ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: ஆதீனங்கள் பல்லக்கில் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நீங்கள், சாமி சப்பரங்களில் அர்ச்சகர்களும் அமர்ந்துகொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?

- முரளி, கல்லக்குடி

பதில்: சுமப்பவர்களுக்கு சுயமரியாதையும், சொரணையும் வரும் போது அது தானே இயந்திரத்திற்கு மாறும் நிலை வரும். அக்காலம் விரைவில்... மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதை ஒழிப்பது முதல் கட்டம். இவை போன்றவைகட்கு அடுத்த கட்டம் ஏற்கெனவே சிறீரங்கத்தில் நடந்துள்ளது!

- - - - -

கேள்வி: கல்லூரி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி நேரங்களில் வகுப்புகள் நடத்திட உயர் கல்வித் துறை திட்டமிடுவதாகத் தெரிகிறதே! இது பாலியல் சமத்துவத்தை உருவாக்கப் பயன்படுமா?

- த.மணிமேகலை, வீராபுரம்

பதில்: மாணவ-மாணவிகள் இணைந்த கல்லூரி - கல்வி நிறுவனங்களாக அமைவதே சிறந்தது. அதனால்தான் முதலில் பெண்களுக்கென்று தனியே துவக்கப்பட்ட நமது பாலிடெக்னிக்குகள், மருந்தியல் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் பாலின வேறுபாடு இன்றி, நட்புடன் இரு பாலினத்தவரும் படிப்பது விசாலமனப்பான்மையை அவர்களிடையே விதைக்க உதவும் என்பதாலேயே அப்படி மாறின. 

தமிழ்நாடு அரசும் இதைப் பின்பற்றுவது சாலச் சிறந்தது! வற்புறுத்துவோம்!!

- - - - -

கேள்வி: ஜெர்மனியில் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ‘ஓ மை காட்’ என்று பதறிவிட்டாராமே இந்தியப் பிரதமர்?

- ஏ.செல்வமணி, காரமடை

பதில்: கடவுள் வந்தாரா துணைக்கு? அங்கு ஒரு வேளை வந்தால் எந்த மதக் கடவுளாக அவர் இருப்பார் என்று கேட்டு விடாதீர்கள்!

- - - - -

கேள்வி: சமஸ்கிருத வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி அதிக நிதி ஒதுக்கீடு, ஹிந்தியை அலுவல் மொழியாக்க அமித் ஷா கருத்து, மாநில மொழிகளே நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கை என்று ஆங்கிலத்தை ஒழிப்பது போல் போக்குக் காட்டி, எதிர்காலத்தில் மாநில மொழிகளை ஒழித்துவிடமாட்டார்களா?

- மன்னை சித்து, மன்னார்குடி - 1.

பதில்: உண்மைதான். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு எதைச் செய்தாலும் அதில் ஒரு பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ இருக்கும். எனவே எச்சரிக்கையுடன் ஆராய்வது நல்லது - முக்கியமும்கூட! 

- - - - -

கேள்வி: தி.மு.க. அரசு ஓராண்டில் நிறைய செய்திருந்தாலும், இதெல்லாம் செய்திருக்கலாம் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்? 

- ஜோ.வில்லியம்ஸ், மேலமெஞ்ஞானபுரம்

பதில்: 1. “தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு” என்று கலைஞர் செய்த பிரகடனம் மீண்டும் வருதல்.

2. ஆன்லைன் சூதாட்டம், லாட்டரி என்ற தற்கொலை களங்களுக்குத் தடை.

அடுத்து அவை நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு!

- - - - -

கேள்வி: “திராவிட மாடல்” அரசு என்று முதலமைச்சர் சொல்வதும், ‘ஆன்மிக அரசு’ என்று அமைச்சர் சொல்வதும் முரணானது இல்லையா?

- வி.இராஜசேகர், திருச்சி

பதில்: ஓர் அரசுக்கு இராஜ தந்திரமும் தேவைப்படுகிறதே! “அனைவருக்கும் அனைத்தும்“ என்றால் - அதில் இதுவும் ஒருவகை அடக்கம் என்று அரசு தரப்பில் வாதாடலாம்! திராவிட மாடல் ஆட்சியின் பல்வேறு கூறுகளில் அதுவும் அடக்கம் - அறநிலையத் துறை இருப்பது - அது எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும்.

- - - - -

கேள்வி: தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக - ஆட்சிக்கு எதிரான கருத்துகளை அதிமுக கூறுவதை விட, அதிகமாகப் பா.ஜ.க. கூறி தாங்கள் தான் எதிர்க்கட்சி என்று நிறுவப் பார்க்கிறதா? இதை அதிமுக வேடிக்கை பார்க்கிறதா? 

- து.ஜெயக்குமார், எண்ணூர்

பதில்: அடமான தி.மு.க.வாக கீழிறக்கத்தில் உள்ள அ.தி.மு.க. தலைவர்களுக்கு அத்தொண்டர்களுக்குப் புரிந்த அளவுகூட புரியவில்லையா? அல்லது ‘மடியில கனம்‘ என்று கரைசேர புதிய தெப்பம் தேடுகிறார்களா என்பது புரியவில்லை!

- - - - -

கேள்வி: 2024-இல் ஆட்சி மாற்றம் சாத்தியமா? 

- கா.கனிமலர், நஞ்சுண்டார்கோட்டை

பதில்: அரசியலில் - மக்கள் நினைத்தால் அடுத்த கணமே எந்த மாற்றமும் நிகழலாம்.

- - - - -

கேள்வி: இந்த ஆட்சியிலும் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி உள்ளதே? தடுக்க என்ன வழி?

- கண்ணன் சுந்தரம், தஞ்சாவூர்

பதில்: வேதனையாக உள்ளது. ஆனால் சில கறுப்பு ஆடுகளும், அதிகார மமதையில் உள்ள பெரும் காவல் துறையின் களங்கங்களாக இருக்கத்தான் செய்கிறார்கள் - ஆட்சியர் களையெடுக்கத் தவறக்கூடாது.

- - - - -

கேள்வி: தொடரும் விலைவாசி உயர்வு இந்தியப் பொருளாதாரத்தை எதை நோக்கி இட்டுச் செல்லும்? 

- இனியன் செல்வன், தூத்துக்குடி

பதில்: விலைவாசி விண்ணை முட்டும் நிலை - பிரதமரோ நிதியமைச்சரோ கவலைப்படாத நிலை - இவை நீடித்தால் இலங்கை போல் ஆகிவிடுமோ என்ற நிலை நிர்ப்பந்தமாகி விடும்.


No comments:

Post a Comment