“இல்லை என்பவன் யாரடா தில்லை வந்து பாருடா” என்ற கூக்குரலுக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

“இல்லை என்பவன் யாரடா தில்லை வந்து பாருடா” என்ற கூக்குரலுக்கு

“இல்லை என்பவன் நானடா, தில்லை கண்டுதானடா”
என ஆதிக்கத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர் புரட்சிக்கவிஞர் 
இளைஞர் அனைவரும் புரட்சிக்கவிஞரின் துணிவை பெறவேண்டும்  

பழம்பெரும் புலவர்கள் ஆதிக்கக் காவலர்கள் என்பவர்களை எல்லாம் புறமுதுகிடச் செய்த புரட்சிக்கவிஞர் போன்று தமிழின இளைஞர் அனைவரும் துணிவு பெற்றெழ வேண்டும் என்று 

தந்தை பெரியார் அவர்கள்  அறி வுறுத்தினார்.

தந்தை பெரியார் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இக்கூட்டமானது நமது பகுத்தறிவு புலவர் பாரதிதாசன் அவர்களின் நினைவு விழா கூட்டமாகும். பாரதிதாசன் அவர்கள் இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பகுத்தறிவுவாதி, சீர்திருத்தவாதி. அவர் பகுத்தறிவுவாதியாக இருந்து பல பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். அவரைப் பற்றிப் பேசுவதோடு அவரது கொள்கைகளை பரப்புவதும் அவசியமாகும்.

பிறந்தநாள் விழாக்கள் ஏன்?

நாட்டில் யாருக்கும் பிறந்த நாள் விழா, நினைவு நாள் விழா கொண்டாடுவதன் நோக்கம் எல்லாம் அவரது கொள்கைகளைப் பரப்பவேயாகும். கடவுள்களுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது என்பது  சிறிது அறிவு இருப்பவர்களுக்கும் கூட அது புரட்டு என்று தெரியும் என்றாலும் விழாக்களை  கொண்டாடுவதன் மூலம் மடமையை மூடநம்பிக்கையை பரப்பவே ஆகும் - அவர்களை பெருமைபடுத்துவதற்கு அல்ல.

நமது விழாக்களின் நோக்கம் 

அது போல நாம் விழாக்கள் கொண்டாடுவது மக்களை அறிவாளிகளாக ஆக்குவதற்காகவேயாகும். நண்பர் பாரதிதாசன் நமது இயக்கத்தில் சேர்ந்த பின்பு சிறந்த கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொன்னார். நாம் மக்கள் உயர்ந்த அறிவு பெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகின்றோம். மக்களின் மடமையை போக்குவதற்கு பகுத்தறிவை ஏற்படுத்துவதற்கு நம்நாட்டில் யாராவது பாடுபட்டார்கள் என்றால் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சித்தார்த்தன் என்பவர் அறிவை முன்வைத்து பாடுபட்டார்.

 அறிவின் பெருமை 

அறிவை முன் வைத்து பாடுபட்டதால் புத்திக்கு முதன்மை கொடுத்ததால் அவரை புத்தன் என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர். அவரை பின்பற்றியவர்களை எல்லாம் எதிரிகள் மூட நம்பிக்கையை வளர்த்து  அழித்து ஒழித்து விட்டனர். அதன்பின் உறுதியான பகுத்தறிவுவாதி என்று எவனும் தோன்றவே இல்லை. தோன்றியவனெல்லாம் மக்களின் மடமையை முட்டாள்தனத்தை நிலைநிறுத்த பாடுபட்டவனேயாவான்.  அவனுக்கு பெயர்தான் மகான், மகாத்மா, ஆழ்வார், நாயன்மார்கள், ரிஷிகள் என்பவர்கள் யாவரும் ஆவர்.

புரட்சிக் கவிஞனின் துணிவு 

ஒரு சிலர் பகுத்தறிவைப் பற்றி பாடி இருக்கிறார்கள் என்றாலும் அதோடு மூடநம்பிக்கைகளும் கலந்து இருக்கின்றன. அவர்கள் வீட்டிலிருந்து சொன்னார்களே தவிர வெளியில் வந்து தொண்டு செய்யவில்லை. இந்நாட்டில் பாரதிதாசனைப் போன்றவர்களை ஏன் பாராட்டுகிறோம் என்றால் துணிந்து வெளியே வந்து கருத்துக்களை எடுத்துரைத்தார். நேற்று நாம் ராமனையும் கந்தனையும் செருப்பால் அடி என்று சொன்னோம். 40 வருடங்களுக்கு முன்பே அவர் சிறீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்து பிளந்தெறிய வேண்டும் என்று பாடியிருக்கிறார். செருப்பால் அடித்தால் கடவுள் உருவம் இருக்கும் அந்த உருவமே தெரியாத வகையில் பீரங்கி வைத்து உடைத்தெறிய வேண்டும் என்றார் “இல்லை என்பான் யாரடா தில்லையிலேயே வந்து பாருடா” என்று எவனோ ஒரு ஆஸ்திகன் பாடினான்

“இல்லை என்பவன் நானடா “

அதற்கு பதிலாக “இல்லை என்பவன் நானடா தில்லை கண்டு தானடா” என்று துணிந்து பதில் சொன்னார். நம் நாட்டில் புலவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காக புலவர்களாக இருக்கிறார்களே தவிர பழைமைகளுக்கு உரை எழுத கூடியவர்களாக இருக்கிறார்களே தவிர தங்கள் கருத்துகளை, புதுமை கருத்துகளை எடுத்துச் சொல்வது கிடையாது.”நாடு முற்றும் கோயில்கள்” ஆவதற்கு சாஸ்திரங்கள்  சம்மதிக்கும் - பள்ளிகள் வைத்து அறிவை வளர்க்க சாஸ்திரங்கள் இடம் தராது என குறிப்பிட்டு இருக்கிறார்கள். நம்மவர் கோயில் கட்டுவது தான் செய்தற்கரிய பெரும் தருமமாக கருதி  கோயில்களை கட்டி நம் மக்களையே மடையர்களாகும்படி செய்துவிட்டனர்.

 கோயில் கட்டுவதும் நம்மவன்தானே 

அவன் சோம்பேறி பயல் பாடுபட்டு கட்டினால் தானே அவனுக்கு தெரியும்? எந்த பார்ப்பானும் கோயில் கட்டியது கிடையாது கட்டுவதற்கு பணம் செலவிடுவது கிடையாது அதிலிருந்து வருவாய் பெற்று வயிறு வளர்ப்பானே தவிர அவனொன்றும் அதற்காக செலவிட மாட்டான்.  நாட்டில் வண்டி வண்டியாக பிணம் சென்றாலும் பார்ப்பான் என்ன செய்வான் என்றால் இதில் எவனெல்லாம் திவசம், கருமாதி செய்வான் என்று தான் பார்ப்பான் அதனால்தான் அவன் பார்ப்பான் என்றார்.

 கூடுமானவரை அவர் புதிய கருத்துக்களை எடுத்துச் சொல்வார் அவருக்கு நாம் நிறைய விளம்பரம் கொடுத்து பெருமைப்படுத்த வேண்டும். அவரது கருத்துக்களை நம் இளைஞர்கள் பரப்பவேண்டும் 

மகான்களின் முட்டாள்தனம் 

நம் நாட்டில் விளம்பரப்படுத்தப்பட்ட வர்கள் எல்லாம் புராணம் மூடநம்பிக் கைகளை பரப்பியவர்களையாகும். நமக்குத் தெரிய ராமகிருஷ்ணர் விவேகானந்தர் என்பவரெல்லாம் மூட நம்பிக்கைகளை பரப்பியவர்கள். பகுத்தறிவு கருத்துக் களுக்கும் எண்ணங்களுக்கும் முட்டாள் தனமான சமாதானம் சொன்னவர். அவரை சிலர் (பார்ப்பனர்) விளம்பரப்படுத்தி மகான்கள் ஆக்கிவிட்டனர். இம்மாதிரி தான் அரவிந்தர் ரமணரிஷி, சாய்பாபா பன்றிமலை, வள்ளிமலை விபூதி வீரமுத்து, கிருபானந்தவாரியார் என்பவர்கள் யாவரும் அவர் ஒரு மனிதனின் அறிவு அறிவற்ற தன்மை மடமை முட்டாள்தனம் நீங்க வேண்டும் என்று பாடுபடவில்லை, மூட நம்பிக்கையை கடவுளை- மதத்தை ஜாதியை புகுத்த பாடுபட்டார்கள் என்பதோடு இந்த திமுக ஆட்சி தோன்றுகிற வரை இருந்த ஆட்சிகள் அனைத்தும் அதற்கு ஆதரவாக அவைகளை வளர்க்கக்கூடிய ஆட்சிகள் ஆகவே இருந்தன.

 கழகத்தின் தீவிர கொள்கை 

2500 ஆண்டுகளுக்குப் பின் புத்தன் துவக்கியதை விட தீவிரமாக நாம்தான் இயக்கம் தோற்றுவித்து இருக்கின்றோம். நாம் எப்படி தீவிரமாக நடந்து கொள்கிறோம் என்றால் கடவுளை செருப்பாலடிக்கின்றோம். 

கடவுள்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்கின்றோம். புத்தன் கடவுளை மதத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. அறிவைக் கொண்டு எதையும் சிந்தியுங்கள். 

முன்னோர்கள் சொன்னார்கள் என்ப தற்காக ஏற்றுக் கொள்ளாதே - வெகு காலமாக இருந்து வருகிறது என்பதற்காக எதையும் ஒப்புக் கொள்ளாதே உன் அறி வைக் கொண்டு சிந்தித்து எதையும் ஏற்றுக் கொள் என்றுதான் சொன்னார்.

 புரட்சிக்கவிஞர் விழாவின் நோக்கம் 

பாரதிதாசனுக்கு நாம் விழா எடுக்கிறோம் என்றால் நம்முடைய வளர்ச்சிக்காகவேயாகும். உலகில் வளர்ச்சியடையாமல் ஒரு மாறுதலும் இல்லாமல் தேங்கிக் கிடக்கிற சமுதாயம் நாம் ஒருவர் தான். உலகில் இரண்டாவது ஜனசங்கைக் கொண்ட நாம் ஒருவர் தான் வளர்ச்சியடையாத காட்டுமிராண்டி நிலையிலிருக்கின்றோம். வெள்ளைக்காரன் இந்நாட்டிற்கு வராதிருந்தால்   நெருப்புக் குச்சி கூட நமக்கு கிடைத்திருக்காது. ரயில், விமானம், மோட்டார் மற்றும் இந்த விஞ்ஞான சாதனங்கள் எதுவுமே நமக்கு கிடைத்திருக்காது.

 சுயமரியாதை  இயக்கத்திற்கு முன்பு 

நமது இயக்கம் தோன்றுவதற்கு முன் நாடு முழுவதும் சனாதன தர்ம சபை, வருணாசிரம தர்ம சபை என்று ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.  படிப்பதெல்லாம் பாராயணம் செய்வதெல்லாம் இராமாயணம், பாரதம். கீதை இவைகள்தான் - சங்கீதமெல்லாம் ராமன், கிருஷ்ணன், முருகன் இவன்களை பற்றிய பாடல்கள் தான் புலவனுக்கு என்ன வேலை என்றால் ராமாயணம், பாரதம், கீதை ஆகியவைகளுக்கு கருத்துரை, நுண்பொருள் உரை, பதவுரை எழுதுபவர்களாக தான் இருந்தார்கள்.  சதுர் ஆடுகிற தேவடியாள்கள் கண்ணன் என்னை  இப்படி பிடித்தான், இப்படி அணைத்தான், சடையை இழுத்தான் ஆரத்தழுவி அணைத்தான், முத்த மிட்டான் என்பவைகளைத் தான் பாவத் தோடு ஆடி காட்டுவார்கள்.

கடந்த கால நாடகங்கள் 

நாடகங்கள் என்பவைகள் எல்லாம் ராமாயணம், பாரதம் பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் போன்றவைகள் தான். கதாகாலட்சேபங்கள்தான் இப்படி எதை எடுத்தாலும் மூடநம்பிக்கையை வளர்ப்பவை களாகவே இருந்தன. பார்ப்பான் மேல் இப்படி ஏற்பட்ட வெறுப்புதான் இப்போது கடவுள் மேல் திரும்பியுள்ளது. எவனுக்கோ  உயிர் எங்கோ இருக்கு என்று கதை சொல்வார்களே அது போல் பார்ப்பனர் இருக்கிற இடம் கடவுளானதால் பார்ப்பானை ஒழிக்க கடவுளை ஒழிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நமது இயக்கம் தோன்றி தொண்டாற்றிய பின்தான் நாம் ஏன் ஈன ஜாதி என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதன் காரணம் தான் நமது மக்கள் தங்கள் இழிவைப் போக்கிக்கொள்ள கடவுள், மதம், ஆகியவைகளைக் கண்டிக்க முதற்பட்டுள்ளனர். கண்டிப்பதை பொறுத்துக் கொண்டிருக்கின்றன. 

நம் எதிரியான காமராஜரே தோல்விக்கு காரணம் (இன) ஜாதி உணர்ச்சி என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உணர்ச்சி வளர வளர கோயில்கள் தானாகவே இடிபடும் பாப்பான் சொல்லாமலே இந்நாட்டை விட்டு போய் விடுவான்.

ஒவ்வொரு இளைஞரும் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை படிக்க வேண்டும். பகுத்தறிவு வாதிகளாக வேண்டும். பாரதிதாசன் கவிதைகளிலுள்ள தீவிரமான கருத்துக்களையெல்லாம் எடுத்து சிறிய புத்தகமாகப்  25 காசு விலையில் போட்டு மக்களிடையே பரப்ப வேண்டும்.

நமக்குள் ஆயிரம் பிரிவு

இன்றைக்கு நாம் 1000 பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றோம். நாமெல்லாம் ஒன்றுபட பகுத்தறிவால்தான் முடியும் பகுத்தறிவாளர் கழகம் என்பது அதற்காகவேயாகும். தமிழர் சமுதாயம் பெரிய சமுதாயம் பிரிவுபட்டுக்கிடக்கிற சமுதாயம் ஒன்று பட வேண்டும்.

இவ்வாறு தந்தை பெரியார் அறிவுறுத்தினார். 

விடுதலை, 20.5.1971


No comments:

Post a Comment