புரட்சிக் கவிஞரின் பொருந்திய அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

புரட்சிக் கவிஞரின் பொருந்திய அறிமுகம்

புரட்சிக் கவிஞர் பெரியாரின் கொள்கைகளுக்கும் பெரியாருக்கும் முழுவதுமாகப் பொருந்திய இலக்கியப் படைப்பாளர். பெரியாரின் ஆய்வுக்குப் பொருளாகி பெரியாரால் முழுவதுமாகக் கண்டிக்கப்பட்ட இலக்கியங்களாகக் கடவுட் பாடல்கள் அமைந்துள்ளன. அந்தப் பாடல்களைக் கடவுள் அருளைப் பெற்றுப் பாடியவர்கள் என்று கூறப்படும் இலக்கியப் படைப்பாளர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் பாடிப் பாடிக் குவித்தனர். அவர்கள் பாடிய எவ்வளவு இலக்கியங்களுக்கும் தரத்தில் ஒப்புச் சொல்லும்படி யாகவும், உயர்வு சொல்லும்படியாகவும், தாம் ஒருவராக நின்று அவைகட்கு எதிராக பாடிப் பாடிப் பலதுறைகளில் குவித்த பாவலர் பெருமகனாகப் பாரதிதாசன் விளங்குகின்றார்.

பெரியாருடைய கொள்கைகளைப் பலமுகமாகப் பல கவிதைகளால் பாடியதைப் போலப் பெரியாரைப் பற்றிய பாடல்கள் பலவாக இல்லை சில பாடல்களே பாடியுள்ளார். அப்பாடல்களிலும் பல அடிகளுக்கு இடையே அமைந்த சில அடிகள் மிகப் பொருள் பொருத்தமுயைடதாகவும், காலமும் கருத்தும் உள்ளவரைக்கும் பாடிப்பாடி மகிழத்தக்க வளம் மிக்கதாகவும் உள்ளன. இப்பாவடிகள் ஒருபுறம் இருக்கட்டும். பெரியாரை நாட்டுப்புறத்தான் ஒருவர் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்துவதுபோல் ஒரு முழுப்பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் சொல்லொழுங்கும், கருத்தாழமும், இசையொழுங்கும், மிகப்பொருத்தமுற அமைந்து விளங்குகினற்ன. இதனை எண்ணுகின்ற தமக்கு ஒன்று தோன்றுகின்றது. நாட்டுப் புறத்தான் வடிவில் புரட்சிக் கவிஞர் நின்று கொண்டு உலக மக்களுக்கே பெரியாரை அறிமுகம் செய்வது போல இப்பாடல் அமைந்திருக்கின்றது என்று கூறலாம்.

இப்பாடலின் பின்புலம்

இப்பாடல் இவ்வளவு சிறப்பாக அமைதற்குரிய பின்புலத்தை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜாதியொழிப்புப் போரில்சிறை சென்று மீண்ட பெரியாருக்குத் தில்லையில் 29.6.1958இல் பல்லாயிரம் மக்கள் கூடி வியக்கத்தக்க பெரிய வரவேற்பொன்றை அளிக்கின்றார்கள். அப்போது பெரியாரை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்துத் தள்ளிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். புரட்சிக் கவிஞர் அங்கு அந்த நாளில் சென்றிருந்தார். வரவேற்புக் கூட்டம் அவர் தலைமையில் நிகழ்கின்றது.

இந்தக் காட்சி புரட்சிக் கவிஞரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. கவிஞரின் உள்ளத்தில் 28.6.1958இல் வட்டமிட்டுத் தோன்றிய இந்த ஊர்வலக் காட்சி 26.8.1958 வரை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. அக்காட்சியே 26.8.1958இல் ஒருமுழுப் பாடலாக உருவெடுக்கின்றது. அதுதான் நாட்டுப்புறத்தான் தன்னுடைய மனைவிக்கு அறிமுகம் செய்யும் முழுப் பாடலாகும். மூன்று நாட்கள் குறையாத இரண்டு மாதங்கள் புரட்சிக் கவிஞரின் உள்ளத்தில் வட்டமிட்ட ஊர்வலக் காட்சியின் முழு அழுத்தத்தையும் பாட்டடிகளில் அமைந்த கருத்துச் செறிவால் உணர்ந்து கொள்ளுகின்றோம். மேலும் சொல்லாட்சியில் சொற் சுருக்கமாகவும் உலக வழக்கில் உள்ள தமிழ்ச் செஞ்சொற்களின் ஆட்சியாகவும் இசையொழுங்கால் முற்றவும் தழுவப்பட்ட பாட்டாகவும், உருவெடுத்து உள்ளது இப்பாடல் என்று கூறலாம். அப்பாடலடிகளைப் பார்ப்போம்.

அவர்தாம் பெரியார் - பார்
அவர்தாம் பெரியார்
அன்புமக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் - பார்

‘அவர்தான்‘ என்று பாடக்கூடாது. அவர் என்ற சுட்டுப் பெயர் பன்மை விகுதியாகிய ரகர மெய்யை பெற்றுள்ளது. அதற்கேற்ப ‘அவர் தாம்' என்றே பாட வேண்டும். அவன் என்றிருந்தால் அவன்தான் என்று பாடலாம்.

 வெளியேறு!

இன்று காணும் தென்பெருங்கடல்,

முன்னாள் முற்றமிழ்க் கழகம் இருந்த

குமரி நாடு! இன்னும் கூறுவேன்;

இந்நாள் ஆரியர் இருக்கும் நாடு

முன்னாள் தமிழ்கமழ் முல்லைக்காடு!

தெலுங்கம், கன்னடம், கேரளம், வங்கம்

எனும் பெயர் உடையவை எலாம் தமிழகமே!

கொடுங்கடல் கொண்ட குமரி தொடங்கி

பனிவரை வரைக்கும் பேரந்த தமிழகம்

உமதெனில் நாட்டில் உமக்குள உரிமையும்

உமக்குள பொறுப்பும் ஒருவர்க்கும் இல்லை

உணர்வினால் உம்மை நோக்குக! நீவிர்

மாடோட்டி வந்த நாடோடிகளா?

ஒரு குடிக் குரிய வாழ்வின் உட்புகுந்து

கலகம் விளைத்துப் பிழைக்கும் கயவரா?

இல்லை, இல்லை இம்மியும் இல்லை!

"என்கீழ்த் தமிழகம் இருக்க வேண்டும்"

என்னும் கீழ்மகன் தன்னை, அவனின்

காலடி நத்தும் கடைய னோடு

வெளியேறு நாட்டை விட்டென்று

‘பளீர்' என்று சொல்லுவீர் பச்சைத் தமிழரே

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (‘குயில்‘, 17.6.1958)


பெரியாரின்மீது அன்பு கொண்ட மக்கள் கடலென வாழ்த்தொலி எழுப்பிக் கொண்டு ஊர்வலத்தில் வருகின்றனர். இதனையே கவிஞர் ‘அன்பு மக்கள் கடலின் மீது‘ என்று குறித்தார். மின்சார ஒளிகளாலும் பல வண்ணங்களையுடைய மலர் மாலைகளாலும் வேயப்பட்ட சப்பரம் அதாவது சிறுவண்டி தங்கத் தேராகக் காட்சி அளிக்கின்றது. அதன்மீது அறிவுத் தேக்கமாகப் பெரியார் உட்கார்ந்திருக்கின்றார். அறிவாகிய நீர் தேங்கியுள்ள தேக்க (Reservoir) மாகப் பெரியார் வீற்றிருக்கின்றார். ‘அறிவுத்தேக்கம்‘ என்ற சொற்றொடராட்சி எளிதானவை அல்ல. மிக எளிமை யாகவும் சுருக்கமாகவும் அமைந்த சொல்லாக்கத்தை இங்கு நம்மால் காண முடிகின்றது.

அடுத்து பாடுகின்றார்:

    மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
    வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு
    மிக்க பண்பின் குடியிருப்பு
    விடுதலைப் பெரும் படையின் தொடுப்பு - அவர்தாம் 

மலிவான புத்தகப் பதிப்புகள் போல எல்லா மக்களும் காண்பதற்கும் உரையாடுவதற்கும் எளிமையுடையவராகவும் இனிமையுடையவராகவும் இவர் விளங்குகின்றார். ஆனால் வஞ்சக எண்ணம் கொண்டவருக்கு இவர் எளிமையுடையவரன்று - கொடிய நெருப்புப் போன்றவராக உள்ளார். மேலும் இப்பாட்டடிகளில் ஒரு கருத்து மிகச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. ஆளுமை உடைய தலைவர்கட்கு இரண்டு இயல்புகள் இருக்க வேண்டும். காட்சிக்கு எளியவராகவும் கடுஞ்சொல் பேசாதவராகவும் இருக்க வேண்டும். ஆனால் பகைவர்க்குக் கடுமையுடைய வராக இருக்க வேண்டும். இந்த இரு இயல்புகளே ஆளுமையின் இயல்புகள் என்று அற நூல்கள் கூறுகின்றன. இங்கே மக்கள் நெஞ்சில் பெரியார் மலிவுப் பதிப்பாகவுள்ளார் என்றதனால் அவருடைய எளிமையை அறிந்து கொள்ளுகின்றோம். அதே சமயத்தில் வஞ்சக எண்ணமுடையவருக்கு மிகக் கொடிய நெருப்பாகவும் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் விளங்குகின்றார் என்றதனால் பெரியாரின் கடுமை இயல்பைக் குறித்ததாக அறிகின்றோம். மிக்க பண்பின் குடியிருப்பு என்பது மிக ஆழமும் அழுத்தமும் கொண்ட சொற்றொடராட்சியாகும். சிறந்த மனிதருக்கு இருக்க வேண்டிய மிகச் சிறந்த பண்புக் கூறுகள் அவ்வளவும் பெரியாரிடத்தில் குடிபுகுந்துள்ளன என்று குறிப்பிடுகின்றார். தீய பண்புகளைத் தமக்கு இருப்பிடமாக ஆக்கிக் கொண்ட தலைவர்கள் சில சமயத்தில் நல்ல பண்புடையவராகவும் காணப்படுதல் உண்டு. அது போலல்லாமல் தீய பண்புகளுக்குத் தம்மிடத்தில் இடமேயில்லை என்று சொல்லுமளவுக்கு சிறந்த மனிதருக்கு இருக்க வேண்டிய நல்ல பண்புகள் அவ்வளவையும் தமக்குள் குடியிருப்பாக இருக்கும்படியாக ஆக்கிக் கொண்டவர் பெரியார் என்ற கருத்தும் இவ்வடிகளில் பொதிந்து கிடப்பதைப்பாருங்கள். உலக முழுவதிலும் விடுதலை பெறத் தோன்றிய பெரிய படை வரிசையாம் சங்கிலியில் ஒரு ஒப்பற்ற வளையமாகவுள்ளார் என்பதை "விடுதலைப் பெரும் படையின் தொடுப்பு" என்றார்.

    தில்லி எலிக்கு வான் பருந்து
    தெற்குத் தினவின் படை மருந்து
    கல்லாருக்குக் கலைவிருந்து
     கற்றவர்க்கோ வண்ணச் சிந்து - அவர்

மத்திய ஆட்சியென்ற பெயரில் தில்லியில் விளங்கும் இந்திய நாட்டின் அரசமைப்பு எலியாக இருக்கின்றது. எலி வஞ்சக இயல்பையே தனக்கு வாழ்வாக உடையது. அது உழைப்பதில்லை பயிரிடுவதில்லை, களையெடுப்பதில்லை, எதுவும் செய்வதில்லை. உழவன் வருந்தி உழைத்துப் பயிரிடுகின்றார். அது நன்றாக விளைந்து முதிர்ந்து இருக்கும் சமயத்தில் கதிர்களைக் கொய்து கொண்டு போய்த் தனக்கு உணவாக வைத்துக் கொள்கின்றது.  இதனைப் போன்று மத்திய அரசு மாநிலங்களின் தன்மைகளை நடுவு நிலையில் இருந்து கொண்டு நாடுவதில்லை. மாநிலங்களின் ஆக்கத்திற்குப் பயன்படுவதில்லை. அதே சமயத்தில் மாநிலங்களின் கொழுத்த வருவாய்கள் அவ்வளவையும் வஞ்சகமாக உதவுவது போலப் பாசாங்கு செய்து கொண்டு கோடி கோடியாகக் கொள்ளை கொண்டு போய் விடுகின்றது. இந்த இயல்புகள் நன்கு விளங்கத் "தில்லி எலி" என்றார். அதாவது தில்லி ஆட்சியை - மத்திய ஆட்சியை எலியாக உருவகம் செய்துள்ளார். இத்தகைய தில்லி ஆட்சிக்குப் பெரியார் வான் பருந்தாக வட்டமிட்டுப் பறந்துகொண்டு தமிழ் மாநிலத்தின் வருவாய்களைக் கொள்ளைக் கொண்டு போகாமல் காக்கும் கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றார். மிகச் சுருங்கிய செற்றொடர்களான இவ்வோரடியால் பெரியார் இயல்பு பளிச்சென விளங்கப் பாடுதல் என்பது எளிதான ஒன்றல்ல. முதலில் பெரியாரோடு ஒன்றிய உச்சம் வேண்டும். அத்துடன் அவரியல்புகளில் தோய்ந்து திளைத்துப் பாடும் திறம் வேண்டும். இந்த இரண்டு இயல்புகளையும் முற்றாக முழுவதுமாகக் குறைவின்றிப் பெற்றவர் புரட்சிக் கவிஞர் ஒருவரே என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

 "விடுதலை" பற்றி புரட்சிக் கவிஞர்

முக்கியமாகத் தமிழ்ப் பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள்கள் விட ஆசைப்படுகிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்று தான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன்மைக்குப் பாடுபடுவது. காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல. ஒட்டுக் கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங்காங்கே கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்க வேண்டும். எல்லாத் தமிழர்களும் தமிழர்களுக்குப் பிறந்த தமிழர்களும் தி.க.வில் உறுப்பினராக வேண்டும்.

இரண்டாவதாக ‘விடுதலை' பத்திரிகையை ஒவ் வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றப் பார்ப்பன ஏடுகளை மறந்து கூட எவரும் வாங்கக் கூடாது. அவை நமக்கு துரோகம் இழைப்பவையாகும். தமிழர்களுக்காக, தமிழர்களின் கல்வி உத்தியோக நியமனத்துக்காகப் பாடுபடும் ஏடு ‘விடுலை' ஒன்றுதான். எனவே விடுதலையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

மூன்றாவதாக ‘குடிஅரசு', ‘விடுதலை' மற்றும் பகுத்தறிவு வெளியீடுகளான பார்ப்பனப் பித்தலாட்டங் களை விளக்கும் நூல்களும் மற்றும் பல நூல்களும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன அதனை வாங்கி யாவரும் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.

(10.5.1958இல் லால்குடியில் நடைபெற்ற வட்டச்சாதி ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து)

- ‘விடுதலை', 18.5.1958

‘தெற்குத் தினவின் படை மருந்து' தென்னாட்டைப் பிடித்துள்ள, ஓயாமல் அரிப்புணர்வைக் கொடுத்துக் கொண்டிருக்கும் படரும் இயல்புள்ள படை நோய்க்கு மருந்தாகப் பெரியார் இருக்கின்றார். படை மருந்து என்பதை நோய்க்கு மருந்து என்பது போலக் கொள்ள வேண்டும்.நோய்க்கு மருந்தென்பது நோயைப் போக்குவதற்கு மருந்து என்று தாம் கொள்ளுவதுபோல படைநோய்க்கு மருந்தாக உள்ளார் என்று காணவேண்டும். தென்னாட்டில் பரவி நிலைத்துள்ள மூடப் பழக்கங்களையே "தினவின் படை" என்றார்.

    கல்லாருக்குக் கலை விருந்து
    கற்றவர்க்கோ வண்ணச் சிந்து

இவ்வடிகள் பெரியாருடைய பேச்சின் இயல்பைக் குறிக்கின்றன. பெரியாரின் உரையைப் படித்தறியாத மக்கள் நன்கு அனுபவித்து மணிக்கணக்கில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். படித்தறிந்த பெரியவர்களும் அதற்கும் மேலாகப் பெரியார் பேச்சைக் கேட்டுத் தெரியாதன எல்லாம் தெரிந்து கொண்டோம் என்று மகிழுவார்கள். இசைவண்ண முடைய சிந்துப் பாடல்களைப் பாடுவார் பாடினால் எல்லோரும் அந்த வண்ணமாக மயங்கிக் கேட்பது போல் பெரியாருடைய உரையானது படியாதவர்க்கும் படித்தறிந்தவர்கட்கும் பேரின்பத்தை நல்கும் என்பது கருத்து.

இராமலிங்க அடிகளார் "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே" என்று இறைவனைப் பாடியது போலப் புரட்சிக் கவிஞர் பெரியாரைப் பாடியுள்ளார். அடிகளாருக்கு இறைவன் எப்படித் தோன்றுகிறானோ அப்படியே அணுவும் பிசகாமல் புரட்சிக் கவிஞருக்குப் பெரியார் தோன்றுகின்றார்.

    சுரண்டுகின்ற வடக்கருக்குச்
    சூள் அறுக்கும் பனங்கருக்கு
    மருண்டு வாழும் தமிழருக்கு
    வாழவைக்கும் அருட்பெருக்கு

பெரிய பெரிய வட்டிக்கடைகளை வைத்துக் கொண்டும், வணிக நிலையங்களை வைத்துக் கொண்டும் தென்னாட்டுச் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டு போகும் வடநாட்டவருக்கு அவர்களுடைய சுரண்டும் கொள்கையை அறுத்தெறியும் பனை மட்டையின் கருநிறமுடைய ரம்பம் போன்ற வாளாகவுள்ளார் பெரியார். வடவர் சுரண்டலைக் கண்டு செய்வதறியாது மருண்டு வாழும் தமிழர்களை வாழ வைக்கும் அருளுள்ளம் கொண்டவராக உள்ளார் பெரியார் என்பது கருத்து.

    தொண்டு செய்து பழுத்த பழம்
    தூய தாடி மார்பில் விழும் 
    மண்டைச் சுரப்பை உலகு தொழும்
    மனக் குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம்

பெரியாரின் வயது சென்ற நிலையைக் குறிக்க "பழுத்த பழும்" என்றார். நன்றாக முற்றிய பின் பழுத்த பழம் போலப் பெரியார் உள்ளார். இப்படி வயது ஆகி பழுத்த பழமாக இருப்பது எல்லோருக்கும் இயல்புதான். இதில்ஒன்றும் புதுமை இல்லை. ஆனால், பெரியார் எப்படிப் பழுத்த பழமானார் என்றால் மக்களுக்கு நாள்தோறும் தொண்டு செய்தலாகிய பணியைத் தொய்வில்லாது செய்தே பழுத்த பழமானார். எல்லோரும் அப்படி இருக்க முடியாது. இவர் என்ன செய்தார் என்றால் இவர் உண்டார்; உறங்கினார்; ஊர் சுற்றினார்; தொடர்ந்து இதனையே செய்து கொண்டிருந்தார். இப்போது பழுத்த பழம் போலக் கிழமானார் என்றுதான் பலர் வாழ்கின்றனர். இப்படி வாழும் மக்களிடையே பெரியார் தொண்டு செய்தே பழுத்த பழமானார் என்ற சிறப்பை வேறுபடுத்திக் காட்டிப் பாடியுள்ள அழகைப் பாருங்கள்.

 நான் தருகிறேன், பணம்

"பராசக்தி படத்தில்", "வாழ்க வாழ்கவே வளமார் நமது திராவிட நாடு" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடலை முதல் பாடலாக ஒரு நடனத்துக்கு அமைக்கலாம் என்று ஒரு கருத்து எடுத்துச் சொல்லப்பட்டபோது, அந்தப் பாடலை இந்தப் படத்துக்கு உரிமையாக எழுதித் தருவாரா என்ற கேள்வியும் எழுந்தது.

நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு புரட்சிக் கவிஞரை சந்திக்க புதுவைக்குச் சென்றேன். புரட்சிக் கவிஞரை சந்தித்து இதை எடுத்துக் கூறினேன்.

புரட்சிக் கவிஞர் தன்னுடைய விழிகளை அகல விரித்து என்னைப் பார்த்தார். நான் அந்தப் பாடலுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன்.

உண்மையிலே அந்தப் பாட்டை அந்தப் பாடத்தில் வைக்கப் போகிறார்களா?" என்று கேட்டார்.

நான்தான் உரையாடலை எழுதுகிறேன். வைக்கத் தான் கேட்கிறேன்? என்று சொன்னேன்.

அப்படி வைப்பதாக இருந்தால் அவர்கள் ஒன்றும் எனக்குப் பணம் தர வேண்டாம். நான் தருகிறேனப்பா பணம் என்று புரட்சிக் கவிஞர் சொன்னார்.

காரணம் திராவிட நாடு அல்லது திராவிடர் இயக்கக் கொள்கை என்ற ஒரு சொல் நம்முடைய படங்களிலே அன்றைக்கு வருவதற்கு அவ்வளவு சிரமம் இருந்தது

- கலைஞர் சென்னை பெரியார் திடலில் 

கழக சார்பில் நடந்த புரட்சிக் கவிஞர் விழாவில் பேசியதிலிருந்து (1982)


பெரியாருடைய மூளையில் உதித்த சிந்தனைகள் உலகத்தவர்கள் ஏற்றுக்கொள்ளும் தகுதி வாயந்தவை யென்பதைக் குறிக்க "மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்று குறித்தார். உலகத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பெரியார் சிந்தனைகளை ஆய் கின்றவருக்குப் பட்டங்கள் வழங்கியுள்ளன. இப்போது நிகழும் இச்சிறப்பைப் புரட்சிக் கவிஞர் முன்கூட்டியே பாடியுள்ள அழகைப் பாருங்கள்!

மூடப்பழக்கவழக்கங்களைச் சாடும்போதும் ஆதிக்கக்காரர்களின் ஆதிக்கவுணர்வுகளைச் சாடும்போதும் சிறுத்தை உறுமுவது போலச் சினத்தோடு உரையாற்றும் துடிப்பைப் பெரியாரிடம் காணுகின்றோம். 

இறுதியில் முடிவாக இவ்வளவையும் நான் கூற வில்லை. நாட்டுப்புறத்தான் தன்னுடைய மனைவிக்கு அறிமுகம் செய்யும் தன்மையில் கூறினான் என்று அவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்துகின்றார்.

    தமிழர் தவம் கொடுத்த நன்கொடை
    தன்மானம் பாயும் தலை மேடை
    தமக்குத் தாண்டி அந்த வாட்படை
    தமையவரின் போருக்கு ஒப்படை

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழின மக்கள் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அரசிழந்து ஆதிக்கம் வீழ்ந்து சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழுகின்றார்களே! இவர்களின் இருண்ட வாழ்வை ஒழிக்கும் ஒரு பெருமகன் தோன்ற மாட்டானா என்று காலந்தோறும் பலர் எண்ணம் கொண்டேயிருந்தனர். தொடர்ந்து எண்ணி வந்த எண்ணங்களுக்கு ஒரு நன்கொடை வழங்கியது போலப் பெரியார் தோன்றியுள்ளார். இக்கருத்தை விளக்கவே "தமிழர் தவம் கொடுத்த நன்கொடை" என்றார். மனிதன் ஒவ்வொருவரும் தன் மானத்துடன் வாழவேண்டும். சுயமரியாதையை இழந்து வாழ்தல் கூடாது என்ற தன்மான உணர்வை முதல் முதலில் உலகில் பாயவிட்ட முதல் மேடையாகப் பெரியார் விளங்குகின்றார். இதனையே "தன்மானம் பாயும் தலைமேடை" என்றார். 

நமக்கு ஏற்பட்டுள்ள எல்லாக் குறைகளையும் போக்கும் வாட்படையாக உள்ளார் பெரியார். ஆகவே அவர் தொடங்கும் போர் ஒவ்வொன்றிலும் தம்மைத்தாம் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை தமக்குத் தாண்டி அந்த வாட்படை என்றும் "தமையவரின் போருக்கொப்படை" என்றும் பாடி யுள்ளார். இந்த அரிய பாடலினைப் பலமுறை வாய் விட்டுப் பாடிச் சிந்தியுங்கள். தமிழர்களாக வாழ வழி பிறக்கும்.

No comments:

Post a Comment