இன்று “குடிஅரசு" இதழ் தொடங்கப்பட்ட நாள் (1925) குடி அரசு : காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

இன்று “குடிஅரசு" இதழ் தொடங்கப்பட்ட நாள் (1925) குடி அரசு : காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி

  முனைவர் இரா.சுப்பிரமணி


ஆலயம் தொழவும், ஆண்டவனிடம் அழவும் வேதங் கள் விடவில்லை; தெருவினில் நடக்கவும், ஆடைகள் அணியவும் ஆண்டைகள் விடவில்லை; சாணிப்பால் சவுக்கடியில் காய்த்த முதுகை ஜாதிகள் விடவில்லை; சரிநிகர் சமத்துவம் கோரிய பெண்மொழி சனாதன செவி களில் விழவில்லை; ஏடுகள் நடத்தவும், பாடங்கள் படிக்கவும் மனுநீதி விடவில்லை; இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வெளிச்சத்தின் ரேகைகள் விழவே இல்லை என்ற வாழ் வியல் சமத்துவமற்ற தமிழ்ச்சமூகத்தில் போர்ப்பறையாய், இடிமுழக்கமாய் இடைவிடாது ஏடுகளில் எழுதி, மேடை களில் முழங்கிக் களங்களில் போராடி சிறைகளில் வாழ்ந்தவர் தந்தை பெரியார். அவரின் கருத்துக் களத்தில் பிறந்த ‘குடி அரசு’ வார இதழ் தொடங்கப்பட்டு இன்றுடன் தொண்ணூற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தியச் சமூக, அரசியல், பண்பாட்டு, பொருளியல்,மெய்யியல் மற்றும் இதழியல் வரலாற்றின் கருத்தியல் அடுக்கு நிலையில் பண்பியல் மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த ‘குடி அரசு’ இதழ் 2.5.1925 ஆம் நாள் தந்தை பெரியாரால் வார இதழாக வெளியிடப்பட்டது. "பச்சை அட்டை குடி அரசு" என்று வாசகர்களால் அழைக்கப்பட்ட "குடி அரசு" முதல் இதழ் சனிக்கிழமையும் பின்னர் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளியானது. சமஸ்கிருதமும், பிறமொழிச் சொற் களும் ஏடுகளில் நிறைந்திருந்த காலகட்டத்தில்  "குடி அரசு" என்னும் தமிழ்த் தலைப்புடன் இதழியல் களம் கண்டார் பெரியார்.

கோவை சிறையில்

1922ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி கோவை சிறையிலிருந்தபோது பத்திரிகைத் தொடங்கவேண்டும் என்ற முடிவினை எடுத்த பெரியார் “நமது நாட்டு மக்களுள், சுயமரியாதையும் சகோதரத்துவத்தையும் உண்டாக்க ‘குடி அரசு’ எனும் பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்ப தாக முதல் நானும் எனது நண்பர் சிறீமான் தங்கப் பெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும்போது நினைத்தோம்” எனத் தனது இதழியல் உலகத்துக்கான தொடக்க சிந்தனையைப் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து தமது எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த பெரியார் ‘குடி அரசு’ என்ற வார இதழையும், ‘கொங்கு நாடு’ என்ற மாத இதழையும் நடத்த 19.1.1923 ஆம் நாள் அரசாங்கத்தில் பதிவு செய்தார். 

“குடிஅரசின்" நோக்கம்

அதனைத்தொடர்ந்து "குடிஅரசு" இதழைத் தொடங்கிய பெரியார் “எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய விரும்பு வார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்” என்ற தமது இதழியல் இலக்கினைத் தெளிவுப் பட வெளிப்படுத்தினார். தந்தை பெரியாரின் 48 ஆண்டுகால இதழியல் வரலாறு என்பது திராவிட இயக்க இதழியல் வரலாற்றில் பெருமாற்றங்களுக்கு வித்திட்ட இதழியலாகும்.

அறியாமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி சமய மறுப்பு, கடவுள் மறுப்பு, பெண்விடுதலை, மனித நேயம், மானுட சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிடர் மரபார்ந்த உரிமை, தமிழர் தன்னுரிமை, மொழிப்போர், வடவர் எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, மய்யப்படுத்தப்பட்ட அதிகார மய்யங்களை நோக்கியத் தாக்குதல், நிறுவனமய மான ஆதிக்க அடையாளங்களைத் தகர்த்தல் எனப் பன் முகத்தளத்தில் இயங்கிய பெரியாரின் பரப்புரைக்குக் "குடி அரசு" இதழ் வலுவான படைக்கலனாகத் திகழ்ந்துள்ளது. அலங்காரமும் புனைவுகளுமற்ற ஆணித்தரமான சொற்கள், கதைகள், துணைக்கதைகள், உரையாடல்கள், கேள்விகள், நக்கல், நையாண்டி தன்மைகொண்ட உள்ளடக்கங்கள் குடிஅரசின் தனித்தன்மைகளாகும். 

நூல்களிலும் ஏடுகளிலும் பெரியார் முன்னெடுத்த விவாதங்களும் அடுக்கடுக்கான வழக்காடும் வாதங்களும் விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் வாசகர்களிடையே கடத்தி அவர்களைப் போராட்டக்களம் நோக்கி ஈர்த்தன. பெரியாரின் மேடைத்தமிழும் இதழியல் நடையும் பண்டிதத் தனங்களைத் தவிர்த்த மக்கள் மொழியில் இருந்தது. இதனால் பெரியாரின் எழுத்து நடை மக்களுக்கு மிக நெருக்கமான மொழியாக அமைந்தது.

பெரியார் தனது இடைவிடாத இதழியல் பயணத்தில் சந்தித்த போராட்டங்கள் எண்ணற்றவைகளாகும். இருபது ஆண்டுகளைக் கடந்து வெளிவந்த "குடிஅரசு" இதழ் 17,631 பக்கங்கள் உடையதாகும். ஞாயிற்றுக்கிழமைதோறும் வார இதழாக வெளிவந்த "குடி அரசு" இதழ் ஒரு அணா விலை யில் விற்பனை செய்யப்பட்டது. இதழ் தொடங்கப்பட்ட நாள் முதல் 31.10.1943 ஆம் நாள் வரையில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் குடிஅரசு பாதி விலைக்கு வழங்கப் பட்டது. 

இதழியல் போராட்டம்

காவல்துறை கண்காணிப்பு, சோதனை, ஜாமீன், பறி முதல், அபராதம், சிறைத்தண்டனை எனப் பெரியாரின் சட்ட ரீதியான இதழியல் போராட்டம் என்பது வேறெந்த இதழ் களும் சந்திக்காதவைகளாகும். கிருத்துவ மதத்தைப் பற்றி எழுதியதற்காகவும், இசுலாம் மதத்தைப் பற்றி எழுதியதற் காகவும் "குடிஅரசு" இதழ் இருமுறை தடை செய்யப்பட்ட வேளையில் பெரியார் சற்றும் தாமதிக்காமல் அதே வடி வமைப்பில் புரட்சி வார இதழ், பகுத்தறிவு நாளிதழ், பகுத் தறிவு வார இதழ்களை வெளிக்கொணர்ந்தார். 

உலகப்போர் காரணமாக 1941,1942 ஆம் ஆண்டுகள் முழுவதும் "குடிஅரசு" வெளிவரவில்லை. இதனிடையே ரிவோல்ட் என்னும் தலைப்பில் ஆங்கில இதழ் ஒன்றையும் பெரியார் வெளிக்கொணர்ந்தார். "குடிஅரசு" வார இதழ் செப்டம்பர் 1949 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. எனினும் பெரியாரின் இதழியல் பயணம் விடுதலை,  தி ஜஸ்டிஸ், உண்மை, தி மாடர்ன் ரேசனிலிஸ்ட் எனத் தொடர்ந்தது.

மக்களிடம் தமது கருத்துகளைக் கொண்டுசெல்ல ஏடுகளே மிகச்சிறந்த கருத்தாடல் வடிவம் என்பதனை உணர்ந்த பெரியார், தமது கொள்கைகளைத் திரிபுகள் எதுவுமின்றி மக்களிடம் கொண்டுசேர்க்கவும், சமூகத்தில் பாகுபாட்டை நிலைநிறுத்த முயன்ற பிராமணக் கருத்தியல் ஏடுகளுக்கு விடையளிக்கவுமே இதழியல் என்னும் வலிமையான ஆயுதத்தைக் கையிலெடுத்தார். 

உலக இதழியல் அரங்கில் ஆற்றல் மிக்க எழுத்துகளின் வீச்சும் பண்புகளும் கட்டமைப்பும் தாக்கங்களும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றின் தனித்தன்மைகள் புலப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வண்ணம் நிகழ்த்தப் பெறும் ஆய்வுகள் எடுத்துரைத்தல்  (narration), விரித்து ரைத்தல்  (description), விளங்கவுரைத்தல் (exposition), , விவாதித்தல் (argumentation) என்னும் நான்கு வகைப் பாட்டின்கீழ் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 

இந்த வகைப்பாட்டில் பெரியாரின் எழுத்துகளைப் பொருத்திப்பார்த்து ஆய்வுக்குள்ளாக்கினால், பெரியாரின் சொல்லாட்சிகள் தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதனை அறியலாம். அவரின் கருத்துப்புலப்பாடு, சொல்தேர்வு, உதாரணங்கள், கதைகள், துணைக்கதைகள், பழமொழிகள், கேள்விகள் அனைத்தும் மக்களுக்கு நெருக்கமானவை யாகவே உள்ளன. ஆனால் அவை மக்கள் எதிர்பார்க்காத கோணத்தில் இருந்தன. 

பெரியாரின் அடுக்கடுக்கான கேள்விகள் வாசகர்களைச் சிந்தனைக் களம் நோக்கி ஈர்த்தன. பெரியாரின் எழுத்தில் பண்பாண்மை (மீtலீஷீs) மிகுந்த கருத்துப்புலப்பாட்டுத் தன்மை இருப்பதனை அறியமுடிகிறது. பெரியாரின் எடுத்து ரைப்பியல், மொழிநடை, புலப்பாடு, வாதம், எதிர்வாதம், பாணி அனைத்தும் மக்களைத் தன்வயப்படுத்தும் தன்மை கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. பெரியாரின் மேடை சொற்பொழிவும், இதழியல் நடையும் ஒரே மாதிரியான தாகவே காணப்படு கின்றன. அவை மக்களின் எளிமையான வழக்கு மொழிகளைக் கொண்டவைகளாகவே உள்ளன. 

மக்களிடம் கொள்கைகளை 
கொண்டு செல்ல...

மேடை, இதழ்கள், நூல்கள் என எல்லா வடிவங்களிலும் மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதில் பெரியார் உறுதியுடன் செயலாற்றினார். தொடர் பரப்புரை யின் வலிமையை நன்குணர்ந்த பெரியார் தமது கொள்கை களை மக்களிடம் கொண்டுசெல்ல இதழ்களே மிகச்சிறந்த ஆற்றல் வாய்ந்த கருவிகள் என உறுதியாக நம்பினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஊடகங்களின் ஆற்றலை வெகுவாக முன்கணித்த பிராமணர்கள் தங்களின்  கருத்துகளைக் கட்டமைத்து நிலைநிறுத்த  ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அதனால்தான் ஆதிக் கக் கருத்தியல் கோட்பாட்டைத் தகர்க்க ஏடுகளைக் கையிலெடுத்தார் பெரியார். 

பெரியாரால் தேர்வுசெய்யப்பட்ட உள்ளடக்கங்கள் எல்லாம் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, அரசியல் உரிமை, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்ட மக்களுக் கான உரிமை எனப் பரந்துபட்ட பேசுபொருள்களைக் கொண்டனவாக உள்ளன. இவ்வுரிமைகளுக்கு எதிராக இருந்த கடவுள், மதம், சாதி, சமூகக்கட்டுமானம், தேசியம், பிராமணியம், இலக்கியம், புராணங்கள், மூடநம்பிக்கை, வருணப்பாகுபாடு, பழமை வாதம், அரசியல் மேல்கட்டு மானம், கல்வி முறை, பண்பாட்டுப் பழக்கவழக்கம் போன்ற அனைத்தையும் தகர்க்கும் வண்ணமே இதழ்களில் இடம் பெற்ற கட்டுரைகளும், இன்னபிற உள்ளடக்க வடிவங்களும் காணப்படுகின்றன. 

பெரியாரின் எழுத்துகளுக்கு வலுசேர்க்கும் வண்ணமே மற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகளும், கவிதைகளும், உரையாடல் வடிவ உள்ளடக்கங்களும் இடம் பெற்றிருப் பதனைக் காணமுடிகிறது. பெரியார் நடத்திய குடி அரசு இதழ்களில் வெளிவந்த புராணங்கள் குறித்த ஆராய்ச்சி, சமயம் தொடர்பான கருத்துகள், மேலைநாட்டுச் செய்திகள், அறிவியல் செய்திகள், இலக்கியம், மொழி தொடர்பான கட்டுரைகள், உரையாடல்கள், கடித வடிவிலான கட்டு ரைகள், கருத்துப்படங்கள் போன்றவை பல்வேறு வகைப் பாடுகள் கொண்டவைகளாக அமைந்துள்ளன. அவ்விதழ் களில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த முன்னணிக் கருத்தாளர்களும், பெண்களும், கிருத்துவ, இசுலாமிய எழுத்தாளர்களும், ஒடுக்கப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கட்டுரைகள் எழுதியிருப்பதனைக் காண முடிகிறது.

தந்தை பெரியார் இதழியல் களம் கண்ட சூழலில் வைதீகம், சமயம், சாதியம், பிராமணியம், பிற்போக்குத்தனம், பெண்ணடிமைத்தனம், சாதிய ஒடுக்குமுறை போன்ற மக்கள் நலனுக்கு எதிரான சமூக விதிமுறைகள், பழக்க வழக்கங்கள்  என்பன எல்லா நிலைகளிலும் கெட்டிப்பட்டு நீக்கமற நிறைந்திருந்தன. அவ்வழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரவே சீர்திருத்த அமைப்புகளும், முற்போக்கு இதழ்களும் தீவிரமாகக் களமாடின. எல்லா மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பிராமணியம் இதழியல் அரங்கில் மேலாதிக்கமாகப் பரிணாமமடைந்து வலுப்பெற்றிருந்தது. மக்கள் நலன், சமூக வளர்ச்சி குறித்துச் சிந்திக்க இடமில்லா வண்ணம் பிராமண இதழ்கள் கருத்துத் திணிப்பை மேற்கொண்டிருந்தன. 

மதம், வேதம், கடவுள், மோட்சம் என்ற பெயரில் மக்களை ஒடுக்கிய பிராமணர்கள் தேசியம், சுயராஜ்யம், தேசசேவை, பத்திரிகை என்ற நவீனவடிவங்களைக் கொண்டு எங்ஙனம் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றனர் என்பதனை மய்ய இழையாகக் கொண்ட ஏராளமான கட்டுரைகள் குடி அரசு இதழில் இடம் பெற்றுள்ளன. பிராமண இதழ்களில் செய்திகள் எங்ஙனம் கட்டமைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, முன்னிலைப் படுத்தப் பட்டு, திணிக்கப்பட்டன என்பதனை குடி அரசு இதழில் இடம் பெற்றுள்ள பெரியாரின் கட்டுரைகள் துல்லியமாக எடுத்துரைக்கின்றன. இதனை வாசிக்கும் வேளையில் இன்றைக்குப் பிரபலமாக உள்ள மேட்டுக்குடி இதழ்களின் போக்கை அன்றைக்கே பெரியார் கணித்திருந்தார் என்பது போன்ற உணர்வையே உருவாக்குகின்றன.

குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை, உண்மை உள்ளிட்ட இதழ்கள் தொடங்கப்பட்டதன் பின்னணியும், ஒவ்வொரு இதழும் வெளிவர எதிர்கொண்ட சவால்களும், பிறரால் இழைக்கப்பட்ட இன்னல்களும், ரெய்டு, வழக்கு, அபராதம் என இதழ்கள்மேல் தொடுக்கப் பட்ட அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளும் இதழ்களி லேயே பெரியாரால் பதிவு செய்யப்பட்டன. இதழ்களில் ஏற்படும் எழுத்துப்பிழை, கருத்துப் பிழைகளில் தொடங்கி இதழ்களின் தாமதம், சந்தா விவரம், அச்சுப்பொறிப் பழுது உள்ளிட்ட சின்னச்சின்ன தகவல்களும் வாசகர்களிடம் பெரியாரால் கவனமாகப் பகிரப்பட்டுள்ளன. தமிழ் இதழிய லில் பெரியார் கையாண்ட இதழாளர்-வாசகர் இடையிலான வெளிப்படையான இதழியல் உறவு என்பது இன்று வரை வியப்பானதாகவே உள்ளது. 

பெரியார் தமது இதழ்களைப் போலவே திராவிடக் கொள்கை கொண்ட இதழ்கள் பெருகவேண்டும் என்பத னைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எனவே தமது கருத்திற்கு இணங்க வெளிவந்த தோழமை இதழ்களைப் பாராட்டி வரவேற்றுச் சந்தா செலுத்த வேண்டும்  என வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் செய்திகளைக் குடி அரசு இதழில் பரவலாகக் காணமுடிகிறது. கொள்கைக் கான இதழ்கள் பெருகவேண்டும் எனக் கருதிய பெரியார் தோழமை இதழ்களை மனதார வாழ்த்தி வரவேற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.  

மக்களை அடிமைப்படுத்தும் பார்ப்பன ஏடுகள்

அன்றைக்கு வெளிவந்த சுதேசமித்திரன், விகடன், தினமணி, ஹிந்து உள்ளிட்ட கருத்து முரண்நிலை கொண்ட இதழ்களையும் நவசக்தி, தமிழ்நாடு உள்ளிட்ட பிராமண ரல்லாதார் இதழ்களையும் பெரியார் எதிர்கொண்ட விதம், கொள்கைக்காகப் பெரியார் வழக்காடிய விதம் வாசிப்போரை வியக்க வைக்கும் வண்ணம் இருக்கின்றன. கொள்கைக்காக வாதிடுவதும், தமது கருத்தியலுக்கு எதிரான இதழ்கள்மீது கருத்துப்போர் தொடுப்பதும் கோட்பாட்டு இதழியலின் அடிப்படைகளாகும். அவை வழக்காடும் இதழியல் என்ற வகைப்பாட்டில் பார்க்கப்படுகின்றன. பெரியார் பிராமணரல்லாத மக்களின் சமத்துவ சமூகநீதிக்காக முன்வைக்கும் வாதங்களும், அவற்றை எதிர்க்கும் பிராமண இதழ்கள் மீதும், பிராமணரல்லாதார் இதழ்கள் மீதும்  பெரியார் தொடுத்த கருத்துப்போர் இன்றுவரையில் நம்மை வழிநடத்தும் ஆற்றல் கொண்ட  இதழியல் மரபாக உள்ளது. இன்றைக்கு பேசப்படுகின்ற சமூகக் கட்டுமான இதழியல், வளர்ச்சி இதழியல், வழக்காடும் இதழியல் போன்ற பல்வேறு அம்சங்களைக் குடி அரசு இதழின் உள்ளடக்கங்களிலிருந்து விரித்துரைக்கலாம்.  

காலங்காலமாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு மக்களை அடிமைகளாக மாற்றி அந்நிலையைத் தக்க வைத்துவரும் வைதீகக் கொள்கை, பத்திரிகை என்ற வடிவம் கொண்டும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதனை அன்றே சுட்டும் பெரியார், “நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற் கென்று வெகுகாலமாகவே அதாவது, ஆயிரக்கணக்கான வருடங்களாகவே மதம், வேதம், கடவுள், மோட்சம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொண்டு, அதன்மூலம் தாங்கள் உயர்ந்தோர்களாயிருந்து கொண்டு, நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல் அரசியல் சுயராஜ்யம், தேசியம், தேசியப் பத்திரிகை, தேச சேவை என்கிற பெயராலும் பலவித இயக்கங்களையும் பத்திரிகைகளையும் உண்டாக்கிக் கொண்டு, அதன் மூலம் தாங்களே தேசபக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசியப் பத்திரிகைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப் படுத்திக்கொண்டு நம்மைத் தாழ்த்தி, மிதித்து, மேலேறி பல வழிகளிலும் வயிறுவளர்க்க ஆதிக்கம் தேடிவைத்துக்கொண்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும்விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே!” (குடிஅரசு,30.1.1927) என ஆணித்தரமாகக் கூறுகிறார். 

பிராமண இதழ்களும், இதழாளர்களும் பெரியாருக்கு எதிராக வன்மத்துடன் இயங்கிவந்ததைச் சற்றும் பொருட் படுத்தாத பெரியார், “இந்த நாட்டுப் பத்திரிக்கைகளை நான் என்றைக்குமே மதித்தது இல்லை. எவனாக இருந்தாலும் அயோக்கியன் என்றே எண்ணிக்கொண்டும், சொல்லிக் கொண்டும் வருபவன். பத்திரிகைக்காரர்களின் தயவு இன்றி அவர்களை எதிர்த்துக்கொண்டு இயக்கம் நடத்துவதும் அதில் மிஞ்சியதும் நாங்கள் தான். மற்றக் கட்சிக்காரன்கள் எல்லாரும் பத்திரிக்கைக்காரன் தயவைச் சம்பாதிப்பதில் பெரிதும் ஈடுபடுவார்கள். நான் மட்டும் எனது பொதுவாழ்வில் இத்தனையாண்டுகளாக இவர்களைச் சட்டைப் பண்ணுவது கிடையாது. இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்கள் எல்லாரும் கட்டுப்பாடாக எங்களைப் பற்றி எல்லாம் இருட்டடிப்பு செய்வதோடு மட்டும் அல்லாமல், எங்களைப் பற்றிக் கட்டுப் பாடாகவும், தவறாகவும், புளுகிக்கொண்டும் வருகின்றனர். ஒருத்தன் புளுகினால் எல்லோரும் ஒரே மாதிரியாகவே புளுகுவான்” (விடுதலை, 01.10.1961) எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசியல், சமூக, பண்பாட்டுத்தளத்தில் பெரும் உருமாற்றத்தையும், சமூகத்தின் உளவியல், பண்பியல் கூறுகளில் அடிப்படை மாற்றங்களையும் நிகழ்த்திய தந்தை பெரியாரின் இதழியல் மற்ற சமூக சீர்திருத்தவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டது. 

இதழ்களை நடத்தவும், அவ்விதழ்களைத் தொடர்ந்து நடத்தவும் பெரியார் எதிர்கொண்ட இடர்பாடுகள் வேறெந்த இதழாளரும் எதிர்கொள்ளாத பெரும் சிக்கல்களைக் கொண் டதாக இருந்திருப்பதனைக் காணமுடிகிறது.பெரியாரின் இதழியல் உள்ளடக்கங்கள் சமூகத்தில் உருவாக்கிய விளை பயன்கள் எண்ணிலடங்காதவைகளாகும்.

இன்றும் தேடித்தேடி 
வாசிக்கப்படுகிறார் பெரியார்!

ஆற்றல் வாய்ந்த கருத்துப் புலப்பாட்டுத் திறனாளராகவும், ஆக்க பூர்வமான சமூகத்தைக் கட்டமைக்கும் இதழாள ராகவும் பரிணமித்த பெரியாரின் இதழியல் மொழியும், நடையும் புலப்படுத்தப்பட்ட கருத்தும் தெளிவானவை யாகவும், சிந்திக்கத் தூண்டுவனவாகவும், மெய்மைத் தன்மைக் கொண்டனவாகவும் திகழ்கின்றன. தமிழகத்தில் தலைவர்களுக்கெல்லாம் தலைவராகவும்,  தத்துவங்களின் முதல்வராகவும்  திகழும் தந்தை பெரியாரே இதழியல் உலகிற்கும் வழிகாட்டும் ஆசானாகவும் இருக்கிறார் என் பதனை குடி அரசு இதழின் உள்ளடக்கங்கள் காலங்களைக் கடந்தும்  எடுத்துரைத்து வருகின்றன. அதனால் தான் பெரியார் இன்றும் தேடித்தேடி  வாசிக்கப்படுகிறார். 

குறிப்பு: கட்டுரையாளர் முனைவர் இரா.சுப்பிரமணி, சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும், தந்தை பெரியார் இருக்கை - பேரறிஞர் அண்ணா இருக்கை - முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மய்யம் ஆகியனவற்றின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

No comments:

Post a Comment