தேசிய பங்குச் சந்தையின் (NSE) மேனாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்குச் சந்தை பற்றிய ரகசிய தகவல்களை சாமியார்களோடு பகிர்ந்து வந்தாக பங்குவர்த்தக தலைமையகமான செபி தெரிவித்துள்ளது.
இது குறித்து செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியாரிடம் பொருளாதார ஆலோசனை மற்றும் பங்குச் சந்தை ரகசியங்களை - மிகவும் முக்கிய பொறுப்பில் இருந்த சித்ராராமகிருஷ்ணா மதநம்பிக்கை மற்றும் சாமியர்களின் மீதான குருட்டு நம்பிக்கை காரணமாக - அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அவரது தகவல் தொடர்பு சாதனங்களைத் தணிக்கை செய்த போது, செபி என்ற தேசியபங்குச்சந்தை வர்த்தக தலைமையகத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் சித்ரா சிக்கியுள்ளார்
இவர் 2013 ஆம் ஆண்டு பங்குவர்த்தக நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக பணியில் சேர்ந்தார். அன்றிலிருந்து அவர் அடை யாளம் தெரியாத சாமியாரோடு தொடர்ந்து முதலீடு தொடர்பானவற்றை பகிர்ந்து வந்துள்ளார்.
‘சிரோன்மணி’ என்று சித்ரா இந்த சாமியாரை அழைக்கிறார். இவரை சித்ரா ஒருமுறைகூட சந்தித்ததில்லையாம். ஆனால், 1996 முதல் இந்த இருவருக்கும் கருத்துப் பரிவர்த்தனை இருந்திருக்கிறது. என்.எஸ்.இ தொடர்பாக ஏதாவது முடிவு எடுக்க வேண்டுமெனில், இந்த இமயமலை சாமியாருக்கு சித்ரா இ-மெயில் அனுப்ப, அவரும் இ-மெயில் மூலமே பதில் அளிப்பாராம். இந்த இருவருக்கும் நடந்த பல நூறு
இ-மெயில்களைத் தேடிப் பிடித்து ஆய்வு செய்த செபி, இப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது .
அந்தச் சாமியாரின் வழிகாட்டலின்படியே நிர்வாகத் தலைவரின் ஆலோசகராக ஆனந்த சுப்ரமணியன் என்பவரை நியமித்துள்ளார் என்று சித்ரா ராமகிருஷ்ணன் மீது கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளது.
சித்ராவுக்கு உள்ள மிகப்பெரிய ஆன்மீகப் பற்றினை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஆனந்த், இப்படி செய்துள்ள தாகவும் கூறப்படுகின்றது. அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் சித்ராவுக்கு மின்னஞ்சல் உள்ளிட்ட பல முக்கிய கட்டளைகள் குறிப்பிட்ட சாமியாரிடம் இருந்து வரும். அதன் பிறகு அதனை அப்படியே செய்து வந்துள்ளார். இதன் மூலம் ஆனந்த் சுப்ரமணியன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பலன்களைப் பெற்று வந்துள்ளார். குறிப்பாக பங்குச் சந்தையின் ரகசிய தகவல்கள் மூன்றாம் நபருக்கு பகிரப்பட்டுள்ளது. இது அதன் நிர்வாகக் குறைப்பாட்டினை சுட்டிக் காட்டுகின்றது. இது மோசமான நடத்தை என செபி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இமயமலையில் இருப்பதாகக் கூறப்படும் பெயர் தெரியாத சாமியார் 'ரிக் யஜூர் சாம' என வேதங்களின் பெயர்களால் உருவாக்கப்பட்ட மின்னஞ்சலுக்குத்தான் இத்தகைய ரகசிய தகவல் பகிரப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்படி தான் தேசிய பங்குச்சந்தை ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனுக்கு, அடுத்தடுத்து மூன்று ஊதிய உயர்வுகளை அளித்து, 4 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளதாகவும் செபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு மோசடிப் புகார்களில் சிக்கிய சித்ரா கடந்த 2013 - 2016ஆம் ஆண்டில் நிர்வாக இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில், மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளன. இதற்கிடையில் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி, தொடர்ந்து கவனம் செலுத்திய நிலையில், அதிரடியான நடவடிக்கை களையும் எடுத்துள்ளது.இதற்கிடையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 3 கோடி ரூபாய் அபராதமும், ஆனந்த் சுப்ரமணிய னுக்கு 2 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் செபி அதிரடியான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது
தேசியபங்குச்சந்தையின் நிதி மற்றும் வணிகத் திட்டங்களை பகிர்ந்து கொள்வது - ஒரு, பங்குச் சந்தை மீதான நம்பிக்கையையே அசைத்துப் பார்த்துள்ளது. பங்குச் சந்தையில் நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக இப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இவர் தலைமை இயக்குநராக இருந்த போதுதான் முதல் முதலாக அலுவலக வளாகத்தில் நிதிவளர்ச்சிக்காக யாகங்களும் இதர பூஜைகளும் நடத்தப் பட்டன. பொதுவாக நிதித்துறை பங்கு வர்த்தகம் போன்றவை நடக்கும் அலுவலகங்களில் தனிப்பட்ட முறையில் பூஜைகள் செய்துகொள்வார்கள். ஆனால் இவர் பெரும் செலவில் பார்ப்பனர்களை அழைத்து 15 மாடிகளைக் கொண்ட பங்குவர்த்தக கட்டடத்தின் நுழைவு வாயிலில் யாகம் நடத்தியுள்ளார்.
வடக்கில் சாமியார்கள் பாலியல் வன்கொடுமைகளிலும், நிதி மோசடிகளிலும் கைதேர்ந்த நபர்களாக உள்ளனர். இதனை பல்வேறு நாளிதழ்களில் அவ்வப்போது படித்துக் கொண்டே இருக்கிறோம். இந்த நிலையில் நாட்டின் முதலீடு தொடர்பான முக்கிய துறையின் தலைமை அதிகாரியாக இருந்தவர் அடையாளம் தெரியாத சாமியாரோடு, தொடர்ந்து நிதி தொடர்பான அதிமுக்கிய தகவல்களை பகிர்ந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடடத்தாமல் வெறும் அபராதத்தோடு இந்த மோசடியை மூடிமறைக்க பங்குவர்த்தக நிர்வாகம் முயல்கிறதோ என்ற அய்யம் எழுகிறது. 8 ஆண்டுகளாக பதவியில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை மோசடி செய்தவர்கள் சில கோடிகளை அபராதமாகக் கொடுத்துவிட்டு மீண்டும் அதே மோசடியில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. அய்.சி.அய்.சி.அய் வங்கியின் தலைவராக இருந்த சாந்தா கோச்சர் மிகப்பெரும் ஊழல் செய்தது விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது போல், சித்ரா ராமகிருஷ்ணா விசாரிக்கப்படவில்லை. அப்படியொரு விசார ணைக்கு உள்படுத்தப்பட்டால் பல மோசடிகள் வெளிவரும்!
இவ்வளவுப் பெரிய குற்றவாளிக்கு வெறும் அபராதம் தானாம்! மோடி ஆட்சியில் என்னென்னவெல்லாம் நடக்கிறது.
அதே நேரத்தில் இது போன்ற குருட்டு நம்பிக்கைகளுடன் உயர் பதவி களில் உள்ள எத்தனை பேர்களை சாமியார்கள் வளைத்து - சாதிக்கின்றனர் என்பதை புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்ளவில்லை. சாமியாரா? ஆசாமியாரா? என்று கூடத் தெரியாது. ஆனாலும் சாமியார் என்ற பெயரில் என்னென்னவெல்லாம் நடக்குது.
முற்றும் துறந்தவர்களுக்குப் பெயர் சாமியார்களாம். ஆனால் இவர்கள் எதையும் துறக்கவில்லை. சாமியார், காவி என்பதெல்லாம் ஒரு வேஷம்! சாமியார் காலில் விழும் பக்தர்கள், பக்தைகள் எந்த எல்லைக்கும் சென்று மோசடியில் ஈடுபடுவார்கள். அதுவும் ஒரு மதவாத ஆட்சியில் இவ்வாறு நடைபெறுவது ஆச்சரியமானது அல்லவே!
No comments:
Post a Comment