கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் உரை

சென்னை கலைவாணர் அரங்கில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடைபெற்ற கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார். முன்னதாக தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி  ஜி.எம்.அக்பர் அலி, தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர்,  முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் உடனிருந்தனர். (30-04-2022)

சென்னை,ஏப்.30- திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்றும், நாளையும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டினை இன்று (30.4.2022) காலை கலைவாணர் அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

திமுக மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான‌ சி.வி. எம்.பி.எழிலரசன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று நினைவுப்பரிசினை வழங்கி சிறப்புச் செய்தார்.

கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாட்டைத் தொடக்கிவைத்த‌ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது தொடக்கவுரையில், "இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டி ருக்கும் சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னெடுக்கும் முதன்மையான பணியை இந்த மாநாடு மேற்கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுக் காட்டி அரங்கு நிறைந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

"ஒன்றிய அரசு திணிக்கப் பார்ப்பது தேசியக் கல்விக் கொள்கை  (National Education Policy)  அல்ல, அது  No Education Policy  அதனால்தான் தமிழ்நாடு அதனை முழு வீச்சோடு எதிர்க்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் தந்து தொடங்கப்பட்டது நீதிக்கட்சி. உலகின் எந்த நாட்டிலும் கல்வி மறுக்கப்பட்டதில்லை. எத்தகைய அடிமை முறை இருந்தபோதும், கல்வி கற்றால் தண் டனை என்ற கொடுமை இல்லை. ஆனால், இந்த நாட்டில் தான் வர்ணாசிரமத்தின் பேரால் கட்டைவிரல் வெட்டி வாங்கப்பட்டது. அந்த நிலை தொடரக் கூடாது என்பதற்காகத் தான் இந்த மாநாடு" என்று எடுத்துக் காட்டிய தமிழர் தலைவர், "அத்தகைய தெளிவைத் திராவிடர் இயக்கம் ஊட்டிய காரணத்தால் தான், 'தமிழர்களை ஒரு போதும் உங்களால் ஆள முடியாது' என்று பா.ஜ.க.வினரைப் பார்த்து இந்திய நாடாளுமன்றத்தில், காங் கிரஸ் கட்சித் த‌லைவர் ராகுல் காந்தி முழக்கமிடுகிறார்.

இருபால் இளைஞர்களும் மாணவர்களும் கூடியிருக்கிற இந்த அவைக்குச் சொல் கிறேன், "நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்" என்பது வெறும் உற்சாகமூட்டுவதற்காகச் சொல்லப்பட்ட தல்ல, இந்த இயக்கத்திற்கு எப்போதும் வெற்றி தான் என்பது வரலாறு. 1937, 1938‍இல் இந்தியைத் திணித்த ராஜாஜியை எதிர்த்து தந்தை பெரியார் பெரும் போராட்டத்தை மேற்கொண்டார். அதே ராஜாஜியை 1965, 1966ஆம் ஆண்டுகளில் 'இந்தி நெவர், இங்கிலீஷ் எவர்' என்று அண்ணாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து சொல்ல வைத்தது திராவிட இயக்கம்" என்று எழுச்சியுரை ஆற்றி தொடங்கி வைத்தார்.

முதலாம் அமர்வில் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 7-ஆம் அட்டவணை  ஒரு மறுபார்வையும், கல்விக் கொள்கைகளில் மாநில சுயாட்சியும் எனும் தலைப்பில் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உரையாற்றினார்.

திராவிட மாடல் ஆட்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் எனும் தலைப்பில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர்,  முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் உரையாற்றினார்.

இரண்டாம் அமர்வில் காவிமயமாகும் கல்வி நிறுவனங்கள் எனும் தலைப்பில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் அய்.இளங்கோவன் உரையாற்றினார்.

இந்திய ஒன்றியமும் கூட்டாட்சித் தத்துவமும் எனும் தலைப்பில் தெலங்கானா மாநில திராவிட சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர் பி.சிறீகாந்த் சுமித் உரையைத் தொடர்ந்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி பங்கேற்று  சிறப்புரையாற்றினார்.

தேசிய கல்விக்கொள்கை-ஒரு பாசிச நோக்கம் எனும் தலைப்பில் கல்வியாளர் சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் அனில் சத்கோபல் உரையாற்றினார்.

தேசிய தேர்வு முகமை: நீட், க்யூட் நுழைவுத் தேர்வுகளும், அதன் பின்னுள்ள மர்மங்களும்- விளிம்பு நிலை மாணவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களும் எனும் தலைப்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.


No comments:

Post a Comment