திருக்குறள் எப்படி வடநூலோடு வேறுபடுகிறது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

திருக்குறள் எப்படி வடநூலோடு வேறுபடுகிறது?

http://kural thiran/kural/Thirukkural.asps
வள்ளுவர் செய்த பனுவலில் வடநூலார் வழிகாட்டும் வீடில்லை .

பெற்றோரும், மனைவி, குழந்தைகளும் பசியால் வருந்துவராயின் தீயன செய்தாயினும் புறந்தருக என்பதும் இறக்க நேர்ந்தால் இழிவந்தன செய்தாயினும் உய்க என்பதும் வடநூன்முறையாகும். ஆனால் குறளோ உடம்பினது நிலையின்மையை வலியுறுத்தியும் மானத்தினது நிலையுடைமையைத் தூக்கியும்ஈன்றவள் பசி காண்பாளாயினும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யற்கஎன்கிறது என்பதைப் பரிமேலழகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாணக்கியரும் சுக்கிரநீதி நூலுடை யாரும் தத்தம் பொருள் நூல்களில் கள்ளினை சிறிதளவுண்ண இடம் கொடுத்திருக்க, திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை நன்கு வற்புறுத்திச் சொல்லியுள்ளார். சுக்கிரநீதி சிறிதளவு உண்ணப்படும் கள் மதி நுட்பத்தையுந் தருவதாகும் என்கிறது. திருக்குறள் கள்ளுண்பவரைச் சாடி அவர்களைச் செத்தார் என்கிறது.

பிறப்பால் உயர்வும் பீடில்லாத் தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறா நிலையில் உள்ளது என்று கூறி ஜாதிக்கொரு நீதி விதித்தன வடவர் நூல்கள். அதை மறுத்துபிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்என்று முழங்கும் திருக்குறள் பிறப்பாலுரிமையும், ஜாதி நீதியும் பேசாதது மட்டுமல்ல; ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்என்று நம் சமுதாயக் கொள்கையையும் வரையறுக்கிறது.

எல்லாஸ்மிருதிகளும் நான்குவரு ணங்கள், நான்கு புருஷார்த்தங்கள், நான்கு ஆசிரமங்கள் இவற்றைப்பற்றியே விரித்துரைக்கின்றன. ஒரு நீதி நூலை இன்னொன்றுடன் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது எவ்வகையில் அது இந்தப் பொதுமையில் இருந்து வேறுபடுகிறது என்பதை வைத்தே . திருக்குறள் நான்குவருணங்களைப் பற்றிப் பேசவே இல்லை. நான்கு புருஷார்த்தங்களில் வீடுபேறை விட்டுவிட்டது.

ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற அறிஞர்பண்டைக்கால இந்தியாவில் திருக்குறளில் காணாப்படுவதைப் போன்ற அன்புவழிப்பட்ட செயல் முறை வாழ்க்கையும், வாழ்க்கை மறுப்பு இன்மைக் கோட்பாடும் புத்த, (சமண) சமயத்திலோ, பகவத்கீதை வழி வளர்ந்துள்ள இந்து சமயத்திலோ இடம் பெறவில்லைஎன்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

இவை திருக்குறளுக்கும் வடநூலார் மரபுக்கும் உள்ள வேற்றுமைகளில் ஒருசில . இதுவே திருக்குறள் வழிநூல் அல்ல; அது தனித்தன்மை வாய்ந்த மூலநூலே என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.

திருக்குறளின் சிறப்புக்கள் சில

தானே முழுது உணர்ந்து தண்தமிழில் ஓதற்கும் உணர்தற்கும் எளிதான திருக்குறளைப் படைத்தார் வள்ளுவர். “மிக எளிய நடை ; பளிங்கு போலத் தெளிவாகத் தோன்றும் சிந்தனை, பொருத்தமான, அழுத்தமான, சிறிய தேர்ந்த சொல்லாட்சி, ஆழமான கல்வி, பண்பாடு, ஞானம், விரிந்து பரந்த மனப்பான்மை, தேவையானவற்றையே தேர்ந்து தரும் திறம், மேன்மையான நகைச்சுவை, முழுமையான அறவுரை ஆகிய அனைத்தும், சேர்ந்து, அவரை எக்காலத்திலும் தொழத்தக்கவராய் ஆக்கியுள்ளன; தமிழ் மக்களின் மறைநூலாக அவரது நூல் மதிக்கப்படுகிறது.” என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறளுக்கு ஒரு தெளிவான திறனுரை தந்துள்ளார்.

வள்ளுவர் தாம் கூற விரும்பும் பொருளை நன்கு உணர்த்துவதற்குப் பல்வேறு உத்திகளையும் மொழி நடைகளையும் பயன்படுத்துகின்றார். முன்னிலைப் படுத்தி விளித்தலையும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினா-விடைப் பாணியில் உரையாடல்களை அமைத்தலை ஒருவகைக் கலைத்திற னாகக் கையாண்டுள்ளார். உபநிடதங்கள், புத்தரின் போதனைகள், பிளேட்டோவின் உரையாடல்கள் போன்ற மெய்யியல் நூல்களிலும் இந்த உத்தி பின்பற்றப்படுவதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுவர்.

நூல் மிகச்சிறந்த அமைப்புடையது. மிக அரிய செய்திகளை வரையறைப் படுத்திச் சுருக்கமாகக் கூறுகிறது. சொல் வளமும், பொருட்சிறப்பும், நுண்ணோக்கும், அணி நலனும், ஓசையொழுக்கும், ஆழ்ந்த கருத்தும் ஒருங்கு நிறைந்தது திருக்குறள்.

சொல், தொடர், குறிப்புப்பொருள் எனப்பலவற்றில் நுட்பமான உத்திகளைப் பயன்படுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள். நூல் முழுவதும் உயர்வு நவிற்சியையோ, இல்பொருளையோ எடுத்துக் கூறாது பெரும்பாலும் தன்மை நவிற்சியாக இயற்கையோடு பட்டு, மக்கள் மனத்தில் தைக்குமாறு அழகுற எளிய நடையில் உவமைகளை ஆண்டுள்ள திறம் வியக்கவைக்கும். இப்பனுவலில் தமிழின் இனிமை உண்டு; தத்துவத்தின் தெளிவுண்டு; வாழ்க்கையின் விளக்கமுண்டு; உணர்வும் உண்மையும் ஒன்றி இருக்கும்; அறத்தோடு பொருளும் பொருளோடு இன்பமும், இன்பத்தோடு அறமும் பொருந்திக் கிடக்கும்; இனிமையும் எளிமையும் இணந்திருக்கும்; ஆழமும் அகலமும் அமைந்திருக்கும்.

சமயத்திலும் வாழ்க்கையிலும் மேல் நாட்டார் பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையயும் ஏற்றுக்கொள்ளுதல் என்ற கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர் எனவும் இந்தியரோ பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல்  என்ற கோட்பாட்டைத் தழுவுகின்றனர் எனவும் மெய்யியல் அறிஞர் ஆல்பர்ட்டு சுவெட்சர் கருதினார். பிறப்புக்களினின்று விடுதலையடைதல் வேண்டும் என இந்தியச் சமயங்கள் கற்பிப்பதால் வாழ்க்கையும் உலகும் துன்பமானவை அல்லது குறையுள்ளவை என அவற்றை மறுத்து விடுதலையைத் தேடுதல் இந்திய மக்களின் நோக்கமாகிறது. உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல் என்னும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் மக்கள் தீமை செய்யாமையையே சிறந்த அறமாகக் கொள்வாரே அன்றி நன்மையைச் செய்தலாகிய அறங்களில் அதிகம் கருத்தைச் செலுத்தார். தீமை செய்யாமை ஒருவரை உலகினின்றும் காக்கிறது; நன்மை செய்தாலோ ஒருவரை உலக வாழ்க்கையில் ஈடுபடும்படி செய்யும். ஆகவே உலகையும் வாழ்க்கையையும் மறுக்க விழைவோர் தீமை செய்யாது தம்மைக் காத்துக் கொள்வாரேயன்றி நன்மை செய்தல், பிறர்க்கு உதவி செய்தல், பிறர் துன்பம் நீக்குதல் ஆகிய அறச் செயல்களில் போதிய அளவு ஈடுபடார் எனச் சுவைட்சர் கருதினார். குறளை நன்கு ஆய்ந்துணர்ந்த சுவைட்சர், பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்தக் குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டு நிலையை வலியுறுத்தும் நூல் என்று கூறினார்.

உலகமும், உயிர்களும், மானிட வாழ்வும் கனவுமல்ல, பொய்யுமல்ல, மாயையுமல்ல. மாறாக அவை மனிதன் உணரக் கூடிய உண்மையே என்னும் உடன்பாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, மனிதனைச் செயற்பாட்டு வாழ்வில் நின்று ஒழுகச் செய்வதற்கு ஊக்கமளித்திடும் நெறியாகவும் திருக்குறளறம் மாட்சிமை கொண்டு விளங்குகிறது.

பொருளும் காமமும் பெரிதாகக் கொண்ட நூலை வெறும் அற நூலென்பது தவறு. திருக்குறள் ஒரு அற நூல் மட்டுமல்லாது கவிச்சுவையோடு கூடிய வாழ்வியல் நூலுமாகும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத பல கருத்துக்களைக் கொண்டு, சமயம், காலம், இடம், இனம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அடிப்படையான உண்மைகளைச் சொல்லுகிறது. அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல் என்பதற்கும் வேறுபாடு உண்டு.

அற நூல்கள் பல சமயச் சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன. திருக்குறள் அறக்கருத்துகளைக் கூறும் வகையில் மட்டும் அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. பொருட்தொகையாலும், முறைவகையாலும் திருக்குறளுக்கு ஈடான நூல் வேறொன்று இல்லை .

இன்றைய காலகட்டத்தின் குடியரசுப் பண்புகளுடன் ஒத்துப்போகின்றவையாக குறட்பாக்கள் இருக்கின்றதையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மனித வாழ்க்கையினை உயர்ந்த வழியில் அமைத்துக் கொள்ளுவதற்கு அடிகோலும் நூல் இது. பொதுவாக உலகில் வழங்கிவரும் எல்லா அற நூல்களும் இறை வழிபாட்டினையும் தத்துவார்த்தமான சிந்தனையுடன் போதனை நுலாக மட்டுமே உள்ளன.  ஆனால் திருக்குறள் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நெறிகள் அனைத்தையும் கூறும் நடைமுறை நூலாகும்.

நன்றி: ‘கற்க கற்பிக்க’: டிசம்பர் 2021

No comments:

Post a Comment