நெஞ்சுக்கு நீதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

நெஞ்சுக்கு நீதி

நான் நேர்மையாளன் என்று எவனும் மார்தட்டிப் பேசி விடுவது எளிது. நேர்மை யைப் பற்றிய நீதியை அவன் நெஞ்சுக்கு அவனே வழங்கியாக வேண்டுமல்லவா? நீதி வழங்குவது-தீர்ப்பளிப்பது! நீதியை ஏற்பது! தீர்ப்பை ஏற்பது! நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு 'அப்பீல்' உண்டு. நெஞ்சுக்கு வழங்கப்பட்ட நீதிக்கு 'அப்பீல்' ஏது?

இது கலைஞர் தன்னுடைய நெஞ்சுக்கு நீதியின் தொடக்கத்தில் எழுதிய பகுதி. நீதிமன்றங்களும், அரசு இயந்திரமும் தோற்றுப்போகும் இடங்களில் மக்களின் மனச்சான்றைத்தானே தட்டி எழுப்ப வேண்டும். ஜாதிக் கட்டமைப்பு வேரூன்றி யிருக்கும் சமூகத்தில் அப்படியான ஒரு முயற்சியில் கலைஞரின் பேரன் என்கிற முறையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் நெஞ்சுக்கு நீதி. இந்தியில் வெளிவந்த Article-15  என்ற திரைப்படத்தின் தமிழ் வடிவம் என்றாலும், தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு பொருந்தி வரும் விதமாக திரைப்படத்தை நேர்த்தியாக கட்டமைத்திருந்தார் இயக்கு நர் அருண்ராஜா காமராஜ்!

விஜயராகவன் அய்.பி.எஸ். என்ற படத் தின் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த உதயநிதி, திரைப்படத்திற்கு பொருத் தமான நடிப்பை வழங்கியிருந்தார். சுந்தரம் அய்யர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சுரேஷ் சக்கரவர்த்தி, ஒருவேளை ஜாதி மேலாதிக்க வெறி கொண்ட பார்ப்பனராக இருப்பாரோ என்று நம்பி மக்கள் அவர் மீது கோபம் கொள்ளும் அளவுக்கு நடிப்பில் அசத்தி இருந்தார். மயில்சாமி, இளவரசு, ரமேஷ் திலக், தான்யா ரவிச்சந்திரன், சாயாஜி சிண்டே என்று ஒரு திரைப்பட்டா ளமே  தங்கள் பங்களிப்பால் திரைப்படத்தை நம்பகமானதாக மாற்றியிருந்தார்கள். ஆரி அர்ஜூனன், குமரன் என்ற கதாபாத்திரத் தில் அடக்குமுறைக்கு எதிரான நெருப்பை கக்கும் துடிப்பு மிக்க இளைஞனாக தன்னு டைய பங்கையும் நேர்த்தியாக செய்திருந் தார். அனைவருக்கும் வாழ்த்துகள்

தமிழ்நாட்டிற்கு பொருத்தமாக திரைப் படத்தை மாற்றுவதற்கு, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தால் உலக அளவில் கவ னம் பெற்ற கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதியை களமாக தேர்ந்தெடுத்ததிலேயே தமிழ்நாடு பார்வையாளர்கள் பொருத்த மான களத்திற்கு அழைத்துச் சென்று விட்டார் இயக்குநர். கூடவே, சத்துணவுக் கூடத்தில் பட்டியல்வகுப்பை சார்ந்த பெண்,  தீண்டாமை கண்ணோட்டத்தோடு இழிவுபடுத்தப்படுவதையும், அருந்ததிய மக்கள் பாதாள சாக்கடையில் உயிரோடு இறங்க நேரும் அவலத்தையும் காட்டி, இன்னாரின் நீதிக்காகத்தான் பேசுகிறேன் என்று துணிந்து களமிறங்கியிருக்கிறார் இயக்குநர்.

சர்வீஸில் சேர்ந்த மூன்றாம் நாளே தூக்கியடிக்கப்பட்ட தண்டனை என்ற முறையில் களத்திற்கு வரும் நாயகன் விஜய ராகவன் அய்பிஎஸ்க்கு(உதயநிதி) சமூகமே நீதியின் அடித்தளத்தில் இருப்பதாகவும், "இப்பல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறா" என்ற எண்ணத்தோடும் வருகிறார். பெரியாரை ஒரு வாசிப்பனுபவமாக மட்டும் பார்த்து விட்டு, மேலோட்டமான ஜாதி மறுப்போடு நின்றுவிடுகிற வெகுசிலரின் பார்வைக்கு அப்பால் இருக்கும் கிராமப் புறங்களின் உண்மையை விஜயராகவன் வழியாக உணர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். 

அந்த கிராமத்திற்கு வந்தவுடன் அவர் எதிர்கொள்ளும் ஜீவகாருண்யத்தில் 

பற்றுக் கொண்ட, நாய்களுக்கும் இரங்கும் நல்லுள்ளம் கொண்ட சுந்தரம் அய்யரை எதிர்கொள்ளும் காட்சியில் பெரியார் புத்தகத்திற்குத் திரையரங்கில் கைதட்டல் எழுந்தது. எதிர், எதிர் முனைகள் என்று உணர்த்த இயக்குநர் தேர்ந்தெடுத்த அந்த காட்சியை தமிழ் ரசிகர்களும் உணர்ந்து கொண்டார்கள் என்பது தமிழ்நாட்டில் இன்னும் "பெரியார் உயிர்ப்புடன்தான்" என்பதாக இருந்தது. 

நவீன சமூகத்தின் பிரதிநிதியான விஜயராகவன், கிராமத்தின் குரூரத்தை, அதன் அசலான தன்மையில் புரிந்து கொண்டுவிடக்கூடாது என்று தடுக்கும் சுந் தரம் அய்யர் கதாபாத்திரம் ஓர் அரசியல் ஸ்டேட்மெண்ட். இதற்கிடையில், தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த இரண்டு பெண் குழந் தைகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட் டிருப்பதை நேரில் பார்த்த கணம் முதல், பார்வையாளர்களோடு சேர்ந்து விஜய ராகவனும் ஜாதியின் ஊற்றுக்கண்ணை ஆழமாக அறிந்து கொள்கிறார்.

வன்முறையின் ஊடாக ஜாதி அமைப்பைப் புரிந்து கொள்வதைப் பற்றி ஆனந்த் டெல்டும்டே ஓர் அருமையான கட்டுரை ஒன்றைத் தீட்டியிருப்பார். இந்த படம் அந்த முயற்சியை தன்னுடைய திரைக்கதையின் ஊடாக நிகழ்த்திக் காண்பித்திருக்கிறது. வன்முறை, பார்ப்பன ரல்லாத ஜாதியின் ஊடாக வெளிப்படுகிறது. அந்த வன்முறையை ‘இதெல்லாம் இங்கே சகஜம், கண்டுங்காணாமல் கடந்து போக வேண்டும்’ என்று சுந்தரம் அய்யர் கதாபாத் திரம் விஜயராகவனுக்கு பரிந்துரைக்கிறது. அதை மீறும் போது சிபிஅய் வடிவில் சாயாஜி சிண்டே பரிந்துரைக்கிறார். இந்தப் பரிந்து ரை களைச் சட்டை செய்து, வன்முறையின் வலைப் பின்னலை விஜயராகவன் கண்டு பிடித்துவிட, பார்ப்பனரல்லாத ஜாதியைச் சேர்ந்த வன்முறையாளனைக் கொன்று விட்டு தப்பித்துவிட பார்க்கிறது சுந்தர் அய்யர் கதாபாத்திரம். அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் அரசின் சட்டத்தைப் பார்ப் பனரல்லாத மடங்களைக் கொண்டு நீதி மன்றத்தில் எதிர்க்கும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியையும் கூட இங்கே பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். 

படத்தின் மய்யச்சரடில் ஒன்றாக வரும் குமரன் கதாபாத்திரம் வன்முறையை நேரடியாக எதிர்கொள்ளும் பிரிவின் பிரதி நிதியாக தன்னுடைய ரவுத்திரத்தோடு சூழலை எதிர்கொள்கிறது. சட்டத்தின் எல் லைக்குள் நின்று வேலை நிறுத்தம் என்ற வடிவத்தில் போராடினாலும், அவனையும் அந்த வலைப்பின்னல் கொன்று போடு கிறது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவது, சிஏஏ, என்.ஆர்.சி என்ற சட்டங்களாக வழி இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வேலை களைச் செய்தபடி இருக்கும் இந்துத்துவ பாஜக அரசுகளின் அடக்குமுறையை போராட் டங்களின் மூலம் அம்பலப்படுத்த நினைத்த அஃப்ரீன் பாத்திமா வீடு புல் டோசர்களால் இடிக்கப்படுவதை இத் தோடு பொருத்திப் புரிந்து கொள்ளலாம்.

இப்படி பல்வேறு சமகால அடக்கு முறைகளைப் புரிந்து கொள்ள உங்கள் மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப முயலும் நெஞ்சுக்கு நீதி, நீதிமன்றத்திற்கு அப்பால், உங்கள் நெஞ்சைத் தொட்டு நீதி எங்கே என்று விலாசம் கேட்கிறது. திரைப்பட சட்டகத்திற்குள் ஆர்ட்டிகல்-15இன் படி அனைவரும் சமமென்று சொன்ன பிறகும் ஏன் சமத்துவமின்மை விதியாக இருக்கிறது என்று உரக்கக் கேட்கிறது. அந்த கேள்விக்கு செவி கொடுப்பதும், வினையாற்றுவதும் நம் கடமை என்ற உணர்வைத் திரையரங் குக்கு வெளியே முற்போக்கு இயக்கங்கள் செய்ய வேண்டும். செய்வோமா?

- பா.ம.மகிழ்நன், ஊடகவியலாளர்


No comments:

Post a Comment