நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்துவிட்டது, திராவிட மாடல் ஆட்சி என்பது இதுதான் என முதலமைச்சர் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் காட்டியுள்ளார்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு வாக்குரிமையை நீதிக்கட்சி 1921 ஆம் ஆண்டு கொடுத்தது, விடுதலை பெற்ற பிறகு 18 வயதைக்கடந்த அனைத்து இந்தியர்களுமே வாக்களிக்கலாம் என்றும் நமது அரசமைப்பின் மூலம் அண்ணல் அம்பேத்கர் வாக்குரிமை பெற்றுத்தந்தார்.
திருநங்கைகளின் முழுமையான விவரம் மற்றும் அது குறித்த தெளிவான அறிக்கைகள் எதுவும் இல்லாததால் திருநங்கைகளுக்கான வாக்குரிமை தொடர்பாக புள்ளிவிபரங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என்று கூறப்பட்டது, பல வித அறிக்கைகள் பெறப்பட்டு இறுதியாக 1994 ஆம் ஆண்டு முதல் திருநங்கைகள் தேர்தல் அடையாள அட்டையைப் பெற்று வாக்களிக்கும் உரிமையைப்பெற்றுள்ளனர்,
திருநங்கைகள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றபோதிலும் அவர்களை வாக்குவங்கி அரசியல் செய்யும் எந்த ஒரு அரசியல் கட்சியும் சீண்டவில்லை. முக்கியமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகிவரும் அந்தச்சமூகத்தினரின் உரிமைகள் குறித்து வடக்கில் யாருமே பேச முன்வரவில்லை.
இதனை அடுத்து மத்தியப் பிரதேசத்தில் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து ஜீத்தோ ஜித்தாவ்(வெல்வோம் வென்றோம்) என்ற அரசியல் கட்சியை துவக்கினர்.
ஆரம்ப காலத்தில் கடுமையான அவமானங்களைச் சந்தித்தனர். எத்தகைய அவமானங்கள் வந்தாலும் தாங்கிக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட அக்கட்சியின் தலைவியான திருநங்கை சப்னம் மாவுசி என்பவர் காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடித்து 1998 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் நுழைந்தார்.
அதன் பிறகு அந்தக்கட்சியின் புகழ் மாநிலம் எங்கும் பரவியது, அந்தக்கட்சி மத்தியப்பிரதேசம் கட்னி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று அம்மாநகராட்சியைக் கைப்
பற்றியது, முதல் முதலாக திருநங்கை மேயராக கமலா ஜான் என்பவர் பொறுப்பேற்றார்.
ஆனால் அப்பகுதி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டது ஆகவே அவர் மேயரானது செல்லாது என்று தீர்ப்பு வந்த பிறகு அவர் பதவி விலகினார். அதன் பிறகு பொதுத்தொகுதியாக ஒதுக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் ஆஷா தேவி என்பவர் மேயராக பொறுப்பேற்றார்.
2009 ஆம் ஆண்டு கமலா புவா என்பவர் சாகர் மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்றார். இறுதியாக 2015 ஆம் ஆண்டு மகாராட்டிரா மாநிலத்தில் மலைப்பகுதி நகரமான ரய்காட் மாநகராட்சியில் மது என்பவர் மேயரானார்.
இவர்கள் அனைவருமே எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்புலமில்லாமல் மக்களின் ஆதரவோடு சுயேட்சையாக தேர்தலில் நின்றும் தனிக்கட்சி துவங்கியும் நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு அரசியலில் நுழைந்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக் கும் உரிமை என்ற முழக்கத்தை தாங்கிச்செல்லும் அரசாக நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தே நடந்துவந்தது.
அதன் தொடர்ச்சிதான் திருநங்கை களுக்கான உரிமை மீட்டல்.
நூற்றாண்டுகளாக இழிப்பெயரைச் சுமந்துவந்த மூன்றாம் பாலினத்தவருக்கு பெருமை மிகுந்த திருநங்கை என்ற பெயரை 2008இல் கலைஞர் அடைமொழியாக்கி அரசுடமையாக்கினார்.
அடுத்த ஆண்டில் 2009இல் திருநங்கைகள் நல வாரியத்தையும் உருவாக்கினார். அவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு சுய உதவி தொழிற்கடன் என வழங்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியது.
இந்தியாவிலேயே முதல் பொறியாளர், காவல்துறை அதிகாரி என பல பதவிகளில் திருநங்கைகள் பதவியில் அமர்ந்தனர்.
அதுமட்டுமா தமிழ்நாட்டு முதலமைச் சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திருநங்கை வேட்பாளரை நிறுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் கருவேப்பம்பட்டி தொகுதியில் 2698 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை முதலமைச்சர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதுமட்டுமா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முதலமைச்சரின் சமூகநீதிக்கான பயணம் தொடர்ந்தது, வேலூர் மாநகராட்சியின் 37ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். 49 வயதான திருநங்கை கங்கா, வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர். கரோனா ஊரடங்கு காலத்தில் கங்கா அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறுவகையில் உதவியுள்ளார்.
கடந்த 2002 முதல் 20 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் கங்கா, கலைஞர் ஆட்சிக்காலத்தில் திருநங்கையர் நல வாரிய உறுப்பினராக இருந்திருக்கிறார்.
மேலும், தற்போது தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புச் செயலாளராக இருந்து, 50 பேர்கொண்ட தமிழர் கலைக்குழுவையும் நடத்திவருகிறார்.
``நான் தேர்தலில் வென்றால் எனது வட்டத்திலுள்ள அனைத்துத் தெருக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன், மக்கள்நலப் பணித் திட்டங்களைக் கொண்டுவந்து திறம்படச் செயலாற்றுவேன்’’ என உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றிபெற்றுள்ளார்.
தந்தை நூற்றாண்டுகாலமாக இருந்த அவப்பெயரை நீக்கி அழியாப்புகழ்பெற்றார் என்றால் தனயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment