முனைவர் விஜயலட்சுமி இராமசாமி
அறிந்த பழமொழி
‘அற்பனுக்கு வாழ்வு வந்தா
அர்த்த ராத்திரியிலேயும் குடை பிடிப்பான்’
அற்ப சிந்தனை உடைய மனிதர்கள் தங்களுக்குத் திடீர் என்று எதிர்பாராத விதத்தில் மிகப் பெருஞ்செல்வமோ அல்லது மிக உயர்ந்த பதவியோ அல்லது மிக உயர்ந்த அந்தஸ்தோ கிடைத்து விட்டால் அவர்களுக்குத் தலைகால் புரியாமல் அர்த்த ராத்திரி நேரமாகிய நடுசாமத்தில் கூட குடை பிடித்துக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருளாகும். இங்கு கொடை என்பது குடை எனப் பொருள்படும்.
அந்தக் காலத்தில் கிராமத்தில் மிகப் பெரிய செல்வந்தர்களாக இருப்பவர்கள் அல்லது பண்ணைக்காரர் மழையோ வெய்யிலோ இருந்தாலும் இல்லா விட்டாலும் குடை எடுத்துச் செல்வது என்பது ஒரு மரபு. இந்நிலையில், ஒரு சாதாரணப்பட்டவன் தன் நிலைக்குமேல் நிலை மாறும் பொழுது, அவன் அர்த்த ராத்திரிப் பொழுதிலும் கூட குடையைப் பிடிப்பான் அவன் அறியாமையினால் என்று கூறுவர்.
அறியா விளக்கம்
‘அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்’ - என்பதுதான் உண்மையான பழமொழி. அதாவது, வாழ்க்கையில், தமக்கு உரிமை யான பொருள்களையும் மற்றவர் களுக்குக் கொடுத்து வாழவேண்டும் என்ற எண்ணமோடு வாழ்பவர்கள், அர்த்த ராத்திரி நேரமாக இருந்தாலும் கொடுக்கும் குணம் கொண்டவர் களாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவே இப்பழமொழியைச் சொல்லி வந்தனர் என்பர்.
அர்ப்பணித்து என்று வரும் கொடையாளியை, அற்பன் என ஆக்கிக் கஞ்சனாக்கி விட்டார்கள் நம்மக்கள். அற்பன் என ஆக்கிச் சொல்லும் பழமொழியின் பொருள் மக்களின் இக்கால வாழ்க்கைக்கு ஏற்ற முறையில் இருப்பதைக் கண்ட மக்கள் அதையே நிரந்தரப் பழமொழி ஆக்கி விட்டனர். ஒரு சொல் திரிந்ததால் பொருளும் திரிந்தது.
அற்பனுடைய வாழ்க்கை நிரந்தர மகிழ்ச்சியைத் தராது.
அர்ப்பணித்து வாழ்பவனுடைய வாழ்க்கை நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இதற்கும் மேலாக இது ஒரு பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. விடுகதைத் தொடரே மக்கள் மத்தியில் விடுகதையாகி விட்டது.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பவன் யார்? என்று, வினாவைக் கேட்க, அதற்கு விடையாக, காளான் என்ற பதிலைக் கூறுவர். காளான் தான் அற்பமாக இரவுப்பொழுதில் வெளிவரும். மழை காலத்தில், அல்லது குளிர் காலத்தில் ஈரமுள்ள இடத்தில், மரப்பட்டைகளில், மரப்பலகைகள் இருக்கும் இடங்களில் காளான்கள் இரவில் வளர்ந்து, காலையில் அது மண்ணுக்கு வெளியே குடை பிடித்து நிற்பது போல் காட்சி அளிக்கும்..
இப்படி அர்த்த ராத்திரியில் குடைபிடித்து வருவதால் இது இவ்வகையில் விடுகதையாகவே இருந்து வந்தது. கால மாறுபாட்டால் பழமொழியாகவும் மாறி விட்டது. இதைக் காலம் செய்த கோலம் எனக் கூறலாம்.
நன்றி: புதுகைத் தென்றல்,
ஏப்ரல் 2022
No comments:
Post a Comment