சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: தந்தையின் மூலம் மீண்டும் உயிர்பெற்ற மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: தந்தையின் மூலம் மீண்டும் உயிர்பெற்ற மகன்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சாதனை

சென்னை, ஜூன் 12 ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக உறவு முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதே போல மூளைச்சாவு அடைந்த நபர்களின் சிறுநீரகமும் கொடையாக பெறப்பட்டு, தேவைப்படும் நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்தில், சுசிலன்  என்ற 11 வயது சிறுவனுக்கு  சிறுநீரக நோய் முற்றிய நிலையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்தான். அது மட்டுமல்லாமல் இந்த வயதிலேயே தீவிர ரத்த அழுத்த பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்தான். 

பின்னர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்த சிறுவன், நோயின் தாக்கம் அதிகமாகி மோசமான நிலையில் இருந்துள்ளான். மருத்துவர்கள் அறுவுறுத்தலின் பேரில் அந்த சிறுவனின் தந்தை லட்சுமி நாராயணன் தனது மகனுக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை அளிக்க முன் வந்தார். பின்னர் அவருக்கு முழுமையான பரிசோதனை மேற்கொண்ட பின், கடந்த வாரம் மருத்துவர் சிவசங்கர் தலைமையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இதுகுறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் மணி கூறியதாவது: சிறுநீரக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இச்சிறுவனுக்கு பிறவியிலேயே இதய கோளாறு இருந்தது. அதை இதே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2018ஆம் ஆண்டு சரி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சிறுவனுக்கு ரத்த சுத்திகரிப்பு தேவைப்படும் அளவுக்கு தீவிரமான சிறுநீரக  செயலிழப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் குழுவாக யோசித்து திறம்பட சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். தற்போது சிறுவன் நலமாக இருக்கிறான். இவருக்கு முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment