பெட்ரோல் டீசல் விவகாரம்: மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

பெட்ரோல் டீசல் விவகாரம்: மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்

 பிரதமர் மோடிமீது கேரள முதலமைச்சர் தாக்கு!

திருவனந்தபுரம்,ஏப்.29- மக்கள் படும் துன்பங்களை மறைக்க மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் போது, எரிபொருள் மீதான வரியை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதமே ஒன்றிய அரசு குறைத்துவிட்டதாக தெரிவித்தார்.ஆனால் மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரியை குறைக்காமல் இருப்பதால் அம்மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து சிரமம் அடைந்து வருவதாக அவர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எதிர்க்கட்சி ஆளும் முதல மைச்சர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசே காரணம் என்று தெரிவித்தனர்.மாநிலங்கள் மீது குறைக்கூற மோடி வெட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 2014ஆம் ஆண்டில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு பெட் ரோல், டீசல் விலை மீதான கலால் வரி அடுத்தடுத்து உயர்த்தப்பட்டதே தற்போதைய விலை உயர்வுக்கு காரணம் என்றார். கடந்த 6 ஆண்டுகளாக கேரள அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனை வரியை உயர்த்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை தராமல் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டாட்சி தத்துவதற்கு எதிராக பிரதமர் மோடி தான் செயல்படுவதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதே கருத்தை தமிழ்நாடு, மேற்கு வங்கம், தெலங்கானா முதலமைச்சர்களும் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment