பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது நாங்கள்தான் என்று பா.ஜ.க.வினர் மார்தட்டுவது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மறுத்து விளக்கமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
பொய்ப் பேசுவதற்குக் கொஞ்சம்கூட கூச்சப் படாத கூட்டம் இந்த சங்பரிவார்க் கூட்டம். மண்டல் குழுப்பரிந்துரை அமலாக்கம் குறித்து ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடான 'ஆர்கனைசர்' (26.8.1990) என்ன எழுதியது?
"தனது 150 ஆண்டு கால அந்நிய ஆட்சியில் பிரிட்டிஷாரால் சாதிக்க முடியாததை வி.பி. சிங் ஓராண்டுக்குள் சாதிக்கப்போவதாக மிரட்டுகிறார்.. விவேகானந்தர், தயானந்த் சரஸ்வதி, மகாத்மா காந்தி மற்றும் டாக்டர். ஹெட்கேவார் காலத்திலிருந்து செய்யப்பட்ட, இந்து சமூகத்தை ஒன்றுபடுத்தும் மகத்தான பணியை இவர் சிதைக்கப் பார்க்கிறார்.. சமுதாயத்தை மண்டல் மயமாக்குவதன் மூலம் இந்துக்களை முற்பட்டோர், பிற்பட்டோர், ஹரிஜனங்கள் என்று பிளக்கப் பார்க்கிறார் வி.பி. சிங்."
"இடஒதுக்கீடு அரசியலானது சமூகக் கட்டமைப்புக்குச் செய்யும் பேரழிவு - கற்பனைக்கும் அடங்காதது. அது திறமையற்றவர்களுக்குச் சகாயம் காட்டுகிறது, திறமையானவர்கள் வெளியேறுவதை ஊக்குவிக்கிறது, ஜாதிப் பிளவை கூர்மையாக்குகிறது" என்று எழுதிடவில்லையா?
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இந்திரஜித் குப்தா அவர்கள், மண்டல் பரிந்துரை அமலாக்கத்தை எதிர்த்து சங்பரிவார்க் கூட்டம் போராட்டங்களைக் கொழுந்து விட்டு எரிய வைத்தபோது - 1990 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது.
"மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றை அமல்படுத்தி யிருப்பது முற்றிலும் நியாயமானது - வரவேற்கத்தக்கது. ஏதோ தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுக்குக் காலங் காலமாக அரசுப் பணிகள் கிடைக்காது, அவர்களுக்கு எதிர் காலமே இல்லை என்பது போல சிலர் புலம்புகிறார்கள், அதீதமான சிதைக்கப்பட்ட ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது. அதனால் தான் இத்தகைய பொருமலும், போராட்டமும் நடக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையில் 52% பேர். ஆனால் அவர்கள் உயர் பதவிகளில் 4.5 விழுக்காட்டினர் தான் இடம் பெற்றிருக்கிறார்கள். இது அநியாயம் இல்லையா? பிற்படுத்தப் பட்டோர் வருவதால் அரசுப் பணிகளின் தரம் மற்றும் திறமை வீழ்ந்துவிடும் என்கிற அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது. கல்லூரி களில் படிக்கும் இளம் பையன்களும், பெண்களும் 'தகுதி' எனப்பட்டதன் கொடும் பாவியை சாவு ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பதைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். தங்கள் கணவன்மார்களுக்கு வேலை கிடைக்காது எனும் முழக்க அட்டைகளுடன் இளம் பெண்கள் ஊர்வலம்போகிறார்கள். ஆனால் இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான கணவன்மார்கள் இந்த நாட்டில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த இளம் பெண்களுக்குச் சிறிதும் கவலை இல்லையே!" என்று நாடாளுமன்றத்திலேயே முழங்கினாரே இந்திரஜித் குப்தா.
யார்மீது இந்தத் தாக்குதலை தொடுத்தார்? தகுதி எனப்பட்ட கொடும் பாவியை சாவு ஊர்வலமாகத் தூக்கிச் சென்று எரித்த நாராயணக் கூட்டம் எந்தத் துணிச்சலில் பொய் மூட்டைகளை அவிழ்த்து அவிழ்த்துக் கொட்டுகின்றனர்.
தங்களின் ஆட்சி அதிகார உத்தியோகக் கோட்டை - கல்விக் கோட்டையில், ஒரு குறிப்பிட்ட பாகம் குடிமக்களின் மற்றொரு பகுதிக்குச் செல்லுகிறது என்றவுடன் உயர் ஜாதி பார்ப்பனக் கூட்டம் வட இந்திய மாநிலங்களில் கலவரத் தீயைத் தூண்ட வில்லையா "நேஷனல் மெயில்" (12.4.1991) எனும் ஏடு அதுபற்றி விவரிக்கிறது. 152 பேர் தீக்குளித்தனர். பயங்கரமாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாண்டவர்கள் 58 பேர்கள்.
இந்தத் தகவல்களை எல்லம் மறைத்து விடலாம் என்று நினைத்தால், அவற்றை அதன் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர சமூகநீதி இயக்கமான திராவிடர் கழகம் விழிப்புடன் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம்.
ஒன்றை இந்த இடத்தில் ஆணி அடித்துக் கூறுகிறோம். இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது 1950 என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு - ஒன்றிய அரசு துறைகளில் செயல்பாட்டுக்கு வந்தது 1994 இல்தான் என்பது நினைவில் இருக்கட்டும்.
அதுவும் கல்வியில் இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்தது 2006ஆம் ஆண்டில்தான்.
மிகவும் பொறுமையாக இருந்து வந்துள்ளனர் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள். தூங்கும் புலி என நினைத்து இடறிப் பார்க்க வேண்டாம். ஆட்சி அதிகாரம் கையிருப்பில் கெட்டியாக இருக்கிறது என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூறியதுபோல், ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு கட்டத்தில் வெடித்துக் கிளம்புவார்கள். நாட்டின் ஆதிக்க நிலையைத் தகர்த்து எறிவார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.
ஜனநாயக நெறிப்படி ஆளும் வர்க்கம் நடந்து கொள்ள முன்வர வேண்டியது அவசியம் - மிகவும் அவசியமாகும்.
No comments:
Post a Comment