இந்தியாவை சுற்றி வந்த 36 பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

இந்தியாவை சுற்றி வந்த 36 பெண்கள்

36 பெண்கள் இரண்டு இரண்டாக சாலையில் இருசக்கர வாகனத்தில் தங்களின் தலைக்கவசம் மற்றும் உடையில் இந்தியக் கொடியினை ஏந்தி வந்த அந்த கம்பீரமான நிகழ்வு கடந்த மாசம் நிகழ்ந்தது. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது இந்த ஊர்கோலம். இந்திய ராணுவப் படையின் ஒரு துணைப்படை தான் பி.எஸ்.எஃப் என்று அழைக்கப்படும் எல்லை காவல் படை.

இதில் ஆண்கள், பெண்கள் என்று பலரும் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய எல்லைப் பகுதியினை பாதுகாத்து வருகிறார்கள். மேற்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மற்றும் கிழக்கு பகுதியில் பங்களாதேஷ் வரையுள்ள எல்லைப் பகுதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த எல்லைப் பாதுகாப்பு படையில் பல பெண்கள் தங்களின் பணியினை செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் சீமா பவானி குழுவினர். இந்த குழுவினைச் சேர்ந்த 36 பெண்கள் டில்லி முதல் கன்னியாகுமரி வரை கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி தங்களின் விழிப்புணர்வு பயணத்தினை ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350 என்ற மோட்டார் வாகனத்தில் மேற்கொண்டுள்ளனர்.

‘‘கடந்த மாதம் மகளிர் தினத்தன்று தான் எங்களின் பயணம் துவங்கியது. பி.எஸ்.எஃப் சீமா பவானி ஷவுரியா என்ற எங்க குழுவில் நாங்க மொத்தம் 36 பெண்கள். எல்லாரும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினை சேர்ந்தவர்கள். நாங்க ஒவ்வொருவரும் ஒரு யூனிட்டில் வேலை பார்ப்பவர்கள். சீமா பவானி குழுவால் ஒன்றாக இணைந்து பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கோம்’’ என்று பேசத்துவங்கினார் குழுவின் கேப்டன் மற்றும் இன்பெஸ்டரான ஹிமான்ஷு ஷிரோஹி.

சீமா பவானி குழு பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட குழு. இந்த குழுவில் உள்ள அனைவரும் இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். 2016ஆம் ஆண்டு குவாலியர் மாவட்டத்தில் தான் இந்த குழு துவங்கப்பட்டது. எங்க எல்லாருக்கும் குவாலியரில் உள்ள ஒன்றிய மோட்டார் வாகன பள்ளியில் தான் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு 2018ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் புரிந்தோம்.

எங்கள் குழுவில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்ட தெரியும். ஆனால் எங்களின் லிமிட் 2 கிலோ மீட்டர் தூரமும், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகம் மட்டும் தான். முதன் முதலாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மட்டுமே 400 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, கருநாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயணம் செய்திருக்கோம்.

எங்க குழு சார்பாக இந்த பயணம் மேற்கொள்ள இருப்பது குறித்த செய்தி வந்தது. விருப்பமுள்ளவர்கள் இந்த பயணத்தில் இடம் பெறலாம்  என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 36 பெண் வீராங்கனைகள் இதில் பங்கு பெற முன்வந்தார்கள். இவங்களின் தலைவியாக நான் நியமிக்கப்பட்டேன். டில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவுச்சின்னத்தில் இருந்து இந்தியா கேட் வரை சாலையில் என்னையும் சேர்த்து ஒரு சில பெண்கள் பைக் ஓட்டி இருக்கோம். அதைத்தாண்டி நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து உள்ள சாலைகளில் நாங்க பயணம் செய்தது கிடையாது. முதலில் நம்ம பெண்களால் இதை கடக்க முடியுமான்னு பயந்தேன்.

அதன் பிறகு மனதில் உறுதி இருந்தால் கண்டிப்பாக எதையும் சமாளிக்க முடியும்னு என் தலைமையில் இவர்களை வழிநடத்த ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் உற்சாகமாகத்தான் எங்களின் பயணம் தொடர்ந்தது. அதன் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டரும் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தது. குறிப்பாக பல வண்டிகள் செல்லும் போக்குவரத்து சாலையில். இந்த பயணத்தில் நெடுஞ்சாலைகள் மட்டுமில்லாமல் மலைப்பகுதிகள், கரடுமுரடான சாலைகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள், ஆற்றுப்பாலங்கள் என பலதரப்பட்ட இடங்களில் வண்டியினை ஓட்டிச் செல்ல வேண்டி இருந்தது. அதிலும் போக்குவரத்து நிறைந்த சாலைகள் மற்றும் மலைப்பகுதியில் வண்டியினை ஓட்டிச் செல்வது ரொம்பவே சவாலாக அமைந்தது. நாங்க இரண்டு இரண்டு பேராக வரிசையாக செல்ல வேண்டும். சில சமயம் போக்குவரத்து காரணமாக நடுவில் ஒரு காரோ அல்லது பைக்கோ சென்றுவிடும். அந்த நேரத்தில் எங்களை பின்தொடர்ந்து வந்த மற்றவர்கள் நின்றுவிடுவார்கள். அவர்களுக்காக காத்திருந்து அழைத்து செல்ல வேண்டும். மறுபக்கம் திடீரென்று மாடு குறுக்கே வந்திடும். அதையும் சமாளிக்கணும். இந்த பயணத்தில் ரொம்பவே சவாலான  மலைப் பகுதி சாலைகள். முதல் அய்ந்து கிலோமீட்டர் ஒன்றுமே தெரியவில்லை.

அதன் பிறகு செங்குத்தான சாலைகள், அதிக அளவு வளைவுகள் கொண்டு இருந்தது. அந்த வளைவுகளில் வண்டியினை எப்படி திருப்பணும் மற்றும் செங்குத்தான சாலையில் எப்படி கடக்கணும்னு சொல்லிக் கொடுத்து மற்ற பெண்களை வழிநடத்தினேன். ஒருத்தர் ஸ்லிப் ஆனா அவரை தொடர்ந்து வரும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் ரொம்பவே கவனமாக இந்த பாதையினை கடந்து வந்தோம். மேலும் எங்களுடன் ஒரு டாக்டர், ஆம்புலன்ஸ் வண்டி வந்தது என்று தங்களின் பயணத்தைப் பற்றி விவரித்தார் ஹிமான்ஷு.  


No comments:

Post a Comment