பெரியார் பெருந்தொண்டர்களாக, பெரியாரின் கொள்கையை ஏற்றவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

பெரியார் பெருந்தொண்டர்களாக, பெரியாரின் கொள்கையை ஏற்றவர்கள்

 பொதுத் தொண்டின் இலக்கணமாக திகழ்கிறார்கள்; இதுதான் பெரியாருக்குப் பெருமை!

செங்கல்பட்டு முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

தஞ்சை, பிப்.28    பெரியார் பெருந்தொண்டர்களாக, பெரியாரின் கொள்கையை ஏற்றவர்கள் பொதுத் தொண்டின் இலக்கணமாக திகழ்கிறார்கள்; இதுதான் பெரியாருக்குப் பெருமை என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

முப்பெரும் விழா!

கடந்த 18.2.2022 - வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு புத்தர் அரங்கில் காணொலி மற்றும் நேரடி நிகழ்ச்சியாக - 1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு 94 ஆம் ஆண்டு தொடக்கவிழா - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா - பெரியார் பெருந்தொண்டர்களுக்குக் பெரியார் கைத்தடி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில், காணொலிமூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர்!

அறிவாசான் - நமக்கெல்லாம் விழி திறந்த பிற்பாடு தன்னுடைய விழிகளை மூடிக்கொண்ட வித்தகர் - சுயமரியாதையை  நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த பேராசான் - பகுத்தறிவுப் பகலவன் -நம்முடைய மான மீட்பர் தந்தை பெரியார் அவர்களுடைய சிலை திறப்பு விழா -

1929  ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டினுடைய 94 ஆம் ஆண்டு தொடக்க விழா -

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பெரியார் கைத்தடி வழங்கக்கூடிய விழா - 

ஆகிய முப்பெரும் விழாக்கள்! 

ஓவியர் மாமணி நா.வீரமணி

மிக எளிய முறையில் - இன்றைய கட்டுப்பாடு களுக்கு இணங்க, தன்னுடைய பகுத்தறிவு இல்லத்தில் சிறப்பாக - அதே செங்கல்பட்டிலே நடத்துவதற்கு முழு முயற்சி எடுத்து, அருமையான ஏற்பாடுகளை செய்தவர் நம்முடைய ஓவியர் மாமணி நா.வீரமணி அவர்களுடைய சிறந்த ஒத்துழைப்பிற்குப் பாராட்டி னைத் தெரிவித்துக்கொண்டு,

இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய மானமிகு மாவட்டத் தலைவர் செங்கை கோ.சுந்தரம் அவர்களே,

வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் செம்பியன் அவர்களே,

எனக்குமுன் உரையாற்றிய கழகப் பொதுச்செய லாளர் மானமிகு முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே,

ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறந்த ஊக்கத் தையும், உற்சாகத்தையும் தோழர்களுக்கு அளித்துக் கொண்டிருக்கக்கூடிய செயல்வீரர், மாநில கழக அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர் களே, காஞ்சிபுரம் மாவட்டத் திராவிடர் கழகத் தலை வர் அருமைத் தோழர் டி.ஏ.ஜி.அசோகன் அவர்களே,

இந்நிகழ்வில் அருமையான வாய்ப்புகளையெல் லாம் உருவாக்கி, சிறப்பாக வரவேற்புரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த கவிஞர் ருக்மாங்கதன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் சிறப்பான வகையில், எனக்கு முன் அவர் மிகப்பெரிய அளவிற்கு -ஒரு நல்ல உரையை ஆற்றியிருக்கிறார்.

நன்றியுரையை  கருங்குழி ராஜன் அவர்கள் ஆற்றவிருக்கிறார்கள்.

நகர செயலாளர் கவிஞர் யாழன் அவர்களே,

பொதுக்குழு உறுப்பினர் பக்தவச்சலம் அவர்களே, பொன்.ராஜேந்திரன் அவர்களே, முனைவர் கதிரவன் அவர்களே, கோவிந்தசாமி அவர்களே, செந்தூரப் பாண்டி அவர்களே, தனசேகரன் அவர்களே, கருணாகரன் அவர்களே, எல்லப்பன் அவர்களே, மாநில அமைப்புச் செயலாளர்கள்  பன்னீர்செல்வம் அவர்களே, ஊமை.ஜெயராமன் அவர்களே, மற்றும் தோழர்களே, பெரியார் பிஞ்சுகள் உள்பட நம்முடைய குடும்ப உறவுகளே, கொள்கை உறவுகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செங்கல்பட்டு மாகாண மாநாட்டின் 80 ஆம் ஆண்டு தாண்டிய நிலையில், 'மானமிகு சுயமரியா தைக்காரன்' என்று தன்னை ஒரு வரியில் வர்ணித்துக் கொண்ட நம்முடைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை அழைத்து- செங்கல் பட்டில் எந்த இடத்தில் மாநாடு நடைபெற்றதோ, அந்த இடத்தில் அந்த நிகழ்விற்கு ஏற்பாடுகளை  செய்தோம். அருமையான  நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டவர்தான்  தோழர் அன்புச்செல்வன் என்று நினைக்கின்றேன்.

அதற்குப் பிறகு, அந்த மாகாண மாநாட்டின் 94 ஆம் ஆண்டினை நினைவூட்டக்கூடிய ஓர் அற்புத மான விழாவை  - இந்தக் கரோனா காலத்து கொடுந் தொற்றிலேகூட, காணொலி வாயிலாக நடத்திக் கொண்டு இருக்கிறார் நம்முடைய அருமைத் தோழர் ஓவியர் மாமணி தோழர்  நா.வீரமணி அவர்கள். இதற்காக அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

தந்தை பெரியார் சிலை திறப்பு - பெரியார் கைத்தடி வழங்கல்!

தந்தை  பெரியார் அவர்களுடைய சிலையை அவருடைய வீட்டில் நிறுவியிருக்கிறார்கள் - ஏராளமான தோழர்களுக்குக் கைத்தடிகளை வழங்கியிருக்கிறார்கள். அது ஊன்றுவதற்கு அல்ல - அதேநேரத்தில், ஆபத்து வரும்பொழுது, எதிரிகளை அடையாளம் கண்டு அடக்கி வைப்பதற்கு என்ப தையும் இங்கே விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள், அறிவின் தேக்கம் என்று தந்தை பெரியாரை புரட்சிக்கவிஞர் சொன்னார் என்று குறிப்பிட்டார்.

அறிவின் தேக்கம் மட்டுமல்ல- நம் பிறவி இழிவின் நீக்கம்!

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையிலே, அறிவின் தேக்கம் மட்டுமல்ல - நம் பிறவி இழிவின் நீக்கம் அவர்.

அவர் இல்லாவிட்டால், நமக்கு சூத்திரப் பட்டமோ, பஞ்சம பட்டமோ, இழிவான  பட்டமோ, எட்டி நில் என்று சொல்லக்கூடிய அந்தப் பிறவி இழிவோ இன்றைக்கு ஒழிந் திருக்காது.

அதற்கு முன்னால், இதற்காக எத்தனையோ பேர் முயற்சி எடுத்திருக்கிறார்கள்.  அது வரலாற் றில் நடந்திருப்பது உண்மைதான்.

ஆனால், இந்த சமுதாயத்தைப் பொறுத்த வரையில், காலங்காலமாக ஊன்றிய அந்தப் பிறவி பேத நீக்கத்திற்காக அய்யா அவர்கள் செய்த காரியம், செயல் - தன்னையே முழுமை யாக ஒப்படைத்துக்கொண்டு, அதே பணியை மேலே போட்டுக்கொண்டு இருப்பவன் என்று சொன்னார்.

1938 இல் பெரியார் பட்டம் வழங்கிய மகளிர்!

பெரியார் என்ற பட்டத்தைத் தாய்மார்கள் - பெண்கள் 1938 இல்  கொடுத்தார்கள்.

அதற்குக் காரணம் சொல்லும்பொழுது, செயற்கரிய செய்தார் பெரியார் என்று குறிப்பிட்டனர்.

வள்ளுவரின்  திருக்குறளில், 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

என்று எளிமையாக எழுதினார்.

எல்லோரும் இந்தக் குறளுக்கான பதவுரை, கருத்துரையைப்பற்றி பேசுகின்றோமே தவிர, அந்தக் குறளை உருவகப்படுத்திப் பார்க்கத் தவறுகிறோம்.

அதற்கான விடைதான் தந்தை பெரியார் அவர்கள். செயற்கரிய செய்தார் பெரியார் -

செய்தல் என்பது மிக முக்கியம். செயற்கரிய சொல்லுதல் என்றுகூட இருந்திருக்கலாம். செயற்கரிய சிந்தித்தல்கூட இருந்திருக்கலாம்.

செயற்கரிய சொல்லுதல், சிந்தித்தல் என்பதைவிட, செயற்கரிய செய்தல்தான் சிறப்பு!

ஆனால், செயற்கரிய சொல்லுதல், சிந்தித்தல் என்பதைவிட, செயற்கரிய செய்தல் என்பதுதான் மிகவும் சிறப்பு.

அப்படி செய்கிறபொழுது, அது எளிமையான பணியா?

இந்த நாட்டிலே, எந்த மண்ணுக்காக பவுத்தம் தோன்றியதோ, அதில் அதனை விட்டுவிட்டார்கள்.

மக்கள் தொகை அதிகமாகக் கொண்டிருக்கும் சீன நாட்டிலே, பவுத்தம் அங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்ந் திருக்கிறது.

ஆனால், எந்த மண்ணிலே, யாருக்காக அது 

தோன்றிற்றோ  அங்கே பவுத்தத்தை ஒழித்துவிட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் செய்த மிகப்பெரிய பணி - ஆக்கப் பணி.

எனவே, அறிவின் தேக்கம் மட்டுமல்ல அவர் -

அந்த வகையிலே, அவர்கள் எப்படி பிறவி இழிவின் நீக்கமோ - அதேபோலத்தான், நம்முடைய செயல்பாட்டிற்கு,  பகுத்தறிவினுடைய ஆக்கத்தையும் அவர்கள் தந்தார்கள்.

ஒடுக்கப்பட்ட சமுதாயம், வீழ்த்தப்பட்ட சமுதா யம், தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று நம்முடைய சகோதரர்களை பிரித்துப் பிரித்து வைத்த நேரத்தில் தான், அவர்களை ஒன்றாக்குவதற்கு தந்தை பெரியார் அவர்கள் உழைத்தது மிகப்பெரிய ஆக்கமாகும்.

எனவேதான், அறிவின் தேக்கம் என்பது - அரும்பெரும் அறிவின் தேக்கமாக மட்டுமல்ல - அது ஆக்கமாக மாறும்பொழுதுதான், நமக்கெல்லாம் ஊக்கமாகத் தெரிகிற பொழுதுதான் மிகப்பெரிய எழுச்சியை நாம் உருவாக்க முடியும்.

அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் செய் தார்கள். எத்தனை தலைமுறை தாண்டி இன்றைக்கு அவர் நிற்கிறார்!

அடக்கத்தோடு, அதிக விளம்பரம் இல்லாமல், அறிவியல் துணைகொண்டு...

பெரியார் அவர்கள் உடலால் மறைந்து ஏறத்தாழ ஓர் அரைநூற்றாண்டு  காலம் ஆகின்ற காலத்தில், எந்த இடத்திலே சுயமரியாதை முதல் மாகாண மாநாடு நடைபெற்றதோ, அதே இடத்தில், அதனுடைய 94 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை - நம்முடைய ஓவியர் மாமணி நா.வீரமணி அவர்களுடைய முயற்சியினால், செங்கல்பட்டு தோழர்களுடைய உற்சாகத்தினாலே, பொதுச்செயலாளர்கள், நம்மு டைய அருமை  கழக மாநில அமைப்பாளர் ஆகி யோரின் ஊக்கத்தினாலே, இங்கே ஓர் அருமையான நிகழ்ச்சியை, அடக்கத்தோடு, அதிக விளம்பரம் இல்லாமல், அறிவியல் துணைகொண்டு இங்கே நாம் நடத்துகின்றோம்.

ஓவியர்  மாமணி வீரமணி அவர்கள், எல்லா நிகழ்ச் சிகளுக்கும் வருவார், போவார்; இன்றைக்குத்தான் நான் அவரைப்பற்றி அதிகமாகத் தெரிந்துகொண் டேன். எத்தனையோ தோழர்கள் வருவார்கள் - நம்முடைய இயக்கத்தினுடைய பெருமையே அது தான். நம்முடைய உறவுகள் யார் யாரென்று தெரியாது. ஆனால், இவர்களைவிட உறவுகள் கிடையாது நமக்கு. கொள்கை உறவுகள் என்பது ரத்த உறவு களைவிட பலமானது. அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை. அந்த உணர் வுகள் போதும். அந்த உணர்வுகளின்படி அவர் செய்திருக்கின்ற பணிகளையெல்லாம் நான் பார்த்தேன்.

பொதுத் தொண்டின் இலக்கணமாக திகழ்கிறார்கள்!

பெரியார் பெருந்தொண்டர்களாக, இந்தக் கொள்கையை ஏற்றவர்கள் பொதுத் தொண்டின் இலக்கணமாக திகழ்கிறார்கள்; இதுதான் பெரியாருக்குப் பெருமை!

தந்தை பெரியார் அவர்களுடைய பெருமைகளை நாம்  பேசாத நாட்களெல்லாம் பிறவா நாட்களாகக் கருதுகிறோம் என்று சொன்னால் நண்பர்களே, அதற்கு என்ன காரணம்? அதனுடைய வேர் எங்கே இருக்கிறது?

அவருடைய உழைப்பு ஒரு நாளும் வீண் போக வில்லை. அதே செங்கல்பட்டிலே, எத்தனை ஆண்டு காலம் கழித்து - 94 ஆண்டுகாலம் கழித்து - ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கழித்து - இன்றைக்கு அந்த இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது- பெரியாருடைய கைத்தடியை பலருக்குக் கொடுக்கின்ற வாய்ப்பாக இருக்கிறது.

நம்முடைய கழக மாநில அமைப்பாளர் குண சேகரன் அவர்கள் என்னிடம் சொன்னார், ''கைத்தடி வழங்கப் போகிறார்கள்'' என்று.

பெரியாரின் கைத்தடியாக இருக்கின்ற எனக்குக் கைத்தடி தேவையில்லை!

எனக்கா, கைத்தடி வழங்கப் போகிறார்? என்று சிரித்துக்கொண்டே வேடிக்கையாகக் கேட்டேன், எனக்குக் கைத்தடி வழங்கவேண்டிய அவசியமே இல்லை;  ஏனென்றால், நான் பெரியாரின் கைத்தடியாயிற்றே என்று சொன் னேன்.

கைத்தடி இல்லாதவர்களுக்குத்தான் கைத்தடி தரவேண்டும். கைத்தடியாக இருக் கின்ற எனக்குக் கைத்தடி தேவையில்லை என்று நேற்று அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

இன்றைக்கு அந்தப் பணியை செய்வதோடு மட்டுமல்ல, ஜாதி எனும் நாகத்தைத் தாக்கித் தாக்கி, அதை அடிப்பதற்கு, எதிரிகளை ஒடுக்கு வதற்கு அந்தக் கைத்தடி தேவைப்படுகிறது. வீட்டிலேகூட ஒரு தேளோ, பாம்போ அல்லது ஒரு திருடனோ நுழைந்துவிட்டால், தடியை எடு என்று சொல்லுகிறோம்.

ஆகவேதான், தடி என்பது வெறும் ஊன்று வதற்காக மட்டுமல்ல, ஊன்றிவரும் தடியைப் பார்த்து, பார்ப்பவர்கள்தான் நடுங்கவேண்டும்; நடுக்கம் என்பது உடலுக்குத்தானே தவிர, கொள்கைக்குக் கிடையாது.

தன்னுடைய தொண்டறத்தால், கடுமையான உழைப்பால்...

அதைத்ததான் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய தொண்டறத்தால், கடுமையான உழைப்பால் செய்திருக்கிறார்.

செயற்கரிய செய்தார் பெரியார் - எப்படி? எதிர்நீச்சல் அடித்து. எனவேதான் அவர் பெரியார்.

சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுக்கப்பட்டு - அதை அருந்தி அவர் மறைந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவர் மறைந்தாரா? இல்லை - மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வரலாற்றில் இன்றைக்கு நிலைத்து நிற்கிறார்.

பெரியாரை வீழ்த்த நினைப்பவர்கள்,  வீழ்ந்து போவார்கள்!

எனவேதான், தந்தை பெரியார் அவர்களை இன எதிரிகள் தாக்கத் தாக்க, பெருஉரு கொள் வார். அவரை யார் வீழ்த்த நினைக்கிறார்களோ, அவர்கள்தான் வீழ்ந்துபோவார்கள் - அதுதான் வரலாற்றினுடைய உச்சமாக இருந்துகொண் டிருக்கிறது.

காரணம் என்ன? ஆங்காங்கே கண்ணுக்குத் தெரிந்தும், கண்ணுக்குத் தெரியாமலும், பெரியார் பற்றாளர்களும், பெரியார் கொள்கையாளர் களும் ஏராளமாக, ஓவியக்  கவிமாமணி  நம் முடைய வீரமணி போன்றவர்கள் எண்ணற்ற வர்கள் இருக்கிறார்கள்;  உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

காரணம் என்னவென்றால், பெரியார் செய்த தொண்டும், அவருக்கிருந்த பார்வை   என்பதும் மானுடப் பார்வையே! அவருடைய எல்லை என்பது மிகப்பெரிய அளவிற்கு விரிந்த ஒன்று.

தொண்டு செய்த பழுத்த பழம்  தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார்

புரட்சிக்கவிஞர் அவர்கள்.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் தந்தை பெரியார். அதுதான் உலகப் பார்வை.

பெரியாரின் மானுடப் பற்றால் - உலகம் ஒரு குலம் என்ற அளவிற்கு வரும்!

இன்னும் போகப் போக சிந்தித்துக்கொண்டே போனால், இந்த உலகம் ஒரு குலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரும். பெரியாருடைய மானுடப் பற்று என்பதுதான் அடிப்படையாகும்.

(தொடரும்)


No comments:

Post a Comment