அட்சய திருதியையாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

அட்சய திருதியையாம்!

அட்சய திருதியையாம். இந்த நாளில் ஒரு குன்றி மணி அளவுக்குத் தங்கம் வாங்கினாலும் அது பெருகுமாம் - வளருமாம் - அதனால் கடன்  வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டுமாம்.

நகைக்கடை வியாபாரிகளில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டிருக்க வேண்டும்.  பச்சைப் புடவை கடைகளில் தேங்கி விட்டால் - ஒரு கதையைக் கிளப்பி விடுவார்கள். இந்த ஆண்டு பிறந்த நேரம் சரியில்லை; சகோதரனுக்கு ஆபத்து - எனவே சகோதரிக்குப் பச்சைப் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எவனோ ஒருவன் கிளப்பி விட்டால், ஊரில் உள்ள அத்தனைப் பச்சைப் புடவைகளும் விற்றுத் தீர்ந்து விடும்.

அது போன்றது தான் இந்த அட்சய திருதியையும். அட்சய என்றால் அள்ளக் அள்ளக் குறையாதாம்; வளர்ந்து கொண்டே போகுமாம்!

ஒவ்வொரு முட்டாள்தனத்துக்கும் முக்கிய மாகப் புராணக் கதைகளைக் கட்டி வைத்து விடுவார்கள். பக்தி முலாம் பூசி விட்டால் மலம்கூட மூட மக்களுக்கு மலர்தானே!

ஒவ்வொரு ஆண்டும் சித்திரையையடுத்து வரும் திருதியைத் திதியில் வரும் நாளே இந்நாள் என்று எழுதி வைத்துள்ளனர். திருதியையன்று ஒரு தவிட்டுப் பானை வாங்கினாலும் தங்கம் நிறைந்த பானையாகும் என்று ஜோதிடத்தில் எழுதி வைத்துள்ளனராம்.

திரவுபதை சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சயப் பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத் தானம் செய்த புண்ணியம் பெற்றாள் என்கிறது மகாபாரதம்; ஒரு சமயம் கிருஷ்ண பரமாத்மா திரவுபதையைக் காண பசியுடன் வந்தார். அந்நேரம் அட்சயப் பாத்திரம் கழுவிக் கவிழ்க்கப்பட்டிருப்பினும், அதில் ஒட்டியிருந்த ஒரு கீரை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதைக் கிருஷ்ணனுக்கு பரிமாறி பசி யாற்றியதோடு 'அதிதி தேவா பவா' எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும் நிறை வேறப் பெற்ற புனித நாளும் அந்த அட்சயத் திருதியை தானாம்.

இந்த நாளில்தான் கிருதாயுகமே பிறந்ததாம். இந்த யுகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுள் ஒரு லட்சம் வருடங்களாம். இதில் பாலப் பருவம் பதினாயிரம் ஆண்டுகள், காளைப் பருவம் 1032 வருடங்களாம். இந்த யுகத்தில் வாழ்ந்த மனிதர்களின் உயரம் எவ்வளவுத் தெரியுமா? அய்ந்து பனை மரம் அளவாம்.

'எனக்குப் பயித்தியம் தெளிந்து விட்டது; உலக்கையைக் கொண்டுவா கோவணம் கட்டிக் கொண்டு வருகிறேன்' என்று ஒருவன் சொன்னானாம். அது போன்ற கிறுக்கன் எவனாவது உளறிக் கொட்டி வைத்திருப்பான் போலும்!

இது போன்ற கதைகளை எல்லாம் இப்பொழுது ஏன் கட்ட முடியவில்லை? தந்தை பெரியார் பிறந்து விட்டாரே! மக்களிடத்தில் சிந்திக்கும் திறன் உயர்ந்திருப்பதுதான்;  இந்த மாற்றத்தின் முனையை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற பழைய உளுத்துப் போன சரக்குகளை விளம்பர வெளிச்சத்தால் விநியோகம் செய்ய ஆசைப் படுகிறார்கள்.

இன்றைக்குத் தங்கம் விற்கும் விலையில் விலை கொடுத்து வாங்கும் நிலையிலா சாதாரண மக்கள் இருக்கிறார்கள். சென்றாண்டு இதே அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்கள் வீடுகளில் எல்லாம் இப்பொழுது தங்கக் கட்டிகள் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றனவா!

தங்கத்தை விற்றவன் வேண்டுமானால் பணக்காரனாகி இருப்பான். தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள் என்று ஒரு பக்கத்தில் ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது. நகைக் கடைகளில்கூட தங்கத்திற்காகச் சீட்டுப் பிடிப்பது எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு நாளை விளம்பரப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டாமா?

உலகத்திலேயே தங்கத்தை நகைகளாக மாற்றி உடலில் அணிந்து கொள்ளும் போதை இந்தியாவில் தான் அதிகமாம். மற்ற மற்ற நாடுகளில் தங்கம் ரிசர்வ் வங்கியில் இருக்கும். அதன் மூலம் பண வீக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது.

பக்திப் போதை எகிறிக் குதிக்கும் இந்தப் பாரத 'புண்ணிய' பூமியில்தான் தலைகீழாக இருக்கிறது.

திருவனந்தபுரம் கோயிலில் தங்கச் சுரங்கமே குடி கொண்டு இருக்கிறது. இதனால் என்ன பயன்? இவற்றை யெல்லாம் மக்கள் நல் வாழ் விற்குப் பயன்படுத்தினால் என்ன? வறுமைக் கோட்டுக்கும் கீழ் கிடந்து உழலும் மக்களைக் கரையேற்றினால் தான் என்ன?

இந்தமூட நாளில் இப்படி ஒரு முற்போக்குச் சிந்தனை வெடித்தால் நல்லதே!

No comments:

Post a Comment