நீலகிரி மலை ரயிலில் முதல் "பிரேக்ஸ் உமன்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

நீலகிரி மலை ரயிலில் முதல் "பிரேக்ஸ் உமன்"

மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை இடையே இயங்கும் நீலகிரி மலை ரயில், பல் சக்கரத்தின் உதவியுடன் நூறாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. மலைப் பாதையில் மலை ரயிலை இயங்க ‘பிரேக்ஸ் மேன்’ என்னும் பணி மிக முக்கியமானது.

ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் ‘பிரேக்ஸ் மேன்’ இருப்பார்கள். இவர்கள் மலைப் பாதையில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தேவையான இடங்களில் பிரேக்கை பயன்படுத்துவார்கள். ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள ‘பிரேக்ஸ் மேன்’களுக்கு இவர்கள் சிக்னல் தருவார்கள். அதற்கேற்றாற்போல மற்ற ‘பிரேக்ஸ் மேன்’களும் தயாராக இருப்பார்கள்.

இந்தப் பணியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், முதல் முறையாக, குன்னூரைச் சேர்ந்த சிவஜோதி (45) என்ற பெண் ‘பிரேக்ஸ் உமன்’ பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே இவரை ‘பிரேக்ஸ் உமன்’ பணிக்கு பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டது. இவர் இந்தப் பணியில் ஏற்கெனவே ஆர்வமாக இருந்ததால், மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ரயில்வே சார்பில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது, மலை ரயிலில் இவர் ‘பிரேக்ஸ் உமன்’ பணியைத் தொடங்கியுள்ளார். 

‘பணியின் மீதான ஆர்வம், தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் எதுவுமே சாத்தியம்’ என்றார் சிவஜோதி.


No comments:

Post a Comment