மின்னகம் நுகர்வோர் சேவை மய்யம் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

மின்னகம் நுகர்வோர் சேவை மய்யம் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு

சென்னை, ஜூன் 16  திமுக அரசு பதவிக்கு வந்ததும் மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மய்யம் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 3.10 கோடி மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், மின் தடை, புதிய மின் இணைப்பு பெறுவதில் ஏற்படும் காலதாமதம், மின்னழுத்த ஏற்ற, இறக்கம், சேதமடைந்த மின் கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் மாற்றிகள், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் உள்ளிட்ட புகார்களை இந்த சேவை மய்யத்தில் தெரிவிக்கலாம்.

இந்த மய்யத்தில் ஒரு வேலை நேரத்திற்கு 65 பேர் வீதம் 3 வேலை நேரங்களில் 195 பேர் பணியில் அமர்த் தப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை கணினி மூலம் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர், செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து, அதன் மீது துரித நடவடிக்கை மேற்கொள்வர்.

பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 44 மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தலா 3 பேர் வீதம் 132 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மய்யத்தை 94987 94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். இந்த மின்னகம் தொடங்கப்பட்டு வரும் 20-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதுவரை இந்த மய்யத்தில் 10 லட்சம் புகார்கள் பெறப் பட்டுள்ளன. இதில் 99 சதவீதம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment