மனித உரிமை போராட்டம் வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

மனித உரிமை போராட்டம் வெற்றி!

நாகப்பட்டினம் மாவட்டம் - திருமருகல் ஒன்றியம் திருப் புகலூரில் வேளாக்குறிச்சி ஆதினம் என்ற ஒன்று இருக்கிறது.

அந்த ஆதினகர்த்தரின் மணிவிழா என்ற பெயரில் பட்டினப்பிரவேசம் என்று சொல்லிக் கொண்டு கணவனும், மனைவியும் மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சியொன்று கடந்த 30ஆம் தேதி ஏற்பாடாகி இருந்தது. தகவல் அறிந்த திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டனர்.

கழகப் பொதுச் செயலாளர் தோழர் தஞ்சை இரா. ஜெயக்குமார் அவர்கள் கழகத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்க, கழகத் தலைவர் அவர்கள் உரிய முறைப்படி வன்முறைக்கு இடமின்றித் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

நாகை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் தோழர் பூபேஷ்குப்தா, முக்கிய கழகத் தோழர்களுடன் ஆதின கர்த்தரைச் சந்தித்து திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை முன் வைத்தனர். அதற்கு அவர் உடன்படாத நிலையில், முறைப்படி காவல் நிலையத்தில் போராட்டம் குறித்த தகவலைத் தெரிவித்து, இரண்டே நாட்களில் நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை,  கும்பகோணம், மன்னார்குடி முதலிய பக்கத்து மாவட்டங்களுக்குத் தகவல் தெரிவித்து கழகத் தோழர்களைத் திரட்டும் பணியில் வேக வேகமாக ஈடுபட்டனர். பிரச்சினை பெரிய அளவில் வெடித்துக் கிளம்பும் என்ற சூழ்நிலையில், புரிந்துகொண்டு, காவல்துறையினர் ஆதின கர்த்தரிடம் நேரில் சென்று பட்டினப் பிரவேச முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். முரண்டு பிடித்துப் பார்த்தார். தோழர்கள் விடவில்லை. கடைசியில் எழுத்துப்பூர்வமாகவே பட்டினப் பிரவேசத்தைக் கை விடுவதாக ஆதினகர்த்தர் எழுதிக் கொடுத்தார்.

திராவிடர் கழகத்தின் உயர்ந்த பண்பாடு எத்தகையது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு; பெருந் திரளாகக் கூடியிருந்த கருஞ்சட்டைத் தோழர்கள், "எங்கள் கோரிக்கையை ஏற்று பட்டினப் பிரவேசத்தைக் கைவிட்ட ஆதின கர்த்தருக்கு நன்றி! நன்றி!!" என்று முழக்கமிட்ட காட்சி - செயல் - பொது மக்கள் மத்தியில் கழகத்தின்மீது உயர்ந்த மரியாதையை ஏற்படுத்தியது.

மற்றவர்களாக இருந்திருந்தால் எப்படியெல்லாம் முழக்கம் போட்டு இருப்பார்கள்? நடந்து கொண்டு இருப்பார்கள்? "வெற்றி  - வெற்றி" எங்கள் கட்சிக்கு மாபெரும் வெற்றி! "அடி பணிந்தார் - அடி பணிந்தார்" ஆதினகர்த்தர் அடி பணிந்தார் என்ற முறையில் தானே முழக்கங்கள் அமைந்திருக்கும்.

"இதுதான் தந்தை பெரியார் கற்றுக் கொடுத்த பண்பாடு - நமது அருமைத் தலைவர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், அய்யா அடியொற்றி நமக்குக் கற்றுக் கொடுத்த உயரிய பண்பாட்டுச் சீலம்!"

பல அரசியல் கட்சிகளும், ஊர்ப் பொது மக்களும் திராவிடர் கழகத்தின் கட்டுப்பாட்டையும், இந்தப் பண் பாட்டையும் பல படப் பாராட்டினர்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மனிதனை மனிதன் சுமக்கும் இழி செயலை எப்படி அனுமதிப்பது? இந்த மனித உரிமைப் போராட்டம் திராவிடர் கழகத்திற்கு ஒன்றும் புதியதும் அல்ல.

தருமபுரி ஆதினம், திருவாவடுதுறை ஆதினம் திருப்பனந் தாள் ஆதின கர்த்தர்கள் பட்டினப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதர்கள் சுமக்கும் மனித உரிமைக்கும், மாண்புக்கும் எதிரான செயலில் ஈடுபட்டபோது - திராவிடர் கழகம் திரண்டெழுந்து முன்னின்று போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தியதுண்டு.

காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் தான் செல்லுவது வழக்கம்.

ஒரு முறை தந்தை பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்தபோது, அந்த வழியாக பல்லக்கில் அவரை மனிதர்கள் சுமந்து சென்ற காட்சியைப் பார்த்து வேதனைப்பட்டு அதனை வன்மையாகக் கண்டித்தார். 'முற்றும் துறந்த முனிவர்' 'ஜெகத்குரு' என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இது அழகா! என்று பேசினார்.

அது முதல் சங்கராச்சாரியார் பல்லக்கில் செல்லுவதைக் கைவிட்டார் என்பதும் முக்கிய தகவல். திராவிடர் கழகம் என்றால் மனித உரிமைக் கழகம் என்று தானே பொருள்.

உரிய நேரத்தில் கழகத் தலைவரிடம் தெரிவித்து அனுமதி பெற்று, புயல் வேகத்தில் பணியாற்றித் தோழர்களை திருப் புகலூரில் ஒன்று திரட்டி, வன்முறைக்குச் சிறிதும் இடமின்றி, வெற்றிகரமாக மனித உரிமைப் போராட்டத்தை நடத்தி முடித்த நாகை மாவட்டக் கழகத் தலைவர், செயலாளர், பொறுப்பாளர் களுக்கும், கழகப் பொதுச் செயலாளர் தோழர் தஞ்சை இரா. ஜெயக்குமார் அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மிகப் பெரிய அளவில் திரண்டு வந்த கருஞ்சட்டைத் தோழர்களுக்கும் பாராட்டு.

யாரும் செய்ய முன் வராத இத்தகு பணிகள் தான் திராவிடர் கழகத்திற்கான தனி முத்திரையாகும்.

"வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்"

No comments:

Post a Comment