பாடத் திட்டத்திலிருந்து குஜராத் கலவரம் நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

பாடத் திட்டத்திலிருந்து குஜராத் கலவரம் நீக்கம்

புதிய கல்விக்கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ வெளி யிட்ட புதிய 12ஆம், வகுப்பு பாடத்திட்டத்தில் குஜராத் கலவரம் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. 

கரோனா தொற்றுநோயைக் காரணமாகக் காட்டி பாடப்புத்தகத்தில் பாடங்களைக் குறைக்கிறோம் என்று கூறி 12 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - அரசியல் பாடத்திட்டத்தில் இருந்து குஜராத் கலவரம் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. 

முந்தைய புத்தகங்களில் 187 மற்றும் 189ஆம் பக்கத்தில் குஜராத் கலவரம் குறித்த பாடம் இருந்தது. மேலும் நாளிதழ்களில் வெளிவந்த குஜராத் கலவரப் படங்களும் இடம் பெற்று இருந்தன. 

நீக்கப்பட்ட பக்கங்களில்,  அரசு அதிகாரம் எவ்வாறு மதவெறிக்கு இலக்காகி வன்முறைக்குத் துணை நிற்கிறது, இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்பு  மற்றும் மத உணர்வுகள் வன்முறைக்கு வழி வகுக்கின்றன என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் மக்களாட்சிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் போன்றவை குறித்து மாணவர்களுக்கு எச்சரிக்கும் பாடங்களும் இருந்தன. 

மேலும் அதில், அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், குஜராத் முதலமைச்சராக அப்போது இருந்த நரேந்திர மோடிக்கு  - "மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அனைத்து மக்களையும் காக்கும் அரணாக இருந்து  ‘ராஜ தர்மத்தை’ பின்பற்ற வேண்டும்" என்று கூறியதுண்டே!

 "ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களிடையே ஜாதி, மதம் மற்றும் மதத்தின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக்கூடாது" என்பதும் அந்தப் பாடத் திட்டத்தில் இருந்தது

 "கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மீதான  சுமையைக் குறைக்க வேண்டியது அவசியம் என புதிய கல்விக் கொள்கை-2020 வலியுறுத் துகிறது...இந்தப் பின்னணியில், அனைத்து வகுப்புகளுக் கும் பாடப்புத்தகங்களை  எளிமையாக்கும்  முயற்சியை என்சிஇஆர்டி மேற்கொண்டுள்ளதாம்,”  இதன் படி குஜராத் கலவரப் பகுதியை நீக்கிய பாடப்புத்தகம் வரும் கல்வி ஆண்டின் பாடநூலாக வெளியிடப்பட்டுள்ளது.

 கருநாடகத்தில் தந்தை பெரியார், பகத்சிங், நாராயண குரு உள்ளிட்ட பகுத்தறிவாளர்களின் பாடங்கள் நீக்கப் பட்டுள்ளன. அதற்கு பதிலாக சாவர்கர் வரலாறு, கோல்வர்கர் கொள்கை திணிக்கப்பட்டுள்ளது. அதே போல் மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பகவத் கீதை பாடமாக சேர்க்கப் பட்டுள்ளது. 

 ஹரியானாவில் ஏற்கெனவே பகவத் கீதை மற்றும் ஹிந்து மதப்புராணங்களில் இருந்து பல பகுதிகள், கருத் துக்கள் பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

பாடத் திட்டங்களைத் தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றியும், நீக்கியும், இணைத்தும் விஷ விளையாட்டில் ஈடுபடுவது அசல் பாசிசமாகும்.

ஆர்.எஸ்.எஸ். 14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும் நடத்தி வருகின்றது. அங்கெல்லாம் நேருவின் பிறந்த நாளை (நவம்பர் 14) குழந்தைகள் நாளாகக் கொண்டாடுவதில்லை. கோகுலாட்சிமியை (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) தான் குழந்தைகள் நாளாகக் கொண்டாடுவர்.

உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளியில் (சரஸ்வதி சிசு மந்திர்) ஏழாம் வகுப்புப் பாடத் திட்டத்தில்  - "பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்த போது முலாயம் சிங்யாதவைச் சார்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டு களால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்?" (அவுட்லுக் - 10.5.1999) என்னும் கேள்வி உள்ளது.

இப்படி எல்லாம் பொய்யாகப் பாடத் திட்டத்தில் திணித்தவர்கள் தான் குஜராத்தில் நடந்த உண்மையான கலவரத்தை பாடத் திட்டத்திலிருந்து நீக்குகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது அடால்ப் ஹிட்லர் பாணியாகும். நாட்டில் நடப்பது ஹிட்லரின் பாசிசம்தானே!


No comments:

Post a Comment