கூட இளைஞரணி மாநாட்டு அலுவலகத் திறப்பு விழாவும், அதேபோல, ஏற்கெனவே அறி வித்தபடி, இத்தொகுதியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் அருமைச் சகோதரர் சின்னப்பா அவர் களுடைய அரிய முயற்சியினாலும், காங்கிரஸ் தோழர் களுடைய சிறப்பான ஒத்துழைப்பினாலும், அனைத்து இயக்கங்களைச் சார்ந்தவர்களின் ஆதரவோடு, காமராசர் பிறந்த நாளான இன்றைக்கு, காந்தியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, இன்றைக்கு மாலை நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில், மாண்புமிகு அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மதிப் புறு தலைவர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் கே.எஸ்.அழகிரி அவர்களும் கலந்துகொள்கின்றனர். 

மாநில ஆட்சியின் உரிமையை 'தாரை' வார்த்ததே பழனிசாமி ஆட்சிதான்

செய்தியாளர்: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் வினாத்தாளில், ஜாதி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறதே?

தமிழர் தலைவர்: இன்று காலையில்கூட அதுகுறித்து சென்னையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குத் தெளிவான பதிலை சொன்னேன்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் காவி மய மானதினுடைய விளைவுதான் அது. பல்கலைக் கழகங்கள், தமிழ்நாடு அரசினுடைய கட்டுப்பாட்டில் சட்டப்படி இருக்கவேண்டியவனவாகும். ஆனால், கடந்த ஆட்சி, தங்களுடைய உரிமையை, டில்லிக்கு - ஆளுநருக்குத் தாரை வார்த்ததினுடைய தீய விளைவு - இப்படியெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது கலைஞர் காலத்திலும், ஏன் ஜெயலலிதா அம்மையார் அவர்களுடைய காலத்திலும்கூட - துணைவேந்தர்களை நியமிக்கக் கூடிய உரிமை தெளிவாகத் தமிழ்நாடு அரசுக்குத்தான் - மாநில அரசுக்குத்தான் இருந்தது.

அதை மாற்றியமைத்து, உள்ளே நுழைந்தது என்பது கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பழனிசாமி அவர்கள் காலத்தில் நடந்தது.

அதை மாற்றி அமைக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்பொழுது புதிய மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

இதற்கிடையில், ஏற்கெனவே காவிமயமான சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில், ஜாதி அடிப்படையில் கேள்வி கேட்கக்கூடிய அளவில் இருக்கிறார்கள் என்று சொன்னால், ''இதை ஆராய்ச்சி செய்கிறோம்'' என்று அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் சொல்வது பொருத்தமாகாது.

ஏற்கெனவே அந்தப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் எதிர்த்து கிளர்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

எனவே, சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில், ஜாதிபற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு யார் காரணமாக இருந்தாலும், முழுப் பொறுப்பேற்கவேண்டிய நிலை துணைவேந்தருடையதுதான்.

எனவேதான், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்; துணைவேந்தர்மீது மட்டுமல்ல, அதற்குக் காரணமான அமைப்புகள்மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

பல்கலைக் கழக மாணவர்களுக்கு, ஜாதிபற்றிய கேள்விகளைக் கேட்கக்கூடிய அளவிற்கு, அதுவும் பெரியார் பல்கலைக் கழகம் என்று பெயர் கொண்ட ஒரு பல்கலைக் கழகத்தில் கேட்கப்பட்டது மிகப்பெரிய தலைக்குனிவாகும்.

இதற்கெல்லாம் மூல காரணம், அடிப்படையில் ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர் மூலமாக, மாநில அரசினுடைய தகவலுக்கே வராமல் நடத்துகிறார்கள்.

அண்மையில்கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவினை இணை வேந்தராக இருக்கக்கூடிய உயர்கல்வித் துறை அமைச்சரே அதைப் புறக்கணிக்கக் கூடிய அளவில் நிலைமைகள் இருக்கின்றன.

எனவேதான், இதற்கு உடனடியாகப் பரிகாரம் தேடவேண்டும். இதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏற்கெனவே சேலம் பல்கலைக் கழகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. 

ஜாதி வெறி, மதவெறியை ஊட்டுவதுதான் அவர்களுடைய இன்றைய அடிப்படை பணி. அதை மறைமுகமாக செய்கிறார்கள். 

காவிகள் உள்ளே நுழைந்ததினுடைய விளைவுதான், இப்படிப்பட்ட தீய விளைவுகள் நடைபெறுகின்றன.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் அறப்போராட்டத்திற்குத் தடையாம்!

செய்தியாளர்: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் (வார்த்தை கட்டுப்பாடு) என்று ஒன்றிய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளதே, அதுபற்றி தங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: 'ஜனநாயகத்தை' வளைக்கிறார்கள். 'தாங்கள்தான் உண்மையான ஜனநாயகவாதி' என்று காட்டுகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிப்பதுதான்  அவர்களுடைய வேலைகளாக ஒவ்வொரு நாளும் இருக்கின்றன.

மிகப்பெரிய அளவிற்கு வார்த்தைகளுக்கு ஒரு தனி அகராதி தயாரிப்பதோடு மட்டுமல்ல, அதற்கும் மேல், இன்று பிற்பகல் வந்திருக்கின்ற செய்தி என்னவென்றால்,

வழக்கமாக ஆரம்ப காலத்திலிருந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள காந்தியார் சிலை முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி அறப்போராட்டங்களை நடத்துவார்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள், பட்டினிப் போராட்டத்தை நடத்துவார்கள். இது காலங்காலமாக நடந்து வருவதுதான். அதற்கு இடமே கிடையாது - அவற்றை தடை செய்கிறோம் என்று இன்றைய ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

எனவே, நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

இந்த உச்சரிப்புகூட, 'சர்வாதிகாரம்' என்று சொல்லக்கூடாது என்று அவருடைய அகராதியில் வைத்திருப்பது எவ்வளவு உண்மையாகி வருகிறது என்பதற்கு இந்தச் செய்திகள் எல்லாம் ஆதாரங்களாகும். இது கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க. என்றால் அடமான தி.மு.க. என்று அர்த்தம்

செய்தியாளர்: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க. அதன் பணியை சரியாக செய்யவில்லையே?

தமிழர் தலைவர்: அ.தி.மு.க. இருக்கிறதா?

அ.தி.மு.க. இருந்தால் அல்லவா சொல்லவேண்டும். அவர் இவரை நீக்கவிட்டார்; இவர் அவரை நீக்கிவிட்டார் என்கிறார்கள். அக்கட்சியில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அ.தி.மு.க. என்பதற்கு அடையாளம் என்னவென்றால், அர்த்தம் என்னவென்றால் நடைமுறையில், அடமானம் வைக்கப்பட்ட தி.மு.க. என்று.

டில்லிக்கு அடமானம் வைக்கப்பட்டது; பா.ஜ.க.விற்கு அடமானம் வைக்கப்பட்டது.

எனவேதான், இவர்களுக்குள்ளே என்ன போட்டிகள் இருந்தாலும், முதலில் அடமானப் பொருளை மீட்கவேண்டும். அப்படி மீட்கப்பட்டு, யாருக்கு உரியது என்று பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆனால், அது யாருக்கும் சம்பந்தமில்லாத இடத்தில் அடமானத்தில் வைக்கப்பட்டுள்ளது அக்கட்சி. மூழ்கிப் போய், அது ஏலம் போடக்கூடிய அளவிற்கு வருவதற்குமுன், இவர்கள் மீட்க முயற்சிக்கட்டும்.

அடமானம் வைக்கப்பட்ட இடத்தில், அந்தக் கட்சியை, அவர்களே 'சுவீகாரம்' எடுத்துக்கொண்டு, அதைக் கபளீகரம் செய்யக்கூடிய அளவிற்கு வந்துவிட்டார்கள்.

காவியினுடைய நிலைகள் தமிழ்நாட்டில் 'திருவிளையாடல்'களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் அடிப்படை நிதிநிலைதான்!

செய்தியாளர்: அரசு ஆசிரியர்கள் ஒப்பந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களே?

தமிழர் தலைவர்: இன்றைக்கு நிதிநிலைகள் சரியானால், இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீரும்.

ஆசிரியர்கள் பிரச்சினைகளைப்பற்றி முதலமைச்சர் அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்.

இடதுசாரிகள் நண்பர்கள் மட்டுமல்ல, முற்போக்கு எண்ணம் உள்ள அத்துணை பேரும் ஆசிரியர் பிரச்சினைகள்குறித்து தெளிவாக அவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். சட்டமன்றத்திலும் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நிதிநிலை இருக்கிறது. அது சரியான நிலையில், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.

கல்வித் துறைக்கு மிகப்பெரிய அளவிற்கு அதிகமான நிதியை ஒதுக்குவது மட்டுமல்ல, அங்கே இருக்கக்கூடிய ஆசிரியர்களை நிரந்தரமாக அமைக்கக்கூடிய அளவிற்கு, அவர்களுடைய குறைபாடுகளை உணர்ந்து செய்யக்கூடிய வாய்ப்புகள், அடுத்த நிதிநிலை அறிக்கையில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

நாங்களும் வாய்ப்புகள் கிடைத்தபொழுதெல்லாம் அப்பிரச்சினைகள் குறித்துப் பேசியிருக்கிறோம். கூட்டணித் தலைவர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

நிலுவையில் உள்ள மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்

செய்தியாளர்: சேலம் பல்கலைக் கழகத்தில்  செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித் தாளில், ஜாதிபற்றிய கேள்விகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. எப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: முதலில் இந்தக் கேள்வியை எப்படி வெளியில் விட்டார்கள்? இப்படிப்பட்ட கேள்வியை தயாரித்தவர்கள் யார்? உள்ளே போனவர்கள் யார்? அவர்களை நியமித்தவர்கள் யார்? இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் இருக்கின்றன.

யார்மீது, யார் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

எனவேதான், துணைவேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம், ஏற்கெனவே இருந்ததுபோன்று, மாநில அரசுக்குத்தான் இருக்கவேண்டும் என்ற நிலையைத் திருப்பவேண்டும்.

இந்தப் பிரச்சினைகள் வெவ்வேறு ரூபத்தில், வெவ்வேறு இடங்களில் வரும்.

இதற்கு ஒரே தீர்வு, நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்படவேண்டும் என்பதுதான்.

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment