இந்து சட்டத்திருத்தம் 25.11.1944 - குடிஅரசிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 11, 2022

இந்து சட்டத்திருத்தம் 25.11.1944 - குடிஅரசிலிருந்து...

சென்னை மாகாணத்திலுள்ள மக்கட்தொகையில் இந்துக்கள் எனப்படுவோர் 440 இலட்சம் மக்களாவர். இவர்களில் 20 லட்சம்தான் பார்ப்பனர்கள். பார்ப்பனருக்கும் பார்ப்பனர் அல்லாதாருக்குமிடையே பல துறைகளிலும் வித்தியாசம் காணப்படுகிறது. பார்ப்பனர்கள் தங்கள் ஏகபோக உரிமை மேலும் நீடிக்கவும், மற்றபடி உள்ள பார்ப்பனரல்லாத வகுப்பார் இன்னும் கீழான நிலையடையவும்தான் முயற்சி செய்வார்கள்.

 எனவே வகுப்பு வாரியாக பிரதிநிதித்துவம் வழங்குதல் என்ற முறையின்பாற்பட்டு யாதாமொரு காரியத்திற்காக இருபத்து அய்ந்து அங்கத்தினர்கள் கொண்டதோர் கமிட்டி ஏற்படுத்தப்படுமாகில், அதில் பார்ப்பனருக்கு ஒரு ஸ்தானம்தான் கொடுக்கப்படலாம். அதுவேயுமன்றி அத்தகைய கமிட்டியின் தலைவர் கட்டாயம் பார்ப்பனரல்லாதாராகத் தான் இருக்க வேண்டும். இதுவே நீதியும், நல்லாட்சி முறையும், சுயராஜ்ஜிய தத்துவமுமாகும்.

பார்ப்பனர்களிடத்தில் அவநம்பிக்கை சரியான வகையில் ஏற்பட்டிருக்கும் இந்நேரத்தில் சர்க்கார் பார்ப்பனரல்லாதாரை அலட்சியம் செய்யும் முறையில் குழு ஏற்படுத்துவதிலும் பிற நடவடிக்கைகளிலும் ஒருபட்ச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளுவார்களானால் எந்த சுயமரியாதையுள்ள பார்ப்பனர் அல்லாத தோழரும் குழுவில் அங்கத்தினராக இருக்க சம்மதிக்க மாட்டார் என்று நிச்சயம் நம்புகிறோம். கமிட்டியின் முன் சாட்சியம் கொடுத்துத் தன்னையும் தன்னுடைய இனத்தையும் இழிவுபடுத்த எந்தத் தோழரும் நினைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

இந்து சட்ட திருத்தத்திற்கென்று எத்தகைய முயற்சி எடுக்கப்படும் நேரத்திலும் பார்ப்பனரல்லாத மக்களின் நலன்களைப் பாதிக்கும்படியாக சர்க்கார் தெரிந்தோ, தெரியாமலோ காரியங்களைச் செய்தார்களேயானால் கட்டாயம் கிளர்ச்சி துவக்கப்படும் என்பதை உறுதியுடன் கூறுகிறோம்.

இந்தப்படி, பார்ப்பனரல்லாத தோழர்களையே பெரும்பான்மையாக ஏற்படுத்தவிருக்கும் கமிட்டியில் நியமிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஆங்காங்குள்ள தோழர்கள் கூட்டங்கள் கூட்டி நிறைவேற்றி சென்னை சர்க்காருக்குத் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்.

No comments:

Post a Comment