ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறியவர் மோடி! ஒரே மாதத்தில் 1.4 கோடி பேரின் வேலையை பறித்ததுதான் மோடியின் சாதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக் கூறியவர் மோடி! ஒரே மாதத்தில் 1.4 கோடி பேரின் வேலையை பறித்ததுதான் மோடியின் சாதனை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, ஜூலை 9 மோடி ஆட்சியில் நாளுக்கு நாள் வேலை யின்மையும், விலைவாசியும் உச்சத்தை தொட்டு வருகின்றன என்றும், மக்களின் வாங்கும் சக்தியை ஒவ்வொரு நாளும் அரசின்  நடவடிக்கைகள் அடித்து நொறுக்கி வருகின்றன என்றும் சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார்.  

வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு  தொடர்பாக தொடர்ந்து வெளியாகி வரும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி தமது சுட்டுரைப் பதிவுகள் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருக்கும் அம்சங்கள் வருமாறு: 

''வேலையின்மை தீவிரமடைகிறது; விலை வாசி நாளுக்கு நாள் கடுமையாகிறது; மக்களின் வாங்கும் சக்தி அழிக்கப்படுகிறது; உற்பத்திப் பொருட்களின் விற்பனை தொடர்ந்து வீழ்கிறது; அதன் விளைவாக உற்பத்தியும் தேக்கமடைகிறது; பொருளாதாரச் சரிவு மிகவும் ஆழமடைகிறது; இவற்றின் தொடர் விளை வாக மேலும் மேலும் வேலையிழப்புகளும், வேலை பறிப்புகளும், துயரங்களும் நாட்டு மக்களை சூழ்கின்றன. 

எதிர் திசையில் பயணம்

இதற்குத் தீர்வுகாண மோடி அரசு பொது முதலீடு களை அதிகப்படுத்துவது, அவற்றின் மூலமாக வேலைவாய்ப்புகளையும் பணப் புழக்கத்தையும் அதிகரித்து மக்களின் வாங்கும்  சக்தியை அதிகரித்து, அதன் மூலமாக உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஆனால், இதற்கு நேர் எதிரான திசையில் மோடி அரசு பயணிக் கிறது. 2022 ஜூன் மாத உழைப்புச்சந்தை தொடர்பான புள்ளி விவரங்கள் மிகப்பெரும் அளவிற்கு ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கின்றன. மே மாதத்துடன் ஒப்பிடும் போது  ஒரே மாதத்தில் 140 லட்சம் பேரின் வேலை  பறிக்கப்பட்டிருக்கிறது. இது மிக மிகப் பெரிய எண்ணிக்கை ஆகும். 2022 மே மாதத்தில் நாட்டில் மொத்தம் வேலைசெய்யும் தொழி லாளர் எண்ணிக்கை 40.4 கோடி என்பதிலிருந்து  ஜூன் மாதத்தில் 39 கோடியாக பெரும் வீழ்ச்சி யை சந்தித்திருக்கிறது. கோவிட் ஊரடங்கு போல எதுவுமே இல்லாத காலத்தில் நடந்துள்ள மிகப்பெரிய வேலையிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  1.4 கோடி அளவிற்கு தொழிலாளர்கள், பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள், உழைப்புப் படை யிலிருந்து வெளி யேற்றப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக கிராமப்புற வேலையிழப்பு மிக அதிக அளவிற்குப் பதிவாகி யுள்ளது. இந்த வேலைபறிப்பு மற்றும் வேலையின்மை விளைவாக நாட்டில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 7.1 சதவீதமாக இருந்தது.  ஒரே மாதத்தில் - அதாவது ஜூன் மாதத்தில் 7.8  சதவீதமாக அதிகரித்துள்ளது. 

அம்பலமாகும் மோடியின் பொய்களும் - மோசடிகளும்!

இது, இந்தியா உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார மய்யமாக மாறி விட் டது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பொய் களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்துகிறது. இதில் குறிப்பாக மோடி அரசு “ஸ்டார்ட் அப்” என்ற பெயரிலான சேவை சார் துறைகளில் பெரிய அளவிற்கு தனது ஆட்சியில் வேலை வாய்ப்பு வழங்கி சாதனை படைத்துவிட்டதாக இடைவிடாமல் செய்து வருகிற பிரச்சாரமும் வெறுமனே மோசடி யானது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ''ஸ்டார்ட் அப்'' துறைகளில் நடப்பு ஆண்டில் இதுவரை 12 ஆயிரம் வேலை கள் பறிக்கப்பட்டு, அந்த இளைஞர்கள் வீதிக்கு  துரத்தப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் துறைகளில் மொத்தம் 60 ஆயிரம் பேரின் வேலைகள் பறிக்கப் படும் அபாயம் உள்ளதாக விவரங்கள் குறிப்பிடு கின்றன. 

குறிப்பாக ''ஸ்டார்ட் அப்'' சேவை துறைகளாக துவக்கப்பட்ட ஓலா நிறுவனம், பிளிங்கிட், பைஜுஸ், அன்  அகாடமி, வேதாந்து, கார்ஸ்24, மொபைல் பிரீமியர் லீக், லிடோ லேனிங், எம்பைன், டிரெல்,  பார்அய், பர்லான்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் மட்டும் 12 ஆயிரம் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கி வெளியே அனுப்பியுள்ளன.  இதுதான் மோடி ஆட்சியில் வெற்றிகரமான வேலைவாய்ப்பு என்ற மோசடிப் பிரச்சாரத்தின் உண்மை நிலவரம். மோடி ஆட்சியில் வேலை பறிப்பும் சமூக சீர்குலைவுமே ஒவ்வொரு நாளும் தீவிரமடைகிற உண்மையாக மாறியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, விலைவாசி உயர்வை பொறுத்த வரை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இதன்விளைவாக அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை பெருமளவிற்கு ஜூன் மாத விவரங்களின்படி சரிந்திருக்கிறது. ஷாம்பு முதல் பிஸ்கட் வரை  அனைத்து நுகர்வு பொருள்களின் விற்பனையும் வீழ்ந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த  பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங் கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. விலை உயர்த்தப்பட்டதால் மேலும் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி மிகக்கடுமையாக வீழ்ந்திருப்பதால் நுகர்பொருள்களை வாங்குவதை கிராமப்புற மக்கள் கணிசமாக குறைத்துள்ளனர் என்ற விவரமும் வெளியாகியுள்ளன.  எனவே வேலை யின்மையும், விலைவாசி உயர்வும் மோடி அரசின் படாடோப - மோசடி பிரச்சாரங்களைத் தாண்டி மக்களின் துயரங்களையும், வேதனைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.''  

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment