வெல்க 'விடுதலை'! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

வெல்க 'விடுதலை'!

"பெரியாரே - நம் ஒளி!

‘விடுதலை'யே நம் வழி!!"

என்று ‘விடுதலை'யின் பொன்விழா ‘விடுதலை' மலரில் எழுதினார் ‘விடுதலை' ஆசிரியரும் தமிழர் தலைவருமான மானமிகு கி.வீரமணி அவர்கள்.

பெரியார் தந்த ஒளியினூடே நடைபோடுவதால் ‘விடுதலை'யே நம் வழி என்பது சாலப் பொருத்தம்தானே!

நம் இனமக்களின் இரு விழிகளான - போர் வாளான ‘விடுதலை' தன் 88ஆம் ஆண்டில் தன் வரலாற்றுப் பொன்னடியை எடுத்து வைக்கிறது. ‘விடுதலை'யின் பிறந்த நாள் என்பது ஏதோ திராவிடர் கழகத்தினருக்கான மகிழ்ச்சிப் பொங்கும் நாளாகக் கருத முடியாது.

திராவிட இன எழுச்சிக்கான ஊன்றுகோல் - ஊட்டச் சத்து  -‘விடுதலை' ஏடு! இனப்பகையை முறியடித்து உரிமைகளைப் பெற்றுத் தந்த வீர வரலாற்றுப் பதக்கங்கள் அதன் மார்பில் ஒளி வீசும்!

எத்தனை எத்தனையோ அடக்குமுறைகளைச் சந்தித்து தன் பேனா முனையினால் எதிரிகளை மூர்ச்சையடையச் செய்து வந்திருக்கிறது.

‘மிசா' நெருக்கடியையும், கரோனா நெருக்கடியையும் சந்தித்து ‘விடுதலை' ஒரு நாள் கூடத் தடைபடாமல் வந்தது என்ன சாதாரணமா? அது ‘விடுதலை' ஆயிற்றே - சோர்ந்து விடுமா?

சமூக நீதித் தடத்தில் அது களமாடிய காரணத்தால் எம் தமிழர்கள் கல்விக் கண்ணொளி பெற்றனர் - உத்தியோக ஆசனங்களில் அலங்கரிக்கின்றனர்.

தந்தை பெரியார் ‘தமிழனுக்காக நான் பலிகடா ஆகிறேன்' (‘விடுதலை', 15.11.1973) என்று தன் இறுதி மூச்சைத் துறப்பதற்கு ஒரு திங்களுக்கு முன்புகூட முழக்கமிட்டார்.

நீதிக்கட்சி ஏடாக இருந்த ‘விடுதலை'யைத் தன் ஆளுகைக்குக் கொண்டு வந்து நாளேடாக்கி, நாளும் நாளும் வர்ணாசிரம வாதிகளையும், சனாதனவாதிகளையும், மூடநம்பிக்கை வாதிகளை யும், ஏன் அரசியல்வாதிகளையும், ஆண் ஆதிக்கக்காரர்களையும், பழைமை வாதிகளையும் நேர்முகமாக எதிர்கொண்டு இருளைக் கிழிக்கும் கதிரவனாக ‘விடுதலை' நாளும் நற்றொண்டு ஆற்றி வந்திருக்கிறது -  வருகிறது.

பிரச்சாரம், கொள்கைப் பரவல் என்ற இலாபமல்லாமல் பொருளாதார இலாபம் இல்லை. என்றாலும் இழப்பீடுகளைச் சுமந்து சுமந்து இந்த இனமக்களுக்காக, இதை செய்து தீர வேண்டிய பணி என்னும் இலட்சியக் கவலையோடு ‘விடுதலை' வீறு நடை போட்டு வருகிறது.

இதன் ஆசிரியர்கள் எல்லாம் புகழ் பெற்றவர்கள் - முத்திரைப் பொறித்தவர்கள். இன்றைய ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வரும் ஆகஸ்டு வந்தால் ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆகப்  போகின்றன.

இது ஓர் உலக சாதனையாகும். அதற்காகப் பெரிய விழாவை அவர் எதிர்பார்க்கவில்லை. கழகத்தின் சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து, அவர் கையில் ஒப்படைத்து - அவர் ஆயுளை நூற்றாண்டுக்கும் மேல் கொண்டு செல்லும் யுக்தியை மேற்கொண்டுள்ளோம்.

50 ஆண்டு ஆசிரியருக்கு 50 ஆயிரம் சந்தாக்களைச் சேர்த்துக் கொடுத்த உழைக்கும் கைகளுக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

பிரச்சாரம், போராட்டம், சிறைச்சாலை என்ற தடத்தில் பயணிக்கும் நாம் நாட்டு மக்களிடம் எதை எதிர்பார்க்கிறோம்? ஓர் ஊராட்சி உறுப்பினராகக் கூட நிற்பதில்லையே! ஆனாலும் எந்தக் கட்சி உள்ளாட்சி - நாட்டாட்சிக்கு வரவேண்டும் என்பதற் காக ஊர் ஊராக தெருத் தெருவாகச் சுற்றிச் சுற்றிப் பிரச்சாரம் செய்யக்கூடிய இயக்கம் இதுதானே!

புள்ளி விவரங்களோடும், ஆதாரங்களோடும், வரலாற்று ஞாபகத்தோடும் தகவல்களையும், கருத்துகளையும் வாக்காளர் களுக்கு எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்வதற்கு நாம் காரணியாக - காரணமாக இருந்ததில்லையா?

தேர்தலில் மய்யப் புள்ளியாகக்கூட நாம் இருந்ததுண்டு - நம்மை வைத்தே எதிர்ப் பிரச்சாரத்தை தேர்தல் களத்தில் எதிரிகள் அனல் கக்கியதில்லையா? அந்த நிலையில் வாக்காளர்கள் திராவிடர் கழகத்தின் சமூக நீதிப் பக்கம் தானே நின்றார்கள் - வாக்களித்தார்கள்.

தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை' என்று காவி உடை அணிந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் “அருள் வாக்காக" சொன்னார் என்றால் அதன் பொருள் என்ன? உள்ளடக்கம் தான் என்ன?

எந்த ஆதிக்கத்தின் இடுப்பெலும்பையும் முறிப்பது ‘விடுதலை' என்னும் பே(£)ராயுதம் தானே!

செல்லுங்கள் தோழர்களே - அனைத்துத் தரப்பினரிடமும் - சொல்லுங்கள் தோழர்களே! ‘விடுதலை'யின் விவேகமிக்க வீரத் தொண்டினைப் பற்றி!

‘விடுதலை' ஏட்டுக்காக அல்ல - நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டாமா - அரசுப் பணிமனைகளுக்குள் நுழைய வேண்டாமா? விகிதாசாரப்படி வேலை வாய்ப்புகள் நம் மக்களுக்கு வந்து சேர வேண்டாமா? தடைகளைத் தகர்க்க வேண்டாமா? வேறு எதை நாங்கள் பார்க்கிறோம் என்று நயமாக எடுத்துச் சொல்லுங்கள்.

‘விடுதலை', ‘ஈரோடு' என்றெல்லாம் கூட குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார்கள் என்றால் இவற்றின் பெருமையும், பலனும் என்ன?

தவத்திரு அடிகளார் சொன்னதுபோல தமிழர்தம் வீடு வீடாகச் செல்லுங்கள் - ‘விடுதலை'க்குச் சந்தாதாரராக ஆகுங்கள் என்று அன்போடு, நயமோடு, கனிவோடு எடுத்துச் சொல்லுங்கள்.

"நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது - வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!" என்றாரே நமது தலைவர் - அது வெற்றுச் சொல் அல்ல - அணி அழகுச் சொல் அல்ல - வெல்லும் சொல் - வினை முடிக்கும் சொல் என்பதைச் செய்து காட்டுவோம்!

வாழ்க பெரியார்! வெல்க ‘விடுதலை'!!

No comments:

Post a Comment