இரட்டை வேடம் போடும் ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 20, 2022

இரட்டை வேடம் போடும் ஒன்றிய அரசு

 உக்ரைனில் இருந்து திரும்பிய மேற்குவங்கத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை தங்கள் மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அனுமதித்த மேற்குவங்க அரசின் ஆணைக்கு ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது

 உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக மேற்கு வங்கம் திரும்பிய 412 மாணவர்களுக்கும், அம்மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா அறிவித்தார்.

அதன்படி மேற்கு வங்க அரசு போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய 2 ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கியது. ஆனால், இதனை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்க முடியாது என கருத்துத் தெரிவித்துள்ளது.

இத்தகைய முறையில் கல்வி முடிப்பவர்களும், ஒவ்வொரு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள எழுதும் ஸ்கிரீனிங் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையமும் (என்எம்சி), சுகாதார அமைச்சக அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக மேற்கு வங்கம் திரும்பிய 412  மாணவர்களின் நலனுக்காக ஒன்றிய அரசு எவ்வித பொறுப்பும் - அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை.

412 மாணவர்களில், 172 பேர் 2ஆம் ஆண்டு மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் ஆவர். அவர்கள், மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் செய்முறை வகுப்புக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார் - முதல் அமைச்சர்  மம்தா. மாநில அரசின் இந்த அறிவிப்பு, என்எம்சியின் தற்போதைய வழிகாட்டுதல்களுடன் ஒத்துப் போவதாயில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்எம்சி கூற்றுப்படி, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி ஒருவர் தங்கள் நேரடி வகுப்பு, செய்முறை வகுப்புகள், 12 மாத இன்டர்ன்ஷிப் ஆகியவற்றை ஒரே கல்லூரியில் முடித்திட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "உக்ரைன் மாணவர்கள் தொடர்பான எந்தவொரு முடிவும், எங்களிடமிருந்து மட்டுமே வர வேண்டும். தற்போது வழிகாட்டுதல் தெளிவாக உள்ளது. உக்ரைனிலிருந்து மேற்கு வங்கம் திரும்பிய மாணவர்கள், அரசு கல்லூரியில் செய்முறை வகுப்பில் கலந்துகொண்டால், அவர்கள் எப்.எம்.சி. தேர்வு எழுதத் தகுதியற்றவர்கள் ஆவர். இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு, மேற்கு வங்க அரசு எங்களிடம் அனுமதி வாங்கவில்லை" என்றார். 

உக்ரைனில் படித்த மாணவர்களை ஒன்றிய அமைச்சர்கள்தான் உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளுக்குச் சென்று, 'பாரத் மாதாகி ஜே', 'மோடி ஜிந்தாபாத்' என்று எல்லாம் தாங்களும் கத்திக்கொண்டு, எதிர்காலத்தை இழந்த மாணவர்களையும் கூறச்சொல்லி இந்தியா அழைத்துவந்தனர். 

அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று மோடி அறிவித்தார். இந்த நிலையில் ஒரு மாநில அரசு தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக மீண்டும் மருத்துவக் கல்வியைத் தொடர முடிவு எடுத்தால் அதற்கு ஒன்றிய அரசு தடை போடுகிறது.

இதே வேளையில் மத்தியப் பிரதேச அரசு உக்ரைனில் இருந்து திரும்பிய இறுதி ஆண்டு பயிலும் சில மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் போது பயிற்சி செய்ய அனுமதி அளித்த போது அதைப் பாராட்டி விளம்பரம் செய்ததும் இதே ஒன்றிய அரசு தான். 

 பாஜக ஆளும் மாநிலம் செய்தால் அதைப் பாராட்டுவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என்றால் அதற்குத் தடைபோடுவதும் என்ற இரட்டை வேடத்தைப் போட்டுக் கொண்டு அலைகிறது ஒன்றிய அரசு

இதற்கிடையில், சீனாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் பிற நாடுகளில் மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு நடைமுறைப் பயிற்சி பெறாதவர்களுக்கு தற்காலிகப் பதிவு செய்வதற்கான கொள்கையை அடுத்த இரண்டு மாதங்களில் உருவாக்குமாறு என்எம்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஒரு குலத்துக்கொரு நீதி' என்ற மனு தர்மத்தைப் பின்பற்றும் ஒன்றிய அரசு, தங்கள் கட்சி ஆளும் மாநிலத்திற்கு ஒரு நீதியும், மாற்றுக் கட்சி ஆளும் மாநிலத்திற்கு அநீதியும் இழைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? போரின் பெரும் பிடியில் சிக்கித் தப்பித்து வந்த- இந்திய மாணவர்கள்மீது கொஞ்சம்கூட மனிதநேயம் இல்லையா? வெளிநாட்டுக்குச் சென்று இந்திய மாணவர்கள் படிப்பதற்கே காரணம் இந்திய அரசின் மருத்துவக் கல்விக் கொள்கையும், கொள்ளையும் தானே! 

இந்தப் பாழும் பா.ஜ.க. அரசை ஒழிக்கும் நாள்தான் நாட்டின் நன்னாள்!


No comments:

Post a Comment