மலையேற்றத்தில் சாதனை படைத்த பெண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

மலையேற்றத்தில் சாதனை படைத்த பெண்!

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்ஜீத் கவுர் மலையேற்றத்தில் சாதனை படைத்திருக்கிறார். ஒரு மாதத்துக்குள் எவரெஸ்ட், அன்னபூர்ணா, கன்ஜன்ஜங்கா, லோட்சே ஆகிய 8,000 மீட்டர் உயரமுள்ள நான்கு மலைச்சிகரங்களில் ஏறியிருக்கிறார்!

இமாச்சலப் பிரதேசத்தில் சோலன் மாவட்டத்தில் உள்ள பஞ்ரோல் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்ஜீத். இவர் அப்பா ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுநர். தற்போது குடும்பமே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது.

கிராமத்துக்கு அருகில் இருக்கும் சிறிய மலையில் ஏறுவது என்றால் சிறு வயதிலிருந்தே பல்ஜீத்துக்கு ஆர்வம் அதிகம். மகளின் மலையேற்ற ஆர்வத்தைப் புரிந்துகொண்ட இவருடைய தாய் சாந்தி தேவி, தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.

பொருளாதார வசதி இல்லாத, கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மலையேற்றம் என்பது சவாலான விஷயம். சத்தான உணவு, உடற்பயிற்சி, மலையேற்றத்துக்கான செலவுகள் போன்றவற்றைச் சமாளித்து, 27 வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் பல்ஜீத். ஒரே மாதத்தில் நான்கு மலைச்சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்!

“சின்ன மலைகளில் ஏறியிருக்கிறேனே தவிர, மலையேற்றம் பற்றிப் பெரிதாக எதுவும் தெரியாது. பாடப் புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொண்ட பிறகு, மலையேற்றத்தில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. மலையேற்றத்துக்குத் தயாராவது கடினமான பணிதான். லட்சியத்தை நினைத்துக்கொண்டால், கஷ்டமாகத் தெரியாது. என் பயணத்துக்கு நிதி உதவிசெய்பவர்களைப் (ஷிஜீஷீஸீsஷீக்ஷீ) பிடிப்பது இன்னும் சவாலாக இருந்தது. ஆனால், சாதனைக்குப் பிறகு அவையெல்லாம் பெரிய தடைகளாகத் தெரியவில்லை. கொஞ்சம் முயன்றால் பெண்களாலும் லட்சியத்தை நிறைவேற்ற முடியும்” என்கிறார் பல்ஜீத் கவுர்.

“பல்வேறு அமைப்புகளிடமிருந்து மலையேற்றத்துக்கான நிதியைப் பெற்றிருக்கிறோம். நானும் என் நகையை விற்றுப் பணம் கொடுத்து, என் மகளின் லட்சியத்துக்குத் துணை நின்றேன். நம் நாட்டில் வாழும் பொருளாதார வசதியில்லாத கோடிக்கணக்கான பெண்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார் என் மகள். எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்கிறார் தாய் சாந்தி தேவி.

இந்திய மலையேற்ற அமைப்பின் தலைவர் ஹர்ஷ்வந்தி பிஷ், “பல்ஜீத்தின் ஒவ்வோர் அடியும் பெண்கள் மலையேற்றத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்கும். 

இவரைப் பார்த்து இன்னும் பல பெண்கள் மலையேற்றத்தில் சாதனைகளைப் படைப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

No comments:

Post a Comment