வடக்கு - தெற்கு போராட்டங்களின் தன்மை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 20, 2022

வடக்கு - தெற்கு போராட்டங்களின் தன்மை

இந்தியாவில் தென்மாநிலங்கள் விடுதலைக்குப் பிறகு கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் இம் மூன்றிலும் அதிக கவனம் செலுத்தி வந்தன.  பொருளாதாரம், இதர வருவாய் தொடர்பான திட்டங்களை தென் மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்படுத்தின. அதற்கேற்ப கல்வி முறை மற்றும் அதனைத்தொடர்ந்து தொழில்கல்வி, இதர கலை மற்றும் அறிவியல் கல்வி,  தடையின்றி கிடைக்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் என பல விதங்களில் தென் மாநிலங்கள் நன்கு வளர்ச்சி அடைந்த மாநிலங்களாக உள்ளன.

முக்கியமாக தமிழ்நாடு தொடர்ந்து திராவிட கட்சிகளின் ஆட்சியில் சமூக சமத்துவம் மற்றும் சமூக நீதி போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தியதால் கல்வி கற்றவர்களுக்கு - உலகத்தின் அனைத்து வாசல்களும் திறந்து வைத்துக்காத்திருக்கின்றன.  தமிழர்கள் அதை திறமையோடு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வடக்குப் பகுதியில் தொழில் வளர்ச்சியோ, கல்வி அறிவோ பெரும்பாலும் கிடையாது. அவர்கள் குறிப்பிட்ட சில பணிகளை மட்டுமே குறிவைத்து நகர்வார்கள். நன்கு படித்தவர்கள் என்று சொல்லக் கூடியவர்களின் உயர்ந்த பட்ச படிநிலை வங்கிப்பணி. அதற்கு அடுத்த கல்வி நிலையில் இரயில்வே பணிக்கும்,  ராணுவத்திற்கும் சென்று விடுவது வழக்கம்.

இதை வாக்கு வங்கியாக மாற்ற - குறிவைத்தே வங்கிகளை இணைத்ததையும், ரயில்வே பட்ஜெட் டை நீக்கியதையும், மோடி பெரிய அளவில் ஏதோ செய்யப் போகிறார் என்ற அளவில் ஒரு பெரும் பரப்புரையாக கொண்டு சென்றார்கள். அங்குள்ள மக்களும் பெரிதாக எதிர்பார்த்தார்கள்.

 பெரும்பான்மை மக்களை சிந்திக்கவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து மதக் கலவரம், ஹிந்து முஸ்லீம் பிரச்சினை, மாட்டுக்கறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தின்மீது தாக்குதல், ராமர் கோவில், மசூதி இடிப்பு போன்றவைகளோடு இந்த சூடு தணியாமல் இருக்க மோடியே ஹிந்து சுடுகாடு, முஸ்லீம் சுடுகாடு என பேசி ஹிந்து முஸ்லீம் பிரச்சினையை அணையாமல் பார்த்துக் கொண்டார். அதே போல் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அவர்களது வாழிடங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது என மிகவும் மனிதாபிமானமில்லாத அரசுகளாக பாஜக ஆளும் மாநில அரசுகள் நடந்து வருகின்றன.

ஆனால் 8 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத சூழலில், விலைவாசி உயர்ந்து, தனிநபர் வருமானம் நலிவடைந்து, வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், தாங்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ராணுவ வேலை எனும் கனவும் தகர்க்கப்படும் போது வட மாநில இளைஞர்களின் கோபம் உச்சம் பெற்றிருக்கிறது.

இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம், பெரும்பாலானோரின் வாழ்க்கையை பற்றிய சிந்தனை ஒரு பணி சார்ந்து இருந்தது என்பதே. இது அவர்களின் கல்வியின் தரத்தோடு சேர்த்துப் பார்க்க வேண்டிய விஷயம் என்றே தோன்றுகிறது.

இவ்வாறு ஒரு உடல் வலு பணியைச் சார்ந்து தயாராகக் கூடியவர்கள், அவ்வேலை கிடைக்காமல் போனால், அவர்களுக்கான மாற்று நிலை என்ன என்பது இன்னும் கேள்விகளை உருவாக்குகிறது. வடக்கின் போராட்டம் அக்னி பாத் திட்டத்திற்கு எதிரானது.  தெற்கின் போராட் டம் நீட், புதிய கல்விக் கொள்கை  இவற்றிற்கு எதிரானது.

வடக்கே ஏன் 'நீட்டுக்கு' எதிர்ப்பு இல்லை என்றால், காரணம் அங்கு கல்வியில் நாட்டமில்லை. அதுவும் கிராமப் பகுதிகளில் கேட்கவே வேண்டாம்.

தமிழ்நாட்டிலோ கிராமப் பகுதிகளிலிருந்தும் மக்கள் மருத்துவர்களாவது நாளும் அதிகரித்து வருகிறது. 'நீட்' அதற்கு முட்டுக்கட்டை போடும் போது கடும் எதிர்ப்புக் கர்ச்சனை இங்குப் பீறிட்டுக் கிளம்புகிறது.

வடக்குக்கும், தெற்குக்கும் இடையே உள்ளே இந்த அழுத்தமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆம் வடக்கே பெரியார் தேவைப்படுகிறார் - திராவிட இயல் தத்துவம் தேவைப்படுகிறது.

இதனை வடக்கே உள்ள ஒடுக்கப்பட்ட சமு தாயத் தலைவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். 

No comments:

Post a Comment