ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி-1:  பெட்ரோல் விலையில் மாநிலங்கள் கலால் வரியை குறைக்கச் சொல்வது நியாயமா?

- எ.வள்ளி,  எருக்கஞ்சேரி

பதில்: இதுபற்றிய அநியாயத்தை - திசை திருப்பும் பிரதமர் மோடியின் கருத்து - மாநிலங்களுக்கான அறிவுரை - எப்படி முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சி என்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்.

அதுபோலவே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் விளக்கியுள்ளாரே! ஒன்றிய அரசு உமி கொண்டு வருகிறது; மாநில அரசு அரிசி கொண்டு வருகிறது - ஊதி ஊதி இருவரும் தின்போம் என்பது நியாயமானதா?

***********

கேள்வி-2:  தமிழ்நாட்டில் பா.ஜ.க எதிர்கட்சியாக வளரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தாங்களே சொல்லிக்கொள்கிறார்களே?

- கண்ணப்பன்,  சேலம்

பதில்: பரவாயில்லை - ஆட்சிக்கு விரைவில் வர இயலாது என்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நமது வரவேற்பு (இப்போதும் எதிர் கட்சிதானே)

***********

கேள்வி-3: பிரச்சாரப் பெரும்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள். அடுத்த திட்டம் என்ன?

பா.முகிலன்,  சென்னை

பதில்: மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய அவசியத்தை ஒன்றிய அரசும் - ஹிந்தி திணிப்பின் மூலம் ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அரசமைப்புச் சட்ட விரோத அடாவடித்தனத்திற்கு எதிராகவும் அறப்போராட்டத்தில் இறங்குவது!

***********

கேள்வி-4: சென்னை பெருநகரத்தில் உள்ள நடைபாதைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பிலேயே இருக்கின்றனவே?

- சு.வெற்றிச்செல்வன், நாகர்கோயில்

பதில்: மாநகராட்சியின் உரிய கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வோம்!

***********

கேள்வி-5: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரும் தொடர்ந்து வேறு ஒரு தேர்வு எழுதவேண்டும் என்ற முறை நியாயமானதா?

- செ.பாக்யா,  பொன்னமராவதி

பதில்: உயர்நீதிமன்றங்களின் இந்த ஆணை போன்ற தீர்ப்புக்கு உரிய மாற்று வழி மூலம் இந்த ஆசிரியர்களுக்கு நீதி வழங்க பள்ளிக்கல்வித்துறை முயல வேண்டியது அவசரம்! அவசரம்!!

***********

கேள்வி-6: பெரியார் பற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நன்றாக தெரிகிறது. பகுத்தறிவாளர்கள் எண்ணிக்கை தற்போது கூடியிருக்கிறதா?

- எ. சின்னத்தம்பி,  கள்ளக்குறிச்சி

பதில்: பகுத்தறிவாளர்கள் எண்ணிக்கையும் பெருகித்தான் வருகிறது; ஆனால் அது கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்களாக இருப்பதால் எளிதில் கணக்கிட முடிவதில்லை.

***********

கேள்வி-7:திருவிழாக்கள், தீமிதி போன்ற நிகழ்வுகளை காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத்துறை இவற்றின் அனுமதி இல்லாமல் நடத்துகிறார்களே இதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குற்றவாளிகள் அல்லவா?

- அ. தமிழ்க்குமரன், ஈரோடு
பதில்: மற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விதிக்கப்படும் அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை போன்றவற்றின் பல கட்டுப்பாடுகளும் திருவிழாக்களுக்கும் விதிக்கப்படுதலும் பின்பற்ற வற்புறுத்தலும் அவசியம் மிக்கதாகும்.

அறநிலையத்துறையின் தக்க அனுமதியுடன் - தடையில்லா சான்றுடன் திருவிழா - ஒருங்கிணைந்த நிகழ்வாக நடந்தால் கலவரம், விபத்து நேரிட வாய்ப்புப் பெரிதும் இருக்காது!

அது போன்ற திருவிழாக்களில் எந்த அரசியல் - அமைப்பும் கொடிகளை (காவி - ஆர்.எஸ்.எஸ்.கொடிகள்) கட்டுவதை அனுமதிக்கக் கூடாது.

மதத்தில் - பக்தியில் “அரசியல்  அனுமதி”யை அனுமதிக்கவே கூடாது; கலவரம் தடுக்க அது பெரிதும் உதவும்.

***********

கேள்வி-8: துணைவேந்தர் நியமன வரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அரசு என்ன செய்ய முடியும்?

-தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: பிரச்சினை என்றால் தீர்வும் தானே முளைக்கும். மோதல் அரசியல் அல்லது போட்டி அரசாங்கம் நடத்துதல் மக்களால் முடிவுக்குக் கொண்டு வரப்படும் நிலைமை தானே ஏற்படும்.

***********

கேள்வி-9: “மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி” தத்துவத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வருகின்ற 2024 நாடாளுமன்றத்  தேர்தலில் மாண்புமிகு  மு.க.ஸ்டாலின் பிரதமராக வேண்டும் என்ற கருத்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளதே?

- மன்னை சித்து , மன்னார்குடி - 1.

பதில்: அதற்கு முழுத் தகுதியானவர். அதுவே தேடிவரும்  காலக்கட்டம் - வருங்காலம் உருவாகும் - ‘திராவிட மாடல் இந்தியா முழுவதும் பரவும் வாய்ப்பு ஏற்படும். அவசரம் காட்ட வேண்டாம் - தமிழ்நாடு சரியாக வேண்டும் முதலில் என்பதை முன்னிறுத்துவோம்.


கேள்வி-10: புவியின் சூழலியலில் தற்போதைய ஆபத்தான நிலையை விளக்கி சூழலியல் விழிப்புணர்வுப்  பிரச்சாரம் செய்தால் என்ன?

- அயன்ஸ்டின் விஜய், தத்தனூர்

பதில்: திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இதையும் ஆக்கிக் கொள்வோம் - தோழருக்கு நன்றி! 


No comments:

Post a Comment